கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 10

அட்லஸ்:

சிறகுகள் இல்லாமலேயே,
பெண்களை தேவதைகளாக்கும் வல்லமை
புடவைகளுக்கு உண்டு

அட்லஸின் கவர்ச்சியான குரல், அவனின் கிரக்கமான பார்வை சுஜியின் இதயத் துடிப்பை வேகமாக்கியது. மயான அமைதியில் அவளின் இதயத்தின் துடிப்பு அச்சூழலுக்கு உயிரூட்டியது.

அட்லஸ்:

அட்லஸ்
தைரியமானவன் தான்
ஆனால்
கயல் தீரா கண்ணை
பார்த்து பேசும்
அளவுக்கு
வீரமானவன் அல்ல....

சுஜியை நொறுக்குவது போல் நெருங்கினான் அட்லஸ். கண்ணாடியோடு ஒட்டி கொண்டாள் சுஜி. அவனின் இடது கையை தூக்கி கண்ணாடியின் இடது முனையில் பதித்தவன், வலதுகை கரம் கொண்டு கண்ணாடியோடு ஒட்டியவளை அதனோடே சேர்த்து இறுக்கினான்.

சுஜியின் உஷ்ணமான மூச்சு காற்று கண்ணாடியில் பட்டு நீராவியானது. அட்லஸ் சாதாரணமாக வீட்டில் இருந்தால் சட்டை அணிவது குறைவு. அன்றைக்கும் அவனுக்கு அது தேவையற்றதாகவே இருந்தது.

அவனின் அந்த வாசனை திரவியத்தின் வாசனை சுஜியை தூக்கி வாரி போட்டது. அது நிமலனின் வாசனை. அவன் உபயோகிக்கும் திரவியத்தின் வாசனை. கொலை நடுங்கி விட்டது சுஜிக்கு. மூடிருந்த கண்களை விருட்டென திறந்தவள் வேகமாய் திரும்பினாள்.

உண்மையில் யாரோடு ஒட்டி உரசிக் கொண்டு இருக்கிறாள் என்பதை அறிய. பேய் அடித்தாற்போல் திரும்பியவளை விடுவதாய் இல்லை அட்லஸ். அவளின் முகத்தை வருடிக் கொண்டே அவளை பார்த்தவாறே

அட்லஸ்:

முத்தமிடும் சாக்கிலுனை
யொருபிடியள்ளி
மென்றுண்ணும்
எம்பாங்கினைத் தான்
பித்தென்கிறாய் நீ
ப்ரியமென்கிறேன் நான்

சொல்லியவன், அவளின் தலையோடு தன் தலை சாய்த்துக் கொண்டான். அவனை அலேக்காக அப்படியே தூரமாய் தள்ளி நிறுத்தினாள் சுஜி.

அட்லஸ்: என்னாச்சி பாப்பா?

சுஜி: நிமல்...

அட்லஸ்: நிமல்கு என்ன?

சுஜி: உன் பெர்பியூம்..

அட்லஸ்: எனக்கு பிடிச்சதெல்லாம் அவனுக்கும் பிடிக்குதா?

சுஜி: நிமல்கு பிடிச்ச சுஜி, சுஜிக்கு பிடிச்ச அட்லஸ்.

அட்லஸ்: இல்லடி, நிமல்கும் அட்லசுக்கும் பிடிச்ச சுஜி.

சுஜி: சுஜி...

அவள் பெயரை அவளே சொல்லிக் கொண்டு அதே கண்ணாடியின் கீழ் அமர்ந்தாள் புடவையை சுருட்டிக் கொண்டு. அட்லஸ் எங்கு நின்றானோ அங்கேயே கால்களை நீட்டி பால்கனி பார்க்கும் வண்ணம் அமர்ந்துக் கொண்டான்.

சுஜி வெற்று சுவரை வெறித்து பார்த்தாள். அட்லஸ் பால்கனியின் வழி தெரியும் வானத்தையும் அதில் பறந்து திரியும் பறவைகளையும் பார்த்தான்.

அட்லஸ்:

கயல் தீரா......
கயல் தீரா.....
தீரா காதலை என்னுள் தந்தவள் நீ...

சுஜி: எனக்கு நிஜம் தான் பிடிக்கும். நிழல் இல்ல.

அட்லஸ்: நான் நிஜமில்லையே. நிழல் தானே, அதான் சுஜி.

சுஜி: அட்லசுக்கும் நான் சுஜிதான், நிமல்கும் நான் சுஜிதான். அப்போ, கயல் தீராக்கு யாரு?

சுஜி... சுஜி.... அம்புஜம் உலுக்கியதில் பழைய எண்ணத்திலிருந்து கலைந்தால் சுஜி.

தம்பி ரொம்ப நேரமா கூப்பிடுத்துமா..

அம்புஜம் சொல்லும் போதே தலையை ஆடு போல் ஆட்டிய சுஜி தன் பேக்கை எல்லாம் அம்புஜத்திடம் எடுத்து வர சொல்லி கிளம்ப அயோத்தமானாள்.

விமான நிலையத்திற்கு செல்வதற்காக பேக்குகளை வாகனத்தில் வைத்துக் கொண்டிருந்தனர் பணியாட்கள். சுஜி அம்புஜத்தை கட்டியணைத்து பேசி கொண்டிருந்தாள் வாசலில் நின்றவாறு.

அப்போது கேட்டான் நிமலன்,

நிமலன்: உன் கார் எங்கே?

சுஜி: நேத்து ஸ்டார்ட் பண்ணேன். ஸ்டார்ட் ஆகல. என்னப் பிரச்சனை தெரியல. மணி வேற ஆச்சி அதான் நான் சொந்தமாவே வீட்டுக்கு வந்துட்டேன்.

நிமலன், சுஜியை பார்த்தான் என்னவோ தொடர்ந்து கேட்க வந்தவனை விமல் தடுத்து அனைவரையும் காரில் ஏற்றினான்.

விமான நிலையத்தை அடைந்த அனைவரும், அனைத்து கடப்பாடுகளும் முடிந்து விமானத்தில் ஏறி அமர்ந்தனர். பணக்கார குடும்பங்களுக்காகவே பிசினஸ் கிளாஸ் வகை விமானங்கள் பிரேத்தியேகம். ஆடம்பரமான அந்த முதல் தர பிசினஸ் கிளாஸ் விமானங்கள் சர்வ வசதிகளோடு அமைக்கப்பட்டிருக்கும் அதில் மிக சவ்கரியமாகவே பயணம் செய்யலாம்.

ஐஸ்லாந்துக்கு மலேசியாவிலிருந்து ஏறக்குறைய பதினான்கு மணி நேரமாகும். இடையில் சில வகை விமானங்கள் நிறுத்தம் கண்டு மீண்டும் பயணிப்பதாகவும் இருக்கும், இன்னும் சிலது தொடர்ச்சியாகவே பயணிக்கும்.

நிமலனும் அவனது நண்பர்களும் பாலிய சிநேகிதர்கள். நிமலன் மேல் படிப்பை ஜெர்மனியில் தொடர்ந்தான். அவனுக்கு மொத்தம் எட்டு மொழிகள் பேச தெரியும். மலாய், ஆங்கிலம், தமிழ், ஜேர்மன்,பிரான்ஸ் மட்டுமல்லாது உலகில் கடினமான மொழியான மெண்டரின்,ஜப்பான் மற்றும் ரஷியன் மொழிகளும் அத்துப்படி.

சிறுவயது முதல் நல்ல பண வசதியுள்ள வாழ்க்கையையே அவன் வாழ்ந்து வந்தான். அன்புக்கும் பண்புக்கும் கொஞ்சமும் குறைவின்றி சிறப்பாகவே வளர்க்கப்பட்டவன். என்னதான் பணக்காரனாக இருந்தாலும் நடுத்தர வர்கத்தை சேர்ந்த அவனது பால்ய நட்புக்கு என்றைக்குமே பங்கம் வந்ததில்லை.

நண்பர்களை எங்கு வேண்டுமென்றாலும் அழைத்து செல்வான். எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொள்வான். பிறந்தநாள் வந்தால் போதும் அமர்களப்படுத்தி விடுவான். வரவு எட்டனா செலவு பத்தான என்றில்லாமல் வற்றாமல் அவனின் வர்த்தகமும் கொடி கட்டியே பறக்கிறது.

நிமலன் குரூப் கம்பனி பலவகையான வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கின்றது. ஏற்றுமதி இறக்குமதி தொடங்கி, உணவுகள், பிரமாண்ட ஹோட்டல்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், பங்கு வர்த்தகம், தொலைத்தொடர்பு முதற்கொண்டு அத்தனையிலும் வீறு நடை போட்டு முதல் பத்து பணக்கார வர்க்கத்தில் நிமலன் குரூப்பும் இடம் பிடித்துள்ளது.

நிமலன் அவனின் நண்பர்களோடு அரட்டை அடிக்க சென்று விட்டான். சுஜி விமானத்தில் பயணித்தபடி ஜன்னலோர துணியை விளக்கி வெட்ட வெளி வானத்தை பார்த்தாள். பார்க்கும் இடம், கண்ணிமைக்கும் நொடியே எங்கும் அவளுக்கு அட்லஸ் மட்டுமே தெரிந்தான். அவனின் அந்த புன்னகை. மனதை மயக்கும் வசியம்.

புகையாய் சூழ்ந்திருந்த வெள்ளை மேகங்கள். சொர்கத்தை பார்ப்பதை போல் இருந்தது. எப்போதும் சொர்கத்தை இப்படித்தானே காண்பிப்பார்கள் திரைப்படங்களில். தேவலோக ரதிகளும் தூவிவிடப்படும் பூக்கள்களும் மட்டுமே குறைவு.

சுஜி அவளின் கைத்தொலைபேசியை எடுத்து பார்த்தாள். தொடர்பு இல்லை என தெரிந்தது. ஒரு சில நாடுகளை விமானம் கடக்கும் போது இப்படி நிகழ்வது சாதாரணம். முகப்புத்தகம், இன்ஸடாகிராம் என்று எதுவுமே பார்க்க முடியவில்லை.

சுஜி அட்லஸை பற்றி நினைக்க ஆரம்பித்தாள். முதலில் வீட்டின் கண்ணாடியின் முன் நிறுத்தப்பட்ட அந்த காதலை மீண்டும் கண் முன் கொண்டு வந்தாள். விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க நினைத்தாள்.

அட்லஸ்: அய்யய்யோ... ஆத்தா, நானே கஷ்டப்பட்டு உன்னே மயக்கி வெச்சிருக்கேன், இப்போ புதுசா எவனாவது வந்தா என் பாடு திண்டாட்டம் தான்.

பெரிதாய் சிரித்தான் அட்லஸ். சுஜி பார்வையை வெற்று சுவற்றிலிருந்து அவன் பக்கம் திருப்பினாள். சிரிப்பின் சத்தம் மெதுவானது.

சுஜி: என்னைப் பத்தி உனக்கு என்னே தெரியும்?

அட்லஸ்: என்னே தெரியணும்?

சுஜி:கேள்விக்கு பதில்...

அட்லஸ்:நான் தெரிஞ்சிக்கணும்னு நீ நினைக்கறதா உனக்கு தெரியாமலே நான் தெரிஞ்சிப்பேன் பாப்பா. நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சிக்கணும்னு இல்லே.

சுஜி: அப்போ சொல்லு கயல் தீராவின் காதலன் யார் ?

அட்லஸ் மீண்டும் சிரித்தான்.

அட்லஸ்:நீ இவ்ளோ ரகசியமானவளா இருப்பேனு நான் நினைக்கலையே. எனக்கும் தெரியாமே உனக்குள்ளேயே ஒருத்தி இருக்காளே. நான் தான் உனக்குள்ளேன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.

இப்போது சுஜி பெரிதாய் சிரித்தாள். அவளுக்கு பதிலளித்தவன் அப்படியே எழுந்து கிட்சன் பக்கம் சென்று, குளிர்சாதன பெட்டியிலிருந்து பெப்சி பாட்டிலை எடுத்தான். கூடவே ஐஸ் கட்டிகளையும் எடுத்தான். கிட்சன் அலமாரியில் இருந்த கண்ணாடி குவளை ஒன்றை கை பற்றினான். அதில் பெப்ஸியை கொஞ்சமாக ஊற்றினான். அவனருகில் வந்து நின்ற சுஜிக்கும் ஒரு குவளையில் பெப்ஸியை ஊற்றினான்.

சுஜி: சரி, என்ன பத்தி வேணாம். நிமலன் பத்தி சொல்லு? உனக்கு நிமலன் பத்தி என்ன தெரியும்?

அட்லஸ்: தெரியாதே...உனக்குத்தான் அவனை பிடிக்காதே. உனக்கு பிடிக்காதத பத்தி எனக்கு எப்படி தெரியும் என் செல்லமே.

சுஜியின் தாடையை பிடித்து செல்லமாய் குலுக்கி சொன்னான்.

அட்லஸ்: உனக்கு பிடிச்சதை மட்டும் தான் எனக்கு தெரியும். ஏன்னா, நான் இங்கே இருக்கேன்.

சுஜியின் நெஞ்சில் அவனின் விரல் வைத்து சுட்டிக் காட்டினான்.

சுஜி: ஒரு பொண்ண ரசிக்கறதுக்கு, காதல் பண்றதுக்கு, அதை போய் அவகிட்ட சொல்றதுக்கு, அப்படி சொல்லி அவளுக்கும் ஓகே னா, நாளைக்கி பிரச்சனை வரும் போது போராடறதுக்கும் எவ்ளோ தைரியம் வேணும், ஒரு ஆணுக்கு? எவ்ளோ துணிச்சல், எவ்ளோ மனத்திடம். அதெல்லாம் தாண்டி நம்ப மாதிரி உறவுல இருக்கறவுங்களுக்கு இன்னும் எவ்வளவு நெஞ்சழுத்தம் வேணும், இத பண்ண..

அட்லஸின் முகம் மாறியது. சுஜி அதை கவனிக்காமல் இல்லை.

பெப்சியில் ஐஸ் துண்டுகளை போட்டுக் கொண்டிருந்த அட்லஸ் சுஜி சொன்னதை கேட்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.

சுஜி: அச்சோ, சோரிடா செல்லக் குட்டி. ஏதாவது பேசி உன்னே மூட் அவுட் ஆக்கறதே என் வேலை. பிளீஸ் டா, சோரி கோச்சிக்காதா.

அட்லஸ்: நீ அடிக்கடி என்ன யோசிக்க வைக்கற பாப்பா. நாம தப்பு பண்றோம். மன்னிக்க முடியா தப்பு. ரொம்ப தூரம் போய்டா திரும்பி வர முடியாது பாப்பா. நாம இதெல்லாம் நிறுத்திடலாம். முடிச்சிக்கலாம். விலகிக்கலாம். பிரிஞ்சிடலாம்.

சொல்லும் அவன் குரல் தழுதழுத்தது போல், அதை கேட்டுக் கொண்டிருந்த சுஜியின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. அட்லஸ் அப்படியே திரும்பி அவளை அணைத்துக் கொண்டான். அவள் கண்களில் வழிந்து கன்னம் தொட்ட கண்ணீரை விரல்களால் துடைத்து விட்டான்.

கேபின் கதவை திறந்து விமல், சுஜியின் அண்ணன் உள்ளே வந்தான்.

கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தாள் அவள் அண்ணன் அறியாதவாறு.

சுஜி: வாங்கணா..

விமல்: ஏன் சுஜி உனக்கு உடம்பு ஏதும் சரி இல்லையா? ஒரு மாதிரியா இருக்கே? வந்து ஜொயின் கூட பண்ண மாட்டிங்கற எங்க கூட? நீ சரி இல்லையே.

சுஜி: அப்டிலாம் ஒன்னும் இல்லேன்னா. புதுசா புக் வாங்கி இருக்கேன் அதான் படிச்சுக்கிட்டு இருக்கேன்.

விமல்: ஏதோ சொல்றே. நீ முன்னே மாறி இல்லே சுஜி. ஏதாவது பிரச்சனைனா சொல்லு. உனக்குள்ளையே வெச்சிக்காத சரியா..

சுஜி அமைதியாய் புன்னகைத்தாள்.

தொடரும்...

எழுதியவர் : தீப்சந்தினி (25-Sep-19, 3:52 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 130

மேலே