ஆத்ம நிழல்
அவனை ‘அது’ நெருங்கியபோது…
வங்காள விரிகுடா வரவேற்றது. அலைகளை கவிதைகளாய் வாசித்தான். இவ்வளவு நுணுக்கமான கலைக்கு தான் ஆசானாவோம் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரியில் கால் வைத்த நேரம் இப்படியொரு வசந்தமா!
அந்த கலைக்கூடத்தில அவன் ரவிவர்மனானான். காரிகைகளின் இதழ்களில் தூரிகை எடுத்தான். ரோமியோக்கள் அவனிடம் பாடம் பயின்றார்கள். அவன் கவிதைகள் பிரசுரமாகாத பத்திரிகைகள் அரசியல் – சமூக பத்திரிகைகளே…
மேகங்கள் அவன் தலையை கோதி கண்களை குளுமைப்படுத்தி சென்றன. விடிவதற்குள் எண்ணிமுடித்தான் விண்மீன்களை. சகாராவை சுற்றுலா பூங்காவாக பாவித்தான். நயாகராவில் இதமாக நீச்சலடித்தான்..
நாள்தோறும் சவரம் செய்து இருமுறை ஸ்நானித்தான். அவனையறியாமலே உடலும் முகமும் மெருகேறின. பருவம் சிறந்த விருந்து மட்டுமல்ல. கிடைத்தற்கறிய வரப்பிரசாதம் கூட.
மிதமான வேகத்தில் துரிதமாக சுழன்றது காலச்சக்கரம்.
அவனை விட்டு ‘அது’ விலகியது….
விடியாத இரவுகளுக்கு வீணான கனவுகளுக்கு பரிகாரம் தேடி பாதயாத்திரை போனான். கோபர வாசலில் காலடி வைத்தபோது ஏவல்புறாக்கள் எச்சரித்தன. திரும்பி வந்தபோது மறைந்திருந்து யார் யாரோ கற்களை எறிந்தார்கள்.
வங்காள விரிகுடா எச்சரிக்க, தலைக்கு மேல் எகிறின அலைகள். கலைக்கூடத்தில் களவு போயின ஓவியங்கள். எள்ளி நகைத்தனர் ரோமியோக்கள்.
மேகங்கள் மோதி தலையில் இடிவிழ, மின்னல் கண்களைத் தாக்கியது. நட்சத்திரங்கள் தீப்பிழம்பாகி உடலெங்கும் பரவின. ரோமங்கள் தாடையை மறைத்து மாதங்கள் பலவாகின. சகாராவும் நயாகராவும் மரணகூவல் விடுத்தன.
காதலில் தோல்வியுற்று நிலைகுலைந்து பித்தனான பாபுவை அந்தக் கல்லூரியே பரிதாபமாக பார்த்தது.
நிறைவேறாக் காதலை புறக்கணிக்க முடியாமல் தடுமாறிய மனது சர்வ உடலையும் ஆட்டிப்படைத்தது. இதயத்துடிப்புகளை செவிமடுத்தவாறு… நுரையீரலிடம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது சுவாசம்.
காதல் பழக்கத்தால் பேச்சுகள் குறைந்து நண்பர்கள் சிநேகத்தை இழந்து தனிமையாகி… பிறகு அது இல்லாமல் போகவே.. மாரடைப்புக்காட்பட்டு பின் மனநோயாளியாகி மருத்துவமனை படுக்கையில் இருக்க…. காதலித்தவள் கர்ப்ப பரிசோதனைக்காக வருகிறாள் கணவனுடன்.
பேரேளனத்துடன் பிரிந்தகன்றது ஜீவ மூச்சு..
உருவற்ற ஆத்மாவின் நிழலில் அடைக்கலமானது அவன் ஆருயிர்.