கனிஸ் லுபஸ்
நரேந்திரன் நிஜமான மனிதன்.
அப்படியென்றால் அவன் இன்று எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக்கிறான் என்று அர்த்தம்.
அவனை நிபுணன் என்றார்கள்.
முக்கியமாக பொருளியல் நிபுணன்.
அதி முக்கியமாக தன் கையில் இருந்து ஐந்து பைசாவை நிமிர்த்திக்காட்டி ஆயிரங்களை உண்டாக்கும் சாமர்த்தியம் இருந்தது.
இல்லை. கற்றுக்கொண்டான். பரிமாணம்.
கால் வயிற்று கஞ்சியை கால் கால் கால் காலாக பிரித்து பிரித்து விதம் விதமான பெயர் சூட்டி அரிய அமுதாக்கி ஊட்டி விட்டு பெயர் சம்பாதித்து அதையும் பணமாக்கும் பிஸ்னெஸ் கோலியாத்.
மனசாட்சி அவனிடம் ஒரு முறை உனக்கு வெட்கமாக, குற்றமாக இல்லையா என்று கேட்டபோது வெட்கம் கொள்ள வேண்டியது இந்த ராஸ்கல் சொசைட்டி என்றான்.
அவனுக்கு அது நியாயம்.
கல்லூரியில் அவன் படித்தபோது சக நண்பர்கள் சக நண்பிகளின் சைஸ் பற்றி பேசும்போதும் ஒதுங்கி லைப்ரரி எப்போது திறக்கும் என்று வாசலில் இன்னொரு படிக்கட்டாய் கிடந்தவன்.
படிக்க படிக்க தன் வாசல்கள் திறந்து விடும் என்ற நம்பிக்கையில் படித்து கொண்டே இருந்த ஒரு அப்பாவி.
அப்போது அவனை புக்வார்ம் என்றார்கள். பின்னர் கிறுக்கன் என்றார்கள்.
காலங்கள் மாறின.
நரேனுடன் படித்து அரியருக்கு மேல் அரியர் வைத்த மடையர்கள் வாழ்வில் நிறைய மங்களம் நிகழ்ந்தது.
அவர்கள் பதவியில் இருந்தார்கள். வாகனங்கள் வாங்கினார்கள். வெள்ளை நிற மனைவியும் பின் வெள்ளை நிற மனைவியர்களுமாய் வாழ்ந்தனர்.
நரேன் நூலகங்களில் வாழ்ந்து வந்தான். அங்கிருக்கும் ஒட்டடை பூச்சிகள் குஞ்சும் குளுவானுமாய் ஈக்கள் கொசுக்கள் சாப்பிட்டு வம்ச விருத்தியை பெருக்கி கொண்டே போன போதுதான் நரேன்
அடிபட்ட வலி உணர்ந்தான்.
அடிபட்ட புலி விடாது.
புலி திட்டம் வகுத்தது. புலிக்கு சமூக உளவியல் அத்துபடி. புலி சக்தி மிகுந்தது. புலி காத்திருந்தது. பாய நேரம் வந்தது.
அவன் படித்தது கொண்டே பாழ் அடைந்த சமூகத்தை சாப்பிட ஆரம்பித்தான்.
நிபுணன் ஆனான்.
நேரிடையாக பங்கு கொள்ள மாட்டான். ஆனால் இவனை கேட்காது கம்பெனி மூச்சு விடாது. ஹர்ஷத் மேத்தா என்ன பொருளாதார அறிஞரா? சின்ன டெக்னீசியன். பங்கு வணிகம் படுத்தது. நரேனின் ரோல் மாடல் அவர்தான்.
ஒருநாள் ஸ்வேதா வந்தாள்.
தொழில் அதிபர். முரட்டு உரையாடல்காரி.
ஆரக்கிள் படித்து கம்ப்யூட்டராய நமஹ என்று ஒரு கூட்டம் ஓடியபோது இவள் துணிந்து ஜாவாவில் பயணித்தாள்.
அதன் அல்கொரிதங்கள் மெஸ்மரைஸ் செய்யும் இடங்களில் தன் வெற்றியை உணர்ந்தாள்.
பூத்து குலுங்கினாள்.
சொந்த வாழ்க்கையோ நிஜமற்றும் பொய்யற்றும் குழப்பத்தில் விளக்கமாகவும் விளக்கத்தில் மயக்கமாகவும் தள்ளாடி ததும்பி நின்றே போயிற்று.
அவள் புருஷன் யார் என்றே தெரியவில்லை. இருக்கிறார் என்கிறாள். நரேன் நம்பினான். அதில் அவனுக்கு நஷ்டமில்லை.
தன் கம்பனியின் பாலன்ஸ் ஷீட்டில் எங்கு எதை நிவர்த்தி செய்வது என்பதை நரேன் பிஸிர் இன்றி செய்து காட்டியதில் ஸ்வேதா அவனை உணர்ந்தாள் .
"மேம் நிர்வாணத்தை நினைவுபடுத்துவது நிர்வாணம் அல்ல. உடைகள். நாம் உடைகள் கொடுத்து பணம் செய்ய வேண்டும். சமூகம் நிர்வாணத்தை தேட வைத்து கலைகள் செய்யும். கலைகள் எப்போதும் உடைகளை விரும்பும். விரும்ப வைப்பதுதான் வணிகம்" என்றான்.
அவள் கம்பெனி நிர்வாகி அல்லவா?
முதலில் நரேனை நியமிக்கும் முன் சாமர்த்தியமானாள். ஆட்களை வைத்து அவனை வேவு பார்த்தாள்.
திருப்தி வந்ததும் அவனிடம் போனில் நெருங்கினாள்.
அந்த காட்சிகளை நாம் பார்க்க அந்த காலத்திற்கே செல்ல வேண்டும். அத்தனை உயிர்ப்புடன் இருக்கும்.
இலங்கை கண்டியை சேர்ந்த வாசகி ரக்ஷிதாவின் விருப்பத்தை நிறைவேற்ற அந்த காலத்தில் சற்று பயணிப்போம்.
**********
ஹலோ மிஸ்டர் நரேன்.
யா..அண்ட் மே ஐ நோ அபௌட் யூ?
ஐ ஆம் ஸ்வேதா... உங்க ஆர்டிக்கிள் ஒண்ணு போர்ப்ஸில் படிச்சேன். ஐ வாஸ் டோட்டலி பிளாப்.அம்மேசிங்...
அக்கட்டுரை ஒட்டு பிளாஸ்திரி போட்டு கத்திரிக்காய் விற்பது பற்றியும் அதை மக்களிடம் ஆரோக்கியமாய் கொண்டு சேர்க்கும் நுட்பம் பற்றியும் கொண்டது.
படிக்கும்போது சத்தியமாய் அது சமூக அக்கறையுடன் கண்ணீர் விடும்.
எதை எழுதும்போதும் நரேன் இப்படி நினைத்து கொள்வான்.
ஊரே தன் வயிற்று பசியையும் உடல் பசியையும் பிறர் பற்றிய எந்த அக்கறையும் இன்றி மானமின்றி, ரோசமின்றி தின்று கூடி குதூகளித்ததற்கு தன் பரிசு என்று.
எழுத்தில் சிலர் உண்மை வைத்து சிலர் சத்தியம் வைத்து சிலர் மனிதாபிமானம் வைத்து எழுதுவார்கள்.
நரேன் தன் தந்திரங்களை அதில் செலுத்துவான். வெளிச்சம் தேடி விட்டில்கள் வரும். வந்தது.
கிழட்டு விட்டில்களை எப்படி இளைய விட்டில்களை எப்படி கையாள வேண்டும் என்பதை அவனுக்கு மனம் சொல்லி தரும்.
மனம் என்றால் என்ன? வெளியில் நிற்கும் சமூகம். ஆக, சமூகம் தன் ஒரு கையால் தன் பல கண்களை குத்தி கொள்வதில் பாவம் நரேனை குற்றம் சொல்ல முடியுமா? சம்பவாமி யுகே யுகே.
ஆர்கானிக் என்ற பெயரில் குளோபல் வலுவான ஒரு சந்தையை உண்டாக்கிய போது அதன் முஷ்டியை இன்னும் இறுக்க நரேனின் கட்டுரையை வல்லுநர்கள் பலத்த ஆதாரமாக ஒப்பித்தார்கள்.
நாளை இது பொய் என்று தெரியவரும் என இன்னொரு வல்லுநர் கோஷ்டி கானம் பாடியது. அது நரேனுக்கு தெரியாத ஒன்றா..?
மாற்று கட்டுரை எழுதி கொண்டபின்தான் மூல கட்டுரை எழுதுவான். மாற்று கட்டுரையை எப்போது எப்படி வெளியிட வேண்டும் என்பதை அவன் மனம் சொல்லி கொடுக்கும். மனம் என்றால்...
கிரிமினல் கிரிமினல் என்று வலசரவாக்கம் வனஜா சொன்னாலும் நடந்தது இதுதான். நடக்கப்போவதும் இதுதான்.
ஸ்வேதாவிடம் நீங்கள் யார் என்று நரேன் முதன்முறை போனில் கேட்டபோது தான் ஒரு விலைமாது என்றாள்.
இன்டர்நெஷனல் அளவில் டர்ன் ஓவரில் பில்லியன் குவிக்கும் தொழில் அது.
வருமான வரி சிக்கல் இருக்கிறதா மேம் என்றான். நேர்மையாகவே கேட்டான்.
அவள் சிரித்தாள்.
பின் கொஞ்சம் நேரம் கழித்து தன் பற்றிய விவரங்களை அவள் கொஞ்சம் சொல்ல ஆரம்பித்தாள்.
காலங்கள் அவர்களை தொழிலில் பிணைத்து வைத்தது. அவள் கம்பெனி வளர்ச்சியில் நரேனின் பங்கு நிறைய இருந்தது.
செங்கிஸ்கான் படையெடுப்பின் அடுத்த வடிவம் பன்னாட்டு வருகையை ஊக்குவித்தல். அரசியல்வாதிகள் தொழில் அதிபர் ஆனபின் கட்சி பேதமின்றி முதலீட்டை ஈர்க்க வசிய மருந்துடன் அலைந்தனர்.
வாக்கு அளித்தவரிடம் வெள்ளைக்காரன் பெயரில் நான் கம்பெனி கட்டுகிறேன் என்றால் விடுவார்களா? சுற்றி வளைத்து அடிக்க வேண்டும். அடித்தார்கள்.
அதற்கு கல்வியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். வெளிநாடு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது.
"பெற்றோர்களின் முதல் குருட்டு நம்பிக்கை பிள்ளைகளின் கல்வி. இதை விட மென்மையான மோசடியை அவர்கள் மீது திணிக்க முடியாது".
இந்திய பெற்றோரில் ஒருவர் கூட 'காக்காய் குருவி யாருக்காக யாரிடம் வேலைக்கு போகிறது? அது தன் இணையை கண்டு புணர்வதற்கு என்ன அளவுகோல் வைத்து இருக்கிறது' என்று கேட்க மாட்டார்கள்.
இதை யார்தான் கேட்பார்கள்?
பரிணாமத்தில் மனிதன் ஒரு பூச்சி. ஜந்து. பரிணாமத்தில் நிகழ்ந்த மரபு விபத்தே அவன் சிந்திக்கும் திறன். அழிவின் உச்சம் அந்த வெடி பொருளில் இருந்து ஆரம்பித்தது.
வணிகம். வணிகம். வணிகம்.
'ஜெயகாந்தன் பிற்காலத்தில் எழுதுவது நிறுத்தி கொண்டார் ஏன் தெரியுமா'? என்று ஸ்வேதா நரேனிடம் கேட்டாள்.
அவன் பதில் கூறவில்லை.
அவர்கள் இருவரும் ஊட்டியில் நடந்த ஒரு கான்ஃபெரென்ஸ் சென்றனர். நிறைய வெள்ளைக்காரர்கள்...இனி அப்படி சொல்ல கூடாது, யூரோப் காம்ரேட்ஸ்கள் வந்திருந்தனர்.
ஏகப்பட்ட கார்கள் வழிகளை கடந்தபோது உருளைக்கிழங்கை லாரியில் படாதபாடு பட்டு ஏற்றிக்கொண்டிருந்தவர் இதனை அதிசயமாய் பார்த்து கொண்டனர். அவர்கள் பிள்ளைகள் நாளை இப்படி போககூடும் இல்லை போவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. தடுக்கிய இடமெல்லாம் ஸ்கூலும் கல்லூரியும் கொப்பளித்து பொங்கின.
ஊட்டியில் நரேன் ஒரு திருப்திகரமான உணர்வை உண்டாக்கி இருந்தான். சமூக மேம்பாடு திட்டங்கள் நிறையப்பெற்ற பல தொழில் கட்டமைப்புகள் அவன் உரையில் இருந்தது.
பரம்பரை கம்யூனிஸ்ட் கூட மூக்கில் விரலை வைக்கும் நிகழ்வு அது.
ஒரு காம்ரேட் நரேன் கையை பற்றி குலுக்கினார். அவனை பார்க்கும் ஒவ்வொரு நபரும் வாழ்த்தி சென்றனர்.
ஸ்வேதா பெருமிதப்பட்டாள் "எப்படி ஓர் தோழமை நமக்கு வாய்த்தது" என்று.
நரேனுக்கு தெரியும். அடக்க முடியாத மூத்திரம் போகவும் மூன்று ரூபாய் கேட்கும் தேசம் இது என்பது.
பணம் கொண்டு பணத்தை விரையடிக்கும் எந்த பன்னாட்டு அமைப்பிலும் அவன் சமூக மேம்பாட்டு திட்டங்களுடன் நிற்பான். அதன் உள்ளே தீக்குளிக்கும் படியான விஷயங்கள், விஷங்கள் நிரம்பி இருக்கும்.
இந்த நாடு பால்யத்தில் அவனுக்கு கொடுத்ததை அவன் இப்படி கொடுக்க வருந்தியதே இல்லை.
அப்படியெல்லாம் இல்லீங்கோ நம்ம நாடு...என்று ஆரம்பித்தால் இந்த கதையில் இருந்து நீங்கள் விலகும் பொன்னான நேரம் இதுதான்.
ஒரு குழந்தையின் லட்சியம் டாக்டர் அல்லது என்ஜினீர் ஆக வேண்டும் என்ற குடும்பங்கள் பெருகி கிடக்கும் இந்த நாடு சகல வாய்ப்புகளையும் வழங்கியது. நீடித்த வணிகம் துவங்குவது இங்குதான்.
படித்த மகளுக்கு நூறு யோசனையுடன் ஆயிரம் கேள்விகளுடன் தொட்டு பார்த்து சுண்டி பார்த்து கிள்ளி பார்த்து பல் பிடித்து ஒரு மாப்பிளையிடம் கொண்டு சேர்க்க ஓரிரு வருடத்தில் பெண் வாட்ஸாப்பில் பிறருக்கு முடிந்தவரை விரித்து காட்டி...
(என் புருசனுக்கு கூட இப்படி காட்டினது இல்ல...ஈஈஈஈஈ) என்று குலாவி கொண்டிருக்கும் செய்தி அந்த மானம் கெட்ட அப்பனின் காதுக்கு வரும்போது மாப்பிள்ளை சரியில்லீங்கோ என்று பிளேட் போடும் சமூகம் நரேனுக்கு மிக உப்பானது. வணிகம் துவங்கும் இடம் இதுதான்.
அந்த குழந்தைக்கு படிப்பை விட வணிக பார்வை முக்கியம். நரேனுக்கு எதுவும் இந்த நாட்டில் பிஞ்சில் பழுக்க கூடாது, பிஞ்சிலேயே அழுக வேண்டும். அல்லது அழுக வைக்க வேண்டும்.
ஸ்வேதா கேட்டாள்.
"நரேன், உங்கள் ஒவ்வொரு கட்டுரையின் வார்த்தைக்குள்ளும் ஒரு ரணம் இருக்கிறது. அது எப்படி? அதன் மூலம்தான் இந்த சமூகத்துக்கு நீங்கள் சொல்லும் உறைப்பான விஷயங்கள் நல்ல விதமாக செல்கிறது" என்றாள்.
நரேன் அவளை உற்று பார்த்தான்.
பின் அமைதியாக இருந்தான். அவள் அலுவலகம் ஏசியில் நறுமணத்தில் ஒளி வீசி கொண்டிருந்தது. சுவர் திரை விலக்கி கண்ணாடி வழியாக வெளியில் சூர்ய அஸ்தமனம் பார்த்து கொண்டிருந்தான்.
ஸ்வேதாக்கு ஓர் அழைப்பு வந்தது.
ஆடிட்டர் பேசினார். கணக்கு இடிக்கிறது. இதை அப்படியே சப்மிட் செய்தால் வரி நிறைய கட்ட வேண்டியிருக்கும்.
அவள் நரேனிடம் சொன்னாள்.
அவன் மௌனமாக கம்ப்யூட்டரில் அமர்ந்து மார்ச் மாதத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தான்.
பின் தலையை நிமிர்த்தி அழைத்தான்.
ஸ்வேதா...
என்ன நரேன்?
ஜெயகாந்தன் பிற்காலத்தில் ஏன் எழுதலை னு தெரியுமா?
அவள் விழித்தாள்.
தெரியல நரேன்.
யாருக்கும் தெரியாது. அவர் அதுபற்றி எதுவும் சொல்லலை. நான் நினைக்கிறேன்...இனி எழுதி வாசித்து இந்த நாடு ஒண்ணும் உருப்பட போறது இல்லை னு அவர் முடிவு பண்ணி இருக்கலாம். நானா இருந்தா அப்படித்தான் செய்வேன் என்றான்.
அவள் டேபிளை சுற்றி வந்து அவன் தோளில் கையை வைத்தாள்.
அவள் கையை விலக்கினான்.
நரேன் அப்படித்தான் என்று எல்லா பெண்களுக்கும் தெரியும். லேசில் சிக்க மாட்டான். பெண் ஒரு துளை மட்டுமே என்று அவன் நம்பினான்.
அவனிடம் போனால் வெறும் கையுடன் மட்டுமே திரும்ப வேண்டும் ஒன்றும் கிடைக்காது என்றும் சொல்வார்கள். இது ஸ்வேதாக்கும் நன்கு தெரியும். அவனிடம் அவளுக்கு பயம் இல்லை.
இல்லை நரேன். இந்த சொசைட்டி அப்படி ஆயிடுச்சு. நான் இந்த இடத்துக்கு வர எத்தனை 'கனிஸ் லுபஸ்' பார்க்க வேண்டி இருந்தது தெரியுமா?
கனிஸ் லுபஸ் என்றால் ஓநாய். அதாவது இந்த சமூகம் ஓநாயாம். அதாவது இந்த சமூக ஆண்கள் ஓநாயாம்.
நரேன் அவளை எண்பது டிகிரியில் பார்த்தான்.
லேபர்ஸ்க்கு தீபாவளி போனஸ் குடுத்தியா...
இல்ல நரேன். இந்த ஓநாய் ஒவ்வொன்னும் எப்படி குதறும் தெரியுமா. பார்க்கும் போது பழகும் போது பேசும் போது சிரிச்சுகிட்டே மனசுக்குள்ள அவுத்து அவுத்து பார்க்கும். இந்த ஆண் வர்க்கம் முழுக்க அப்டித்தான் என்றாள்.
நரேன் அவளிடம் லேபர்ஸக்கு பிராவிடெண்ட் ஃபண்ட் மூணு மாசமா போடலையே அது ஏன்..? என்றான்.
உங்க நண்பர் மல்ஹோத்ராவோட ஒரு ப்ராஜெக்ட் 'டை -அப்' பண்ணிணோமே. நீங்க சொன்னாதான் அவர் அமோண்ட் ரிலீஸ் பண்ணுவார். பண்ணிட்டா உடனே கிளியர் பண்ணிடலாம் என்றாள். நீங்கள் சொன்னால் மட்டுமே அது முடியும் என்றாள்.
அது முடிந்தால் ஆடிட்டிங் பிரச்சனை முடிந்துவிடும் என்று எழுந்தான்.
ஸ்வேதா விழி விரித்தாள்.
வாவ்..உண்மையா நரேன்.
இரண்டு தோள் பட்டைகளையும் இரண்டு காதுகள் வரை கொண்டு சென்று ஷ்யூர் என்றான்.
கண்ணாடி வழியே பார்த்த போது சூரியன் அஸ்தமனம் ஆகி இருந்தது.
மக்கள் அசதியோடு வீட்டுக்கு போய் கொண்டு இருந்தனர். பாவம் அவர்கள் உடம்பு இப்போது விட்டு விட்டு வலிக்கும் என்று நினைத்து கொண்டான்.
அம்மக்கள் விரும்பி அருந்தும் அந்த பன்னாட்டு பானம் அப்படி செய்யும்.
அதனால் நாட்டில் காண்டம் விற்பனை கூட லேஸாய் சரிந்து போனதாக போன மாதம் ஒரு செமினாரில் உபாத்யாயா கவலை தெரிவித்தார்.
அதை கேட்ட நரேன் ஃபார்மஸுடிக்கல் ஷேர் சரியாமல் இருக்க இந்த ஏற்பாடு என்பதால் மூன்று மாதம் பொறுக்க சொன்னான்.
நரேன் ஸீட்டுக்கு வந்தான்.
நரேன், மல்ஹோத்ராவுக்கு போன் பண்ணிடுங்க சீக்கிரம்...
நிச்சயம் இன்னிக்கு பேசிடறேன். ஸ்வேதா எல்லாத்துக்கும் விலை இருக்கு. அதை கணக்கில் பொருத்த தெரியணும். அது போதும் என்றான்.
ப்ரிஜ் திறந்து, கோக்? என்றாள்.
நோ..ஹார்லிக்ஸ்.
அது பத்து நிமிடத்தில் மாரிமுத்து தயார் செய்து கொண்டு வருவான்.
என்ன விலை வேணும் மல்ஹோத்ராவுக்கு..?
கோக் உறிஞ்சி கம்ப்யூட்டரில் பரவினாள்.
நரேன், அவளையே பார்த்தான்.
"ஸ்வேதா, உண்மையில் நீ பைரேடெட் ஆப்ரேட்டிங் சிஸ்டம்" என்றான்.
"அப்படினா?..." என்றாள் சிரித்தபடி.
"அப்படினா...." என்றவன் சிரித்தபடி கேட்டான் "எப்போ நீ என்கூட படுக்க போறே?"
ஸ்வேதா முதல்முறை அதிர்ந்தாள்.
நரேன் சொன்னான்.
"நானும் மல்ஹோத்ராவும் சின்ன கனிஸ் லுபஸ். இது வெறும் ஆரம்பம். இன்னும் நிறைய இருக்கு ஸ்வேதா" என்றான். கழுத்து டை லூஸ் செய்து கொண்டான்.
இது பல் பிடித்து பார்க்கும் ஃப்யூடலிச அப்பன்களுக்கு அவனால் சொல்லி கொடுக்க முடிந்த பாடம்.
**********