பெருந்தகை பெருக்கி எதிர்பணியச் செய்யும் வறுமை - வறுமையின் பெருமை, தருமதீபிகை 456
நேரிசை வெண்பா
அருந்தல் அகற்றி அருந்தவம் நல்கிப்
பெருந்தகை யாவும் பெருக்கி - இருந்தலம்
எல்லாம் வணங்கி எதிர்பணியச் செய்யுமே
ஒல்லா வறுமை உணர். 456
- வறுமையின் பெருமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
பொறி நுகர்வுகளை நீக்கி அரிய தவங்களை ஆக்கிப் பெரிய தகைமைகளை விளைத்து உலகம் முழுவதும் தொழுது வணங்கும்படி வறுமை செய்தருளும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், இன்மை தரும் நன்மை கூறுகின்றது.
வறுமை வாழ்வில் தேக போகங்கள் குறைகின்றன; குறையவே அது மறுமை நோக்கிய ஒரு தவசி வாழ்வாய் மருவி வருகின்றது. திருந்திய பண்புகள் அதனால் விளைந்து வருகினறன.
அருந்தல் – உண்ணுதல், பசியும் காமமும் சீவர்களுக்கு இயல்பாய் நேர்த்துள்ளன. அவை அருந்தல் பொருந்தல்களால் முறையே அகன்று வருகின்றன. இந்த இரண்டையும் துறந்த போது அது சிறந்த தவமாய்த் திரண்டு திகழ்கின்றது. அரிய விரத சீலங்களையுடையது அருந்தவம் என அமைந்தது.
பட்டினி கிடந்து உடம்பை வாட்டி ஒருமையுடன் ஆன்ம சிந்தனை செய்து வருதலால் தவம் மேன்மையான உய்தி நிலையமாய் மேவி மிளிர்கின்றது.
'உண்ணாது நோற்பார் பெரியர். 160 பொறையுடைமை
தவத்தின் நிலைமையையும், அதனைச் செய்பவரது தலைமையையும் இது குறித்துள்ளது. குறிப்பைக் கூர்ந்து நோக்கி நோன்பின் உறுப்பையும் சிறப்பையும் ஓர்ந்து கொள்ளுக.
1547 ஓவா திரண்டுவவும் அட்டமியும் பட்டினிவிட்(டு)
ஒழுக்கங் காத்த தாவாத் தவம். 136, கேமசரியார் இலம்பகம், சீவக சிந்தாமணி
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
பொருளொடு போகம் புணர்தல் உறினும்
அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின்
இருளில் கதிச்சென்(று) இனிஇவண் வாரீர்
தெருளல் உறினும் தெருண்மின் அதுவே. 24 வளையாபதி
நேரிசை வெண்பா
உடம்புங் கிளையும் பொருளும் பிறவும்
தொடர்ந்துபின் செல்லாமை கண்டும் - அடங்கித்
தவத்தோடு தானம் புரியாது வாழ்வார்
அவத்தம் கழிகின்ற நாள். 129 அறநெறிச்சாரம்
தவத்தின் உருவும் உரிமையும் இவற்றால் உணரலாகும்.
உயிர்க்கினிய தெய்வ சஞ்சீவியாய்த் தவம் அமைந்துள்ளமையால் அதனை எய்திய அளவு உய்தி நலங்கள் உளவாகின்றன.
அரிய தவநெறியில் மருவவுரிய பெரிய விரதசீலத்தை வறுமை இயல்பாக உதவியருளுதலால் அதனோடு இதற்குள்ள உறவுரிமை தெரிய வந்தது.
தவம் என்பது என்ன? பசியை அடக்கிப் பட்டினியிருப்பது. அந்தயிருப்பை வறுமை உரிமையாக உதவி வருகின்றது. உண்ண உணவில்லாத வறியநிலை அரிய தவ வாழ்வாக மாறிப் பெரிய மகிமையை விளைத்தருள்கின்றது. உபவாசம் தவவாசமாதலால் அதன் கண் வறுமை வாசமாயுள்ளது.
’அருந்தல் அகற்றி அருந்தவம் நல்கி’ என்றது வறுமை வழங்கிவரும் வரவு காண வந்தது. உயர்ந்த தவநிலையை உதவி வருதலால் நல்குரவை மேலோர் நலமாகக் கருதிக் கொள்ளுகின்றனர்.
செல்வம் நிறைய ஆசை நிறைகின்றது; அதனால் பாசபந்தங்கள் வளர்ந்து வருகின்றன, ஈசனது சம்பந்தம் இழந்து போய் அது நீசம் என நேர்ந்தது.
வறுமை வர மறுமையுணர்வு வருகின்றது; உரிமை நிலை தெரிந்து பிறவி தீர்ந்து பேரின்பம் பெற நேர்கின்றனர். ஆகவே அது ஆருயிர் அமிர்தமாய் நின்றது.
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
தழுவுறு கிளைஞர் தந்தை
..தாய்முதல் எவரும் நாளில்
கழிவது கண்டும் கண்டும்
..கண்டிலார் போல வாழ்வர்;
ஒழிவற உள்ளத் துள்ளே
..உறைபரஞ் சுடரை ஓரார்;
விழைவென நின்ற துன்ப
..வித்தினை விளைப்பர் அம்மா! 1
விடங்கலுழ் எயிற்றுப் பேழ்வாய்
..வெயில்மணிச் சூட்டு நாகப்
படங்கெழு பாவை ஞாலப்
..பாயலொன்(று) உண்டு; செய்ய
குடங்கைமெல் லணைஉண்(டு); எங்கும்
..குலவுவற் கலைகள் உண்டால்
அடங்கலா ஆசை வேர்மற்(று)
..அரிந்தவர்க்(கு) இலதென் அம்மா? 2
திருநதித் துறைகள் எல்லாம்
..தீம்புனல் வறந்த வேயோ?
விரிகடல் அமுதம் ஊறும்
..விழுச்சுவைக் கனிய வாய
மரனெலாம் மாண்ட வேயோ?
..மாநிதிச் செருக்கி னார்கண்
குருடுபட்ட வர்போல் என்னோ
..குறையிரந்(து) உழல்கின் றாரால். 3 பாகவதம் 2-1
உலக நிலை தெளிந்து, ஆசை ஒழிந்து, ஈசனது உரிமையை அடையும் முறைகளை இப்பாசுரங்கள் போதித்துள்ளன. நல்குரவு நேர்ந்தால் செல்வர்பின் இரந்து நில்லாதே; உனது மனை வாழ்வைப் புனிதமான தவ வாழ்வாக மாற்றி இனிது பேணி இன்பம் பெறுக என ஒரு முனிவர் இப்படி தமது அன்பனுக்கு உணர்த்தியிருக்கிறார். வறுமையில் பெருமைகள் பல விளைகின்றன.
துறவு, தவம், ஞானம் என்பன உலகப் பொருள்களை ஒருவி நிற்கின்றன; அந்நிலையை வறுமையும் மருவியிருத்தலால் மறுமை நலங்களை இது உரிமையாய் அருளி உய்தி புரிந்து வருகின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்.