ஒரு வாய் சோறூ
ஒரு வாய் சோறு
பகல் ! சூரியன் உச்சியில் இருந்தான். அன்று சந்தை ! கூட்டமாய் இருந்தது. அது நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல் நடுத்தரமாய் இருக்கும் ஊர். அதனால் நகரத்தாரும், கிராமத்தாரும் கலந்து காணப்பட்டனர். ஆடு மாடுகள் கூட விற்பனைக்கு வந்ததால் அதை வாங்க வருவோரும் விற்க வருவோரும் கூட்டம் கூட்டமாய் காணப்பட்டனர். காய்கறிக்கடைகள் ஒரு பக்கமும் கலர் கலர் துணிகள் ஒரு பக்கமும், தட்டு முட்டு பாத்திரங்கள் ஒரு பக்கமும், குழந்தைகள் வாங்கும் விளையாட்டு பொருட்கள் ஒரு பக்கமும், ஒரு சந்தைக்குரிய எல்லா அம்சங்களும் அங்கு காணப்பட்டன.
கடை வீதியில் உரக்கடையில் உட்கார்ந்திருந்த பெருமாள்சாமிக்கு இந்த பரபரப்பு ஒன்றுமே செய்யவில்லை. அவருடைய சிந்தனை அவரது மகளைப்பற்றியே இருந்தது. பெண் பார்த்து விட்டு போனவர்கள் இதுவரை பதிலேதும் சொல்லாமல் இருக்கிறார்கள். இது வரை நான்கைந்து வரன்கள் வந்தும் அனைத்தும் தட்டிப்போய், இது ஒன்றுதான் தகைந்து வந்து. பெண் பார்ப்பது வரை வந்துள்ளது. ஆயிற்று இதோடு ஒரு வாரம் ஆகிறது. இவர் மனம் அடித்துக்கொண்டது. இதுவாவது தகையணுமே. இந்த எண்ணத்திலேயே அவர் இருந்ததினால் அவர் கவனம் இந்த பரபரப்பால் பாதிக்கப்படவில்லை. நல்ல வேளை அவர் கடையிலும் உரம் வாங்க ஒருவரும் வரவில்லை.
அறுபதிலிருந்து எழுவது வயது மதிக்கத்தகுந்த ஒருவர் மெதுவாக தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார். பெருமாள்சாமி முதலில் பார்த்து விட்டு குடித்துவிட்டுத்தான் நடந்து வருவதாக அனுமானித்திருந்தார். ஆனால் வந்தவர் இவர் கடை அருகில் வந்தவுடன் மேலும் நடக்க முடியாமல் கடையின் படித்திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டார். உடனே எழுந்து அங்கிருந்து அவரை விரட்டப்போனவர் அவர் முகத்தை பார்த்தவுடன் குடித்திருக்க வாய்ப்பில்லை என் புரிந்து கொண்டு உள்ளே வந்து பானையிலிருந்து சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தந்தார்.
பெரியவர் அதை வாங்கி அண்ணாந்து குடிக்கையில் தண்ணீர் இரு கடைவாயிலிருந்து வழிந்ததை கூட பொருட்படுத்தாதை பார்த்த பெருமாள்சாமி அவரின் நிலையை அறிந்து கொண்டார். என்ன ஓய் ! ஏதாவது சாப்பிட்டீரா? கேட்ட கேள்விக்கு அவரின் தலையாட்டல் இவருக்கு புரியவில்லை.
இருந்தாலும் பக்கத்து கடை காசிம் பாய்க்கு ஒரு சத்தம் கொடுத்தார். ஓய் காசிம், உம்ம கடை பையனை ராக்கியப்பன் கடையிலிருந்து நான் சொன்னதா சொல்லி ஒரு சாப்பாடு வாங்கிட்டு வரச்சொல்லும். காசிம் பாய் அங்கிருந்தே என்ன ஓய் வீட்டுல சண்டை போட்டுட்டு வந்திட்டீரா? ராக்கியப்பன் கடைக்கு போறீரு? கேட்ட காசிம்பாய்க்கு எனக்கில்லை ஓய், விருந்தாளி ஒருத்தர் வந்த்திருக்காக, பதில் சொல்ல பாய் கடைப்பையனை ஏதோ சொல்லி அனுப்புவது காதில் கேட்டது.
விரித்து வைத்த சாப்பாட்டை பர பரவென வாயில் போடுவதையும், விக்கல் வருவதையும் பொருட்படுத்தாமல், கவளம் கவளமாக வாயில் தள்ளுவதையும் பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தனர் பெருமாள்சாமியும் காசிம்பாய் கடைப்பையனும். மனுசனுக்கு பசி வந்தா பத்தும் பறந்து போயிடும்கறது சரியாகத்தானிருக்கு. தனக்குள் முனங்கிக்கொண்டு மெதுவாய் சாப்பிடும் ஓய் ! எத்த்னை அவசரமானாலும் நிதானம் தவறுனா எல்லாம் தவறிடும். பெரியவர் எதுவும் பேசாமல் பையன் கொடுத்த சொம்பிலிருந்து தண்ணீரை குடித்து விட்டு வெளியே வந்து கை கழுவினார். பின் உள்ளே வந்து கை எடுத்து கும்பிட்டார். இப்படி வந்து உட்காரும் ஓய் !. அங்கிருந்த பெஞ்சை காட்ட பெரியவர் மறுத்து ஒரு ஓரமாய் உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்தவாறு சற்று நேரத்தில் கண்ணயர்ந்து விட்டார்.
மாலை ஆகி விட்டது. நான்கைந்து பேர் கொண்ட கூட்டம் யாரையோ தேடிக்கொண்டே வந்து கொண்டிருந்தது. இவர் கடைக்கு எதிரில் வந்தவர்கள் கடைக்குள் பெரியவர் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்தவர்கள் அப்பச்சி இங்கிருக்கிறார் என்று சந்தோச கூச்சலிட்டார்கள். பெருமாள்சாமி அவர்களை உள்ளே வரச்சொன்னார். அவர்கள் இல்லீங்க நாங்க இங்கேயே நிக்கிறோம், என்று தயங்கி வெளியே நின்று கொண்டனர். ஒரு இளைஞன் முன்னே வந்து ஐயா நாங்க குப்பிச்சியூருகாரங்க, ஒரு சோலியா இங்க வந்தோம். அப்பச்சிய கார்ல உட்கார வச்சிட்டு நாங்க கடை வீதி போய்ட்டு வரதுக்குள்ள அப்பச்சி இறங்கி எங்கேயோ போயிட்டாரு. மதியத்துல இருந்து தேடிகிட்டு இருக்கோம். அப்பச்சிக்கு கொஞ்ச நாளா ஞாப்க மறதி அதிகமாயிட்டுது. நாங்க தேடாத இடமில்லை. எப்படியோ கடைசியில கண்டுபிடிச்சிட்டோம். குரலில் மகிழ்ச்சி தென்பட்டது..
சத்தம் கேட்டதாலே என்னவோ பெரியவர் மெல்ல அசைந்து கொடுக்க அந்த இளைஞன் மெல்ல அருகில் சென்று அப்பச்சி என்று அழைத்தான்.கண் விழித்து பார்த்த அவர் இவனை கண்டவுடன் மகிழ்ச்சியாக கை கொடுக்க அப்படியே அவரை எழுப்பி மெல்ல வெளியே கூட்டி வந்து காத்திருந்த காரில் ஏற்றினான். அனைவரும் காரில் ஏற அந்த இளைஞன் கடைக்கு அருகில் வந்து ஐயா ரொம்ப நன்றி1 உங்க உதவிய மறக்கவே மாட்டோம். கை எடுத்து கும்பிட்டான்.
பெருமாள்சாமி கை எடுத்து கும்பிட்டு இதை எல்லாம் பெரிசு பண்ணி பேசாதீங்க. நீங்க எப்ப வேணா வரலாம் சொல்லி விடை கொடுத்தார்.
நான்கைந்து நாட்கள் ஓடிவிட்டன. பெருமாள்சாமியின் பையன் கடைக்கு வந்து அக்காவை அன்னைக்கு பெண் பார்த்து விட்டு போனவங்க வந்திருக்காங்க, அம்மா உங்களை வர்ச்சொல்லுச்சு. மனசு பதைபதைப்புடன் வீட்டுக்கு விரைந்தார். அங்கு நான்கைந்து பெரியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மனைவி அனைவருக்கும் காப்பி கொடுத்துக்கொண்டிருந்தாள். இவரை கண்டவுடன் அனைவரும் எழுந்து வணக்கம் சொல்ல இவர் கூச்சப்பட்டு நீங்க உட்காருங்க என்று அனவரையும் உடகார வைத்தார்.
வந்தவர்களில் மூத்தவர் எழுந்திருந்து உங்க பொண்ணை எங்க பையனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்க பரிபூரண சம்மதம் என்று அவர் கையை பிடித்துக்கொண்டார். உணர்ச்சிவசப்பட்டு கண்ணில் நீர் வர அதை மேல் துண்டால் துடைத்துக்கொண்டார் பெருமாள்சாமி.
கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து வந்து என்னை தெரியுதா? என்று கேட்க, இவரை எங்கோ பார்த்திருப்பதாக ஞாபகம் வர அட....ஞாபகம் வந்து விட்டது. அன்று தொலைந்து போய் கடைக்கு வந்த அந்த பெரியவரை கூப்பிட வந்தவர்களில் இவர் ஒருவர்.
. நன்றியால் கை கூப்பினார் பெருமாள்சாமி !.