கீழடி கவிஞர் இரா இரவி
கீழடி! கவிஞர் இரா. இரவி.
உலக நாகரிகம் அனைத்தும் இன்று
உன்னத கீழடிக்கு கீழ் என்றானது!
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே
முன்னேற்றத்துடன் வாழ்ந்தவன் தமிழன்!
எழுத்தறிவோடு இருந்தவன் தமிழன்
என்பதை இன்று உணர்த்தியது கீழடி!
உலகின் முதல்மொழி தமிழ் என்பதை
உரைத்தார் தேவநேயப் பாவாணர் அன்றே!
உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதை
உணர்த்துகின்றது கீழடியில் கிடைத்தவை!
அமெரிக்காவின் ஆய்வுக்கூடம் இன்று
ஆராய்ந்து கூறி உள்ளது மூவாயிரத்துக்கு முந்தியது!
சுட்ட செங்கலை அன்றே பயன்படுத்தியவன்
சங்கத்தமிழன் என்பதை மெய்ப்பித்தது!
கழிவறைகள் கட்டி நவீன வாழ்வு வாழ்ந்தான்
கண்டுபிடிப்புகள் உணர்த்தி உள்ளன!
பாத்திரங்களில் பெயர் பொறிக்கும் வழக்கம்
பண்டைக்காலம் தொட்டு இன்றும் தொடர்கின்றது!
தொழிற்கூடம் அமைத்து வாழ்ந்து வந்தான்
தமிழன் என்பதை மெய்ப்பித்துள்ளது கீழடி!
அணிகலன்கள் செய்வதில் வல்லவன் தமிழன்
அணிகலன்களின் அழகு உணர்த்தி உள்ளது!
உலக நாகரிகத்தின் தொடக்கம் கீழடி
உலகமே இன்று வியந்து பார்க்குது கீழடி!
தோண்டத் தோண்ட வருகுது பொருட்கள்
தமிழனின் பெருமையைப் பறைசாற்றுகின்றன!
உலகின் முதல்மொழி தமிழை மதியுங்கள்
உலகின் முதல்மனிதன் தமிழனை மதியுங்கள்!
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தமிழன் நாகரிகத்திற்குப் பின் தான் மற்ற நாகரிகம்!
அடி மேல் அடி விழுந்தது தமிழை மதியாதோருக்கு
அடிமை அல்ல தமிழன் உணர்த்தியது உலகிற்கு!