மனைவியுடன் மனஸ்தாபம்

[கவிதை]

மனைவியுடன் மனஸ்தாபம்

நீயே உன்னுள் உள்ள என்னை புரிந்துக்கொள்ளாத போது
‘இந்த மானுடர்களை புரிந்துகொள்ள முடிவதில்லையே!’
என இனி என்னால் எப்படி அங்கலாய்க்க முடியும்?

என் காயங்களுக்காக நீ துடிக்காதபோது
புண்படாத இதயத்தை
என்னால் எப்படி தக்கவைத்துக்கொள்ள முடியும்?

அனுவளவே உணவில் உப்பு கூடுதலானதைக் கூட
உரிமையுடன் இனி என்னால் எப்படி முறையிட முடியும்?

பாரபட்சமின்றி இனி உன் நிமித்தமும்
நான் கண்ணீரை மறைத்து அழவேண்டியதுதானா?

உண்ணும் நேரம் கடந்தபின்னும்
பசியோடு நீ எனக்காகக் காத்திருப்பதை,
இனியும் என்னால் பெருமிதமாக எடுத்துக்கொள்ள முடியுமா?
மேலும், உனக்கு பசி ஏற்படுகிறவரை
நெருக்குகிற எனது பசியை
இனியும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியுமா?

கனவகள் கானும் என் முகத்தின் உவகையை
விழித்திருந்து நீ ரசிப்பதை
இனிமேல் தொடர முடியாதபடி
கனவுகளற்ற உறக்கத்தின் முகபாவனையில்
என் முகம் இருக்குமோ?

வாசல் வரை வந்து நின்று
வண்டி நகர்கையில்,
நான் உன்னை பார்க்கும் பார்வை
இனிமேல் ஒப்பு நோக்கலாகத்தான் இருக்குமோ?

என் இரவுகள்….
உன் விண்மீண்களை ஒருபோதும் கணக்கிட்டதில்லை.
ஆனால் இன்று உனது விண்மீண்கள்
எனது இரவுப் பூட்டுகளுக்கு சாவிகளாய் இருக்கின்றன!

இனி நாம் பிடிக்கும் ஒற்றைக் குடையில்
பக்கவாட்டாய் நீ நனைவதை
நான் பொருட்படுத்தாமல் இருந்துவிடுவேனா?
நீ பேசிக்கொண்டிருக்கையில்
கண்கள் அமுக்கும் உறக்கத்தை
இனிமேல் முழுமையாக என்னால் நிராகரித்துவிடமுடியுமா?

உனக்கு மட்டுமே பிடித்த தொலைக்காட்சித் தொடரை
வழக்கம்போல் மனமுவந்து
இனியும் என்னால் பார்க்க முடியுமா?

குறைவாக நான் சாப்பிடுவது கண்டு
நீ படும் அக்கறை
இனி என்னை சங்கோஜத்திற்கு உள்ளாக்குமா?

புரிந்துகொள்ள முடியாத கோபம்
உள்நோக்கம் கொண்டதாய் இருப்பினும்,
என் வெளிப்படுத்தமுடியாத வருத்தத்தை
நீ எப்போதுதான் உணர்வாய்?

விரக்தி எண்ணங்கள் தனிமைதனை காவு வாங்கும்போது
உணர்வுகளின் ஒருமித்த சரணாலயம் சூன்யமாகிறது
ஒட்டுமொத்தமாய்.

மனது கிடந்து துடிப்பதை
இதயம் பலித்துக் காட்டுவதை
பொறுத்தே ஆகவேண்டும்.
இல்லையெனில் உயிர் போய்விடும்.

உன்னிடம் சரணடைந்த….
நான் பெற நினைத்த சுதந்திரங்களை
நீயாக என்னிடம் ஒப்படைத்துவிட்டால் நல்லது
-என்ற நினைவுக்கு நான் ஆட்பட்டுவிடுவேனோ?

வெப்பத்தால் தாக்கப்படும் காற்று படும் அவஸ்தையாய்
என் புலன்களின் ஊமைக்காயங்களை
உன் நினைவு வருடல்களால் இனியும் ஆற்றிக்கொள்ள முடியுமா?

என் சுவாசத்தை அடைகாத்து வைத்திருக்கும்
உன் உயிரோசையால்
என் ஜீவிதத்தின் ஆயுள் தொடர்ந்து ஆசிர்வதிக்கப்படுமா?


**************************

யேசுராஜ்
சென்னை.

எழுதியவர் : யேசுராஜ் (21-Sep-19, 12:45 pm)
சேர்த்தது : யேசுராஜ்
பார்வை : 67

மேலே