செவப்பி அத்தியாயம் 4
செவப்பி அத்தியாயம் 4
செவப்பி பூசாரியின் வீட்டுச் செல்லப்பிள்ளை.
செவப்பி அவர்கள் வீட்டுக்கு வந்த பிறகு, மிக நன்றாகவே வாழ்கிறது பூசாரியின் குடும்பம். மரியாதையும் கூடி இருக்கிறது.
செவப்பியின் இந்த தாக்குதல்கள், அவளுக்கு ஊருக்குள்ளே சில எதிரிகளை உருவாக்கியிருந்தது.
அவர்களும் செவப்பிக்கு ஏதாவது பண்ணியே தீர வேண்டும் என்ற வெறியுடன் கங்கணம் கட்டிக்கொண்டு அழைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த லிஸ்டில் புதிதாகச் சேர்ந்து விட்டார் பண்ணியார்.
இந்த மாதிரி தாக்குதலுக்கு அப்புறமா.. யாரும் தைரியமா வந்து செவப்பிகிட்ட என்ன காரணம்? எதுக்காக அடிச்சே? அப்படின்னு கேட்டதே இல்லை.. அது ஒரு தெய்வ குத்தம் ஆகிடும் அப்படின்னு நினைச்சு விட்டிருவாங்க..
ஆனாலும் அது என்ன விஷயத்துக்காக நடந்த தாக்குதல்னு கொஞ்ச நாள்ல ஊர் முழுக்க கண்டிப்பாக தெரிய வந்திரும்..
பண்ணையார் கோபக்காரர் தான்.. ஆனா நேரடியா எந்த விஷயத்திலையும் இறங்க விரும்பல.. அதுக்கு தோதான நேரமும் காலமும் அமையும்னு, மீனுக்குக்காக காத்து கெடக்கிற கொக்கு மாதிரி காத்திருக்க ஆரம்பிச்சாரு..
காலையிலேயே எந்திரிச்சு.. ரூபாவ காலேஜிக்கு அனுப்பி விட்டு கிளம்ப ஆரம்பிச்சா பத்மாவதியம்மா..
'இன்னைக்கு செவப்பிய பார்த்து.. இந்த விஷயத்தை பத்தி கேட்டு தெரிஞ்சுக்காம விடக்கூடாது'
'ரகு ரொம்ப நல்ல பையன், எந்த கெட்ட காரியத்துக்கு போக மாட்டான்.. என்ன காரணத்துக்காக செவப்பி அடிக்கணும்? ரகுவ பத்தி ஊர்பூரா தெரியும். எல்லாரும் அவன் கிட்ட அவ்ளோ அன்பா பேசுவாங்க.
'வாப்பா ரகு, இப்பத்தான் வந்தியா? வேலையெல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு?'னு அவன் லீவுக்கு வரும் போதெல்லாம் விசாரிக்காத ஆளே இல்லை ஊருக்குள்ள...
ஊர்ல யாருக்காவது ஏதாவது உதவி தேவைனா,முதல் ஆளா போயி நிப்பான்..
ஊரு புல்லா சின்ன வயசுல, அவன் எங்க போனாலும், அவங்க வீட்ல எல்லாம் கூப்பிட்டு, சாப்பாடு போட்டு தான் அனுப்புவாங்க. ஆனா அதை அவன், என்கிட்ட சொல்லாம வீட்டுக்கு வந்தும் ஒரு கட்டு கட்டுவான். அதனாலேயே அப்ப அவன் நல்லா குண்டா இருப்பான்.
'பெருசா வளர்ந்தப்புறம் தான், ஜிம்மு அது இதுன்னு போயி நல்ல ஒல்லியா கட்டுக்கோப்பா ஆயிட்டான். ம்.. அவன் என்ன தான் பண்ணி இருப்பான்?', என யோசித்துக் கொண்டே பூசாரியின் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் பத்மாவதியம்மா..
அவள் நடக்க நடக்க எதிர்பட்ட ஊரின் மனிதர்கள் எல்லாம் வெளிரிப் போய் இருப்பது போலவும், ஊரே ஒரு மயானக் கலையை அடைந்தது போலவும் அவளுக்குப் பட்டது.
அதோ.. அங்கு தூரத்தில் தான் பூசாரியின் வீடு. பக்கத்தில் வர வர, அங்கே மக்கள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
'என்ன இது? ஊரே இங்க கெடக்கு.., என யோசித்த பத்மாவதியம்மாவின் செவியை பெரும் அழுகுரல் எட்டியது.
பக்கத்துல இடித்துக் கொண்டு வேக வேகமாய் நடந்து போன பாட்டியைக் கேட்டாள்.
"எ.. என்னாச்சு? ஏன் இங்க ஊரு சனம் பூரா வந்திருக்கு?"
"என்னம்மா.. உனக்கு விஷயமே தெரியாதா? செவப்பி செத்துப் போயிட்டா!!!"
அப்படியே உறைந்து போனாள் பத்மாவதியம்மா..
(திகில் தொடரும்)