உள்ள அவாஒன்று ஒழிந்தால் இறையருள் எய்தும் - நசை, தருமதீபிகை 447

நேரிசை வெண்பா

உள்ள அவாஒன்(று) ஒழிந்தால் உலகமெலாம்
கொள்ள அவாவும் குணத்தனாய்த் - தள்ளரிய
இன்பம் மிகப்பெற்(று) இறையருளும் எய்தியுயர்
முன்பனாய் நிற்பன் முதல். 447

- நசை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன் உள்ளத்தில் ஆசை ஒன்று ஒழியுமானல் அந்த மனிதனை உலகமெல்லாம் விழைந்து கொண்டாடும்; அரிய பல இன்ப நலங்களை அவன் எளிதே அடைகின்றான்; பரமனுடைய பரிபூரண கிருபையை முழுதும் பெற்று விழுமிய நிலையில் யாண்டும் முதன்மையுற்று. நிற்கின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், அவா ஒழியின் அதிசய நலங்கள் விளையும் என்கின்றது.

உள்ளத்தில் உள்ள ஆசையை ‘உள்ள அவா’ என்றது. உயிரில் வாசனையாய்த் தொடர்ந்து வருகின்ற நசை என இரு பொருள் மருவி நின்றது. ஆசை வாய்ப்பட்ட உள்ளம் பேய் வாய்ப்பட்ட பிள்ளையாய், நாய் வாய்ப்பட்ட கிள்ளையாய் நைந்து அழிகின்றது.

காற்றில் அகப்பட்ட பஞ்சு போல் நசையின் வசப்பட்ட நெஞ்சம் எவ்வழியும் சஞ்சலமே கொண்டு தவித்து நிற்றலால் திண்மையும் நன்மையும் இழந்து எண்மையும் புன்மையும் அடைந்து இழிந்து படுகின்றது. இழி நசை மிக அழிதுயர்கள் மிகுகின்றன.

அறிவை நிலை குலைத்து அவலம் ஆக்கி விடுதலால் ஆசை கொடிய வெறி, நெடிய புலை என மேலோர் நிந்திக்க நேர்ந்தனர்.

ஆசை நீங்கிய மனிதன் நீசம் நீங்கிய புனிதனாய் யாண்டும் தேசு மிகுந்து திகழ்கின்றான். அது நீங்காதவன் நிலை குலைந்து இழிகின்றான்.

நேரிசை வெண்பா

அவாவறுக்க லுற்றான் றளரானவ் வைந்தின்
அவாவறுப்பி னாற்ற வமையும் - அவாவறான்
ஆகு மவனாயி னைங்களிற்றி னாட்டுண்டு
போகும் புழையுட் புலந்து. 11 ஏலாதி

அவாவை அறுத்தவன் யாதும் தளராமல் மேலான நிலையில் வளர்கின்றான். அறாதவன் ஐம்புலன்களாகிய யானைகளால் மிதி பட்டு இழிகதிக்குட் புகுகின்றான் என இது காட்டியுளது. புலன் நசை புலையாய் இழித்தலால் அதனை ஒழித்தவன் நிலையாய் உயர்ந்து நிறை சுகம் பெறுகின்றான்.

நேரிசை வெண்பா

தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத் தானடங்கின்
பின்னைத்தான் எய்தா நலனில்லை - தன்னைக்
குடிகெடுக்குந் தீநெஞ்சின் குற்றவேல் செய்தல்
பிடிபடுக்கப் பட்ட களிறு. 141 அறநெறிச்சாரம்

ஆசையை அடக்கி மனச்சாட்சியுடன் அமைதியாய் வாழின் அரிய பல நலங்கள் எளிதே உளவாம்; அவ்வாறின்றி மனம் போனபடி இச்சையில் உழந்துபடின் பிடியை நச்சிய மதயானை போல் கொடிய துயரங்களை அடைய நேரும் என முனைப்பாடியார் இங்ஙனம் நினைப்பூட்டியிருக்கிறார். ஆசை பற்றிய அளவு நீசம் பற்றுகின்றது; அது ஒழிந்த அளவு உயர்கதி வருகின்றது.

’உள்ள அவா. ஒழியின் உலகம் எலாம் அவாவும்’ இச்சை எளிதில் ஒழியாது; பல சன்மங்களிலும் தொடர்ந்து படர்ந்து வந்திருத்தலால் ஆசை நெடிது நீண்டுள்ளது. அதன் வசமாய் இழிந்தே யாவரும் அலமந்து உழந்து வருகின்றனர். இந்தக் கொடிய பிடியிலிருந்து விலகி எழுவது அரிய அதிசயமாதலால் அங்ஙனம் எழுந்தவர் பெரியவர் ஆகின்றார். ஆகவே உலகம் எல்லாம் அவரை உவந்து போற்றி வியந்து கொண்டாடுகின்றது. இழிவு ஒழியவே உயர்வு வெளி ஆகின்றது.

நேரிசை வெண்பா

ஆசைக்(கு) அடியான் அகிலலோ கத்தினுக்கும்
ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை
தனையடிமை கொண்டவனே தப்பா(து) உலகம்
தனையடிமை கொண்டவனே தான். 12 நீதிவெண்பா

அனுபவ சாரமான உண்மை இதில் இனிமையாய் வெளி வந்துள்ளது. இந்தப் பாடல் நாளும் ஒருமுறை சிந்தித்து வரவுரியது. உயிர் மாசு நீங்க உயர் தேசு ஓங்குகின்றது.

ஆசைக்கு அடியவன் அகில உலகங்களுக்கும் அடிமை ஆகின்றான் ஆசையைத் தனக்கு அடிமை ஆக்கிக் கொண்டவனுக்கு உலகங்கள் யாவும் அடிமைகளாய் நிற்கின்றன என்னும் இதில் அரிய மானச மருமங்கள் மருவியுள்ளன.

ஆண்டவனாய் உயர்ந்து வருதலும், அடியவனாய் இழிந்து போதலும் மனிதன் உள்ளேயே இனிது மருவி யிருக்கின்றன.

நசையுடையவன் நாயாயிழிந்து பேயாய் அலைகின்றான். அஃது இல்லாதவன் சிங்கமாயுயர்த்து செய சீலங்களைக் காண்கின்றான். இழிவில் விழாமல் தெளிவு கொள்ள வேண்டும். ஆசை நீங்கிய பொழுதே அதிசய இன்பங்கள் ஓங்குகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Sep-19, 11:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே