மழலை

கார்மேக தோட்டத்து கண்ணாடி பூ ...
இழை நிற அந்தி பொழுது ...
அழகிய மாலை பொழுது ...
என இயற்கையின் மேல்
அலைபாய்ந்த என் கற்பனைகள் அனைத்தும்

ஒற்றை நொடியில் காணாமல் போனது
குழல் வழி நுழைந்த
காற்று போன்ற உன் சிரிப்பில் ..!!

சூரிய கதிர் பட்டு கரையும்
பனித்துளிபோல் உருகுகிறேன் ..
உன் பிஞ்சு கைவிரல்கள்
பஞ்சு பூவிதழாய்
நெஞ்சை தழுவையில்

நீ தூங்கும் அழகில்
என் உறக்கம் மறந்தேன் ..
நீ உண்ணும் அழகில்
என் பசியை மறந்தேன் ..

நீ சிரிக்கும் சிரிப்பில்
என் கவலை மறந்தேன் ..
நீ பேசும் பேச்சில்
நான் என்னையே மறந்தேன் ..

அழகிற்கு அழகு உன் சிரிப்பு
அமுதிற்கு அமுது உன் பேச்சு ...

மௌனம் கூட அழகென்று அறிந்தேன்
வார்த்தையில்லா மொழியில் நீ பேச ..
கோவம் கூட சுகமென்று உணர்ந்தேன்
உன் முட்டை கருவிழிகள் உருளும் நேரம் ..

கருப்பு நிலா போன்ற உன் கருவிழியில்
விருப்பு வெறுப்பின்றி தொலைந்துபோகிறேன் ..
குழி விழும் உன் கன்னத்தில் என் எண்ணங்களை
முத்தங்களாய் பதித்து போகிறேன் . .

உன்னை தூக்கி கொஞ்சுகையில் கை வலிக்கிறது
இறக்கி வைக்கையிலோ மனம் வலிக்கிறது ...
குறும்புகள் நீ செய்கையில்
வெட்கம் நான் கொள்கிறேன் .

தாமரை மலரின் அழகும் கூட
தவழும் குழந்தையின் அழகில் தோற்கும் ..
மலரும் மலரின் வாசம் கூட
மழலையின் வாசத்தில் மறைந்து போகும் ..

கூவும் குயிலின் கீதம் கூட
கொஞ்சும் குழந்தையின் பாதம் பணியும் ..

சின்னஞ்சிறு விழிகள் கொண்டு
நீ பேசும் மழலை மொழி அறிய
தாய்மை தேவைப்படாது எவருக்கும் ...

எழுதியவர் : ரஞ்சித் வாசு (25-Sep-19, 2:24 pm)
சேர்த்தது : Ranjith Vasu
Tanglish : mazhalai
பார்வை : 2876

மேலே