தேர்தல் அந்தாதி

==================
கட்டுப் பணங்கட்டிக் கட்சிக் கொடிகட்டி
எட்டுத் திசைவாழும் எம்வாக்கைத் – தட்டிப்
பறித்திடத் தன்னலப் பட்டுடுத்தி தம்மை
அறிமுகம் செய்வர் அறி.
**
அறிந்த கதைசொல்லி ஆயிரம் பேர்முன்
குறிவைத்துக் கொள்ளையிடும் கொள்கை – முறியா
வகைக்கு முழங்குவர் வாக்கெடுத்தப் பின்பு
நகைப்பிற் குரியவராய் நாம்.
**
நாம்மூ டரென்கின்ற நம்பிக்கை வைத்தவர்கள்
தாம்தூ மெனத்தேர்தல் தாளமிட்டுப் - பாம்பாய்
நெளிந்து பழங்காலப் பாட்டிசைத்து ஆடிக்
களிக்கும் நடனந்தான் காண்.
**
காணும் எவர்முன்னும் காலில் விழாக்குறையாய்
தோணும் அவதாரம் தோற்றுவித்து – பேணும்
அரசியல் தந்திரம் ஆட்சிக்கைப் பற்றிச்
சுரண்டிட வெண்ணும் சுகம்.
**
சுகமான நாற்காலிச் சொர்க்கம் அமைந்தால்
முகம்மாற்றிக் கொண்டு முடிவில் – நகமும்
சதையுமாய் வாழ்ந்த சகோதரர் தன்னை
உதைக்கவும் செய்யும் உணர்.
**
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Oct-19, 2:43 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 59

மேலே