செவப்பி ‍- அத்தியாயம் 6

செவப்பி - அத்தியாயம் 6
======================

     வீட்டுக்குள் வந்து, கிட‌த்தப்பட்டிருந்த செவப்பியைக் கண்டதுமே அழுகை பொத்துக்கொண்டு வந்தது பார்வதியம்மாவிற்கு..
   
     அவள் கண்ட காட்சி.. அவளாலேயே நம்ப முடியவில்லை.. ஏன்.. ஊரே நம்பவில்லை.. இப்படி ஒரு விபரீத‌ முடிவு செவப்பிக்கு ஏற்படும் என்று ஒருவ‌ர் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

     'இப்போ என்ன ஆகும்.. இந்த கிராமத்துக் குற்றவாளிகளுக்கு யார் தண்டனை கொடுப்பா? இருந்த கொஞ்ச நஞ்ச பயமும் போயிடுச்சுன்னா, எல்லாரும் ஓவரா ஆட ஆரம்பிச்சிடுவாங்களே..', என்று நினைத்தவாறே அங்கிருந்தோரிடம் பேச்சு கொடுத்தாள் பார்வதியம்மா.

     "எ.. எப்படி..? என்ன நடந்துச்சு?"

     "அதுவாம்மா.. எப்பவும் போல ஆத்துக்கு குளிக்க போயிருக்கா செவப்பி.. இன்னிக்கினு பார்த்து ஏதோ புது இடத்தில இறங்கிட்டா போல.. அங்க இருந்த புதகுழியில மாட்டினவ‌ அப்படியே மூழ்கிட்டா.. ரொம்ப நேரமாச்சே.. இன்னும் ஆள காணோமேன்னு தேடிப்போன பூசாரி தான், கஷ்டப்பட்டு இவள கண்டுபிடிச்சு இருக்காரு.. பாரும்மா, இந்த ஊருக்கு வந்த சோதனைய.." என்று சொல்லி ஓவென அழ ஆரம்பித்தாள் டீக்கடை சுகந்தி.

     ஒவ்வொருவராகச் சொல்லி, செய்தி ஊர் முழுதும் பரவி எல்லோருமே அங்கு வந்து விட்டார்கள்.

     யாருமே சந்தேகப்படாமலும் இல்லை.

     கண்டிப்பா எவனோ தான் இப்படி பண்ணியிருக்கணும் என்றவாறு கிசுகிசுவென பேசிக்கொண்டு இருந்தனர்.

     பார்வதிய‌ம்மாதான் உடைந்து போயிருந்தாள்.

     சேதி பரவி.. பள்ளி கல்லூரி சென்றவர்கள் எல்லாம் திரும்பி வந்து விட்டனர்.

     ரூபா..  வந்து அம்மா பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தாள்.

     மனசுக்குள்ளேயே பொலம்பிக் கொண்டிருந்தாள் பார்வதியம்மா.

     'நம்ம கிராமத்துக்கு இது ஒரு கஷ்டமான விஷயம் தான்.. ஆனா, அதைவிட கஷ்டமான விஷயமா எனக்கு இது ஆகிப்போச்சே.. ரகுவப் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு நம்பிக்கிட்டிருந்த ஒரே விஷயமும், இப்படி காலை வாரிவிடும்னு நினைக்கலையே! இது என்ன‌ எனக்கு வந்த புது சோதனை..?'

     'வாழ்க்கையில இது வரைக்கும் எத்தனையோ கஷ்டங்கள கடந்து வந்தாச்சு.. சின்னஞ்சிறு பொடுசுங்கள எங்கிட்ட விட்டுட்டு, அவர் பாதியிலேயே போனப்புறம் படாத கஷ்டமா! எப்படியோ ஏதேதோ வேல‌ செஞ்சு.. சம்பாதிச்சு.. பசங்களை படிக்க வச்சு... பெரியவள கட்டிக் கொடுத்து, இப்ப ரகு வேலைக்குப் போக ஆரம்பிச்சவுடனேத்தான், வேற எங்கேயும் போகாம வீட்டிலேயே இருக்க ஆரம்பிச்சேன். இப்பவும் வேலைக்குப் போக நான் ரெடி தான், ஆனா ரகு தான் விட மாட்டேங்குறான்'

     'அதான் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன்ல.. சும்மா வீட்ல இருங்கம்மான்னு சொல்லி, வீட்டிலேயே உக்கார‌ வெச்சுட்டான்'

     'இப்ப அந்தப் பையன் மேல இப்படி ஒரு பழி! அது என்னனு தெரிஞ்சு நிவர்த்தி செய்யலாம்னு பார்த்தா, அவனும் பிடிவாதமாக சொல்ல மாட்டேங்குறான்..'

     'சரி அது இல்லாட்டி விடு... அதான் இன்னொரு வழி இருக்கேனு அத‌ நாடி வந்தா.. அந்த வழியையேக் காணோம், இப்படி நடுக்காட்டுல‌ விட்டா, என் கேள்விக்கு என்ன தான் பதில்? அதுக்கு யார் தான் பதில் சொல்லுவா?', என மனதிற்குள் நினைத்த‌ நொடி..

     தன்னைச் சுற்றி ஒரு அதிர்வை உணர்ந்தாள். ஒரு மெல்லியக் காற்று, தன்னருகே.. தன் காதருகே.. சங்கமிப்பதாய் அறிய முடிந்தது.

     "நான் சொல்லுவேன், இல்ல யாரையாவது சொல்ல வைப்பேன்", என்ற குரல் கிசுகிசுப்பாய் காதுக்குள் கேட்டது.

     சுற்றும் முற்றும் பார்த்தாள் பார்வதிய‌ம்மா.. அருகில் நின்றிருந்த ரூபா 'என்ன?' என்பதாய் சைகையால் கேட்டாள்.

     இவள் 'ஏதும் இல்லை' என்பதாய் தலையை ஆட்டினாள்.

     'யார் இப்ப பேசினா?' என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள் பார்வதியம்மா..

(அதிர்வு தொடரும்)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (25-Sep-19, 9:26 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 94

மேலே