நாற்காலி்
***********
புல் நுனி
பனித்துளியின் நாற்காலி
*
கடற்கரை
அலையின் நாற்காலி
*
கார்முகில்
மழையின் நாற்காலி
*
மலரும் பூக்கள்
வண்ணத்துப்பூச்சியின் நாற்காலி
*
அந்தி வானம்
இரவின் நாற்காலி
*
இயற்கையின் நாற்காலியில்
அமர்பவை எல்லாம்
எழுந்தோடி விடுகின்றன
மனிதர்கள் மட்டும் அமரும்
நாற்காலிகளை விட்டு
எழுந்திருப்பதில்லை
*
பள்ளிக்கூடத்தில்
ஒரு குழந்தை அமரும்
நாற்காலிக்காக
வாழ்க்கை முழுவதும்
ஓடிக்கொண்டிருக்கிறான் ஏழை.
*
கல்லூரியில்
ஒரு மாணவன் அமரும்
நாற்காலிக்காக
நாயாய் அலைகிறான்
குடும்பத் தலைவன்
*
பதவியில் நாற்காலியில்
ஒரு தலைவன் அமரமட்டும்
வெறும் வாக்குறுதிகள் போதுமானதாகிறது
*
உயர்ந்த நாற்காலியில்
உட்கார்ந்திருப்பவன் வந்தால்
உடைந்த நாற்காலியில்
உட்கார்ந்திருப்பவனும்
எழுந்து நின்றுவிடுகிறான்,
*
நாற்காலிகளின் பெறுமதியைப்
பெரும்பாலும்
பதவிகளே தீர்மானிக்கின்றன
*
சில நாற்காலிகள்
இற்றுப்போகும் போதும்
சில பதவிகள்
உறுதியாகவே இருந்துவிடுகின்றன
*
சில பதவிகள்
இற்றுப்போனதாக இருந்தாலும்
சில நாற்காலிகள்
உறுதியாகவே இருக்கின்றன
*
வீட்டுக்கு ஒருவர் வந்தால்
நாற்காலிப்போட்டு
அமரச் செய்கிறோம்
ஆனால்
வீட்டுக்காரியாக ஒருத்தி வர
நாற்காலி போட்டு
அமர்ந்து விடுகிறோம்
அவள் இதயத்தில்
*
நாற்காலிகளில்
பல வடிவங்களை செய்தாலும்
எப்போதும் ஒரே மாதிரியானவர்களை
அமரச்செய்து விடுகிறோம்.
*
தேர்தல் காலங்களில்
விலைமதிப்புக் கூடியதாகவும்
தேர்தல் முடிந்ததும்
பசை தடவப் பட்டதுமான
நாற்காலிகள்
சலவை இயந்திரத்துள் விழுந்தத்
துணிபோல் வெளுத்துத் தள்ளுகின்றன
அம்ர்ந்தவர்களின் சாயத்தை.
*
கால் வலி என்று
நாற்காலியில் அமரும் எவரும்
"கீச்"சிடும் நாற்காலிக்
கால்களின் வருத்தம்
அறிவதில்லை.
*
பள்ளிக்கூடப் பிள்ளைகள்
அமர்கையில் பரவசம்
கொள்கிற நாற்காலி
பதவிக்காய் வந்தவர்கள்
அமர்கையில் பரிதாபம்
கொள்கிறது.
*
உட்கார்ந்த பின்
எழுந்திருக்க
மனமில்லாதவர்களை
உட்காரவிட்டதை எண்ணி
உட்காராமலே இருக்கிறது நாற்காலி
*
ஒரு நல்லவரைத் தன்னில்
அமர்த்தி விடுவதற்குத்தான்
எல்லா நாற்காலிகளும்
ஆசை வைக்கின்றன
ஆனால்
நல்லவராய் வந்தவர்களும்
வந்தமர்ந்த பின்
அடுத்தவர்களுக்கு
இடம் கொடுக்காமல் போவதால்
நொந்து நொடித்து விடுகின்றன.
*
தங்கள் சுயநலத்திற்காய்
உட்காந்தவர்களைத்
தாங்கித் தாங்கியே
அவமானப்படும் நாற்காலிகளுக்கு
நன்றாகவே தெரியும்
ஒவ்வொரு அதிகாரியினதும்
அந்தரங்கம்.
*
அணிந்துவரும் அதிகார
ஆடையை (கோட்டு) தங்கள்
மனசாட்சியாய் தன்னில்
கலட்டிப் போட்டுவிட்டு அமர்ந்து
விலைபோனவர்களின் பட்டியல்
நாற்காலியே அறியும்.
*
நம்மில் எல்லோருக்குள்ளும்
இருக்கும் நாற்காலி கனவுபோல்
நாற்காலிக்கும் நம்மை
அமரவிடக் கூடாதெனும்
கனவிருக்கலாம்.
*
கனவுகள் நிறைவேறாததாலோ
என்னவோ
அமர இடமிருந்தும்
நின்றுகொண்டு இருக்கின்றன அவை
*
மெய்யன் நடராஜ் .