ஷாத்தானா உன்னை வழிகெடுத்தான்

கருப்பை மூலையில் நீ இருந்த போது

கருக்கறுவாள் கொண்டு உன் கழுத்தை

யாரும் அறுத்ததில்லை! அறுத்திருந்தால் உருத்தெரியாமல் அழிந்திருப்பாய்!



அணுக்கதிர் பரப்பி யாரும் கருச்சிதைவு செய்யவில்லை! செய்திருந்தால் சூல்பையே உனக்கு சுடுகாடாய் ஆகியிருக்கும்!



எங்கள் கூடுகள் இருந்த மரங்களை வேரோடு சாய்க்கிறாயே!

உன் இல்லச் சுவரை நீ பெற்ற பிள்ளை கிறுக்கினால் கூட பொறுப்பதில்லை!



நீ அலை பேசியில் உறவாடிப் பொழுது போக்க,

எங்கள் உயிர்களை ஏன் களவாடி கழுவேற்றுகிறாய்?



உன் பொழுது போக்க நாங்கள்

அழுது தீர்க்கவா?



நாங்கள் விடும் எச்சங்களில்

இருந்து விருட்சமான

விதைகளே பல லட்சங்கள்!

உன் லட்சணம் என்ன தெரியுமா?

ஒரு மரத்தைக் கூட நட்டு வளர்த்ததில்லை!



என் இறகைக் கூட உருவ உரிமை இல்லை உனக்கு;



என் உயிர் பறித்து ஆறறிவு என்கிறாயே!

வெட்கமாயில்லை உனக்கு?



பறிக்கிறாய் உயிர்களை!

கருவறுக்கிறாய் இனங்களை!

அழிக்கிறாய் காடுகளை!



மனதை எங்கு தொலைத்தாய் மனிதா?



நீ இப்படித் தான் என்று

ஏதேன் தோட்டத்து ஆதாம் ஏவாளுக்கு அன்றே தெரிந்திருந்தால் ஆதாம் ஆண்டவனிடம் ஓர் ஆணுறை கேட்டிருப்பான்!



ஏவாளுக்கு ஒரு மாலா - டி

தேவைப்பட்டிருக்கும்;

மலடியாய் இருக்க இன்புற்றிருப்பாள்!



ஷாத்தானா உன்னை வழி கெடுத்தான்?!

மனிதா! உன்னைத் தான் கேட்கிறேன்!

ஷாத்தானா உன்னை வழிகெடுத்தான்?!

எழுதியவர் : பாபுகனி மகன் (9-Oct-19, 7:58 pm)
சேர்த்தது : Babu Ganison
பார்வை : 699

மேலே