எந்நிலையிலும் வளர

படைத்திட்டான் என்னை திறன்மிக்க பலவானாக
படிப்பில் சிறந்ததாய் பயின்றேன் பலகலை
கற்றறிந்தோர் கூறிய கல்விகளில் தெளிந்தேன்
கடுமையான சோதனையில் கற்றதால் வென்றேன்

நித்தமும் எத்தனை கட்டளை வந்தாலும்
அத்தனையும் அடுக்கடுக்காய் முடித்திட முயன்றேன்
சத்தியம் சோதனை கட்டுப்பாடு கொண்டே
உத்தம நிலையிலே ஒவ்வொன்றாய் கடந்தேன்

பிறவியால் நானொரு ஏழைக்கு பிறந்தேன்
பிற்பாடு அந்நிலை களைந்திடவே உழைத்தேன்
பிறையையொத்த நிலையிலே தினமும் வளர்ந்தேன்
பிறர்மதிக்கும் நிலைக்கு வேகமாய் வந்தேன்

அறிவினால் ஆற்றல் அகத்துக்குள் பெருக
ஆனந்தத்தினாலே அனைவரையும் அரவணைத்துக் கொண்டேன்
இயன்றவரை யாவற்றையும் பகிர்ந்தே கொடுத்தேன்
ஈதல் சிறப்பை அப்போது உணர்ந்தேன்

உள்ளத்து அன்போடே ஒவ்வொருவரின் தேவையை
ஊக்கமுடன் கேட்டே உதவிகள் செய்தேன்
எண்ணையும் எழுத்தையும் எதிலும் கற்றேன்
ஏர்போலவே என்னை முன்னிறுத்தி முயன்றேன்

ஐயம் கொள்வோர் அனைவரும் கேளீர்
ஒவ்வொரு உயர்வுக்கும் கல்வியே முக்கியம்
ஓங்கி முயற்சித்தால் உலகம் உன்வசப்படும்
ஒளவியம் அகற்றுங்கால் அனைத்தும் ஏற்றமே.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Sep-19, 11:02 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : ennilaiyilum valara
பார்வை : 805

மேலே