செவப்பி - அத்தியாயம் 3

செவப்பி 3
==========

சரி.. இப்ப ரகுவோட வீட்டுக்கு வருவோம்..

செவப்பிங்கற பேரைக் கேட்டதுமே அதிர்ந்து போயிருந்தாங்க பார்வதிய‌ம்மா..

திரும்பத் திரும்ப எதுக்காக என்னதுனு ரகுகிட்ட‌ கேட்டுப் பார்த்தும், அவன் ஒரு தெளிவான பதிலே தரல..

பிறந்தநாள் கொண்டாட வந்திருந்த ரகுவோட அக்கா ஷோபா குடும்பமும், அவங்க‌ ஊருக்கு கிளம்பிப் போயிட்டாங்க..

ரூபா வழக்கம் போல காலேஜுக்கு போயிட்டு வந்துட்டு இருக்கறா..

இன்னைக்கு நைட்டு மறுபடியும் சென்னைக்கு கிளம்புகிறான் ரகு.. லீவு முடிஞ்சு போச்சு..

துணிமணி எல்லாம் எடுத்து வச்சுட்டு கெளம்பிக்கிட்டே இருந்தான்..

பின்னால போயி நின்னா பார்வதியம்மா...

"ரகு...!"

"எதையும் மறந்துடாம‌ எடுத்து வச்சுக்கப்பா.. கரெக்டா சென்னையில பஸ்சை விட்டு இறங்கினவுடனேத்தான் சில விஷயம்.. அடடா.. மறந்துட்டேமேனு உனக்கு போன டைம் மாதிரி ஞாபகம் வரப் போகுது.. கவனமா கெளம்பு.."

"சரிமா... இன்னும் கெளம்பறதுக்கு பத்து நிமிஷம் இருக்கு.. நீ போயி தோசை ஊத்து.. நான் சாப்பிட்டுட்டு கெளம்புறேன்.."

"சரிப்பா..", எனச் சொல்லிச் சென்று, தோசை ஊற்றி சாம்பார் சட்னியுடன் எடுத்து கொண்டு வந்த பார்வதியம்மா, ரகுவை பார்த்துக் கொண்டே நிற்க,

"அம்மா.. என்னம்மா பார்க்கற..? அப்படி வை.. நான் சாப்பிடுகிறேன்"

"அப்ப கடைசி வரைக்கும் செவப்பி அடிச்ச காரணத்த நீ சொல்ல மாட்ட"

சாப்பிடப் போனவன் திரும்பி பார்வதிய‌ம்மாவைப் பார்த்தான்.

"இப்ப என்ன சாப்பிடச் சொல்றியா..? இல்ல வேணாம்னு சொல்றியா!?"

"நான் எப்பப்பா உன்னை சாப்பிட வேணாம்னு சொன்னேன்?"

"அப்ப பக்கத்துல வந்து நிற்காத.. அடுப்படிக்குப் போ..", என சூடான வார்த்தைகளைக் கக்க,

கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது பார்வதியம்மாவிற்கு, சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்தபடியே அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

ரூபா போனில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு, எதையோ நோண்டி கொண்டிருந்தாள். இவர்களின் பேச்சை கவனித்தது மாதிரியே தெரியவில்லை.

இப்படி எந்த விஷயமும் நடக்காத மாதிரியே, பையை மாட்டிக்கொண்டு, 'பாய்' சொல்லிவிட்டுக் கிளம்பினான் ரகு.

குழப்பத்தின் உச்சத்தில் இருந்தாள் பார்வதியம்மா..

'இப்படி மறைக்க வேண்டிய விஷயம்னா, அப்படி என்னவாத்தான் இருக்கும்.. இத‌ தெரிஞ்சுக்க என்னதான் வழி"?, என யோசித்துக் கொண்டே இருந்தவள் தூங்கிப் போயிருந்தாள்.

"வாம்மா.. வா.. உனக்கு என்ன வேணுமோ கேளு..", என நாக்கைத் துரித்துக்கொண்டு சாமி ஆடிக்கொண்டிருந்தாள் செவப்பி.

அவளுக்கு முன்னே ஊரே கையை கூப்பிடவாறு நின்று கொண்டிருந்தது.

ஒவ்வொருவராகச் சென்று, தங்களின் விடை தெரியாத கேள்விகளை அவளிடம் கூறி, திருப்தியான‌ ஒரு பதிலை வாங்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர்.

திடீரென செவப்பியின் ஆவேசம் அதிகமானது.

"என்ன... நீ எங்கிட்ட வரமாட்டியா..? நானா உன் பேரைச் சொல்லி கூப்பிட்டாத்தான் வருவியா..? நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா? இப்ப எதுக்கு சேலைத் தலைப்பால முகத்த மூடிக்கிட்டு நிக்கற... தைரியமா முன்னால வா... உன் கேள்வியக் கேளு.. ம்.. வாஆஆஆ..."

"ஏ ய‌ம்மா"

"ஏ ய‌ம்மா"

"யே.. பார்வதியம்மாஆஆஆஆ...",வென ஊரே அதிரும் படி அலறினாள் செவப்பி..

"இதோ.. வர்றேம்மா..", என்று காட்டுக்கத்து கத்தியபடி தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்தாள் பார்வதிய‌ம்மா... அருகே பேயரஞ்ச மாதிரி பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தாள் ரூபா..

"அம்மா.....", என்று கத்தியபடி தூக்கக் கலக்கத்துடன், தன்னை பயமுறுத்தி எழுப்பி விட்ட அம்மாவையே கோவமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ரூபா..

"சாரிடி... ஏதோ நெனச்சுக்கிட்டே படுத்திருந்தேனா.. அப்படியே கனவு வந்துடுச்சு போல.. கனவுல வந்த செவ‌ப்பி என் பேர‌ச் சொல்லி கத்தவும் நானும் கத்திட்டேன்.. சரி படு.. நாளைக்கு காலேஜ் போகனுமில்ல..."

"போம்மா.. ரொம்ப டயர்டா தூங்கிட்டிருந்தேன்.. அந்தத் தூக்கமெல்லாம் போயே போச்சு. இப்ப மறுபடியும் அடுத்த ரவுண்டு தூங்கப் போறேன்... திரும்பவும் கனவுல வெள்ளச்சி வந்தா, கருப்பி வந்தா, அது இதுனு சொல்லி எழுப்பி விட்றாத... ப்ளீஸ்", எனச் சொல்லி தூங்கிப் போனாள்.

ஒரு தெளிவான பதில் கிடைத்தது போல் உணர்ந்தாள் பார்வதியம்மா... அப்ப என் கேள்விக்கான விடையை நேரா செவப்பிகிட்ட போயி கேட்டு தெரிஞ்சிக்க வேண்டியதுதான்.. இது தான் சரி.. நாளைக்கு காலையிலேயே செவப்பி வீட்டுக்குப் போயிட வேண்டியது தான்", என யோசித்தவாரு ஒரு நிம்மதிப் பேருமூச்சுடன் கண்கள் சொக்கினாள் பார்வதிய‌ம்மா.

அவளுக்கு காலையில் காத்திருக்கிறது ஒரு பேரதிர்ச்சி..

(அதிர்ச்சியுடன் தொடரும்)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (15-Sep-19, 2:11 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 147

மேலே