தற்கொலை ஒரு தீர்வல்ல

தற்கொலை ஒரு தீர்வல்ல!



மரணம் ஒரு முற்றுப் புள்ளியல்ல!
தற்கொலை ஒரு தீர்வல்ல!



தோழனே !
உன்னைத் தூக்கி விட
கைகள் பல இருக்கும் போது
தூக்குக் கயிறு எதற்கு?

கயிற்றிலேயே நடந்து
வித்தை செய்து
வயிற்றை நிரப்பி
பிழைக்கும்
மனிதர்களை
தெருவோரம் பார்த்ததில்லையோ!
அவன் கயிற்றில்
வாழ்கிறான்!
நீ ஏனப்பா சாகிறாய்?

வாழ்க்கை ஒரு
பல்கலைக்கூடம்!
பயிலப் பாய்ந்து செல்!
ஏன் ரயில் முன் பாய்கிறாய்!

குயிலிடம் பாடல் பழகு!
மயிலிடம் ஆடப் பழகு!
துன்பங்கள் தாங்கிப்
பழகு!
துக்கத்திலும்
தூங்கப் பழகு!

துக்கத்தின் பக்கத்தில்
தான் நிம்மதியும்
சந்தோஷமும்
என்று வாழ்ந்து
பழகு!


உடுக்கை உடையவன்
அமரர் தம் அழிவை
தடுக்க விஷத்தை
உண்டான்!
துடுக்காய் இருக்கும்
உனக்கு விஷக்குடுவை
தான் எதற்கு?
அழிப்பவனே காக்கிறான்
ஆக்குபவன் நீ அழியலாமோ?

அடுக்கடுக்காய் வெற்றி பல
அடுத்தடுத்து காத்திருக்க
காரியம் கை கூடும் முன்
வீரியமெல்லாம் வீணாய்ப்
போகலாமோ?
வீரத்தை சாவிடமா
காட்டுவது?

தேர்வில் தோல்வி,
காதல் தோல்வி,
ஆசான் திட்டினார்,
அப்பா அம்மாவ
பிடிக்கல
அவமானம் தாங்கல
அதனால சாகுறேன்

காரணம் பல
கணக்காக சொல்லி
யாரைப் பழி வாங்க
உன்னை பலி
கொடுக்கிறாய்?

அன்ரூ ஜாக்சன் என்றால்
யாரென்பாய்!
அன்ரூ ஜான்சன் என்றால்
நீயே கூறென்பாய்!
லிங்கன் யாரென்றால்
அமெரிக்க தேசத்தின்
கறுப்பு சூரியன் என்பாய்!
ஜாக்சனும் அதிபர்தான்
ஜான்சனும் அதிபர்தான்
லிங்கன் மட்டும்
புகழின் அங்கமானதெப்படி?

சாகிறோம் என்பவர்கள்
ஆபிராம் லிங்கனை
பாருங்கள்!

தோல்விகள் எல்லாம்
தொலைத்துக்கட்ட
கங்கணம் கட்டி நின்றன
லிங்கனின் வாழ்வில்,!
துயரங்களெல்லாம்
சங்கமித்து நின்றன!
லிங்கனின் வாழ்வில்!
காதலில் தோல்வி!
மணவாழ்வில் தோல்வி
அழகுமில்லை!
பணமுமில்லை!
அந்தஸ்துமில்லை!

அரசியல் வாழ்வில்
எடுத்துவைத்த பாதை
எங்கும் தோல்வி!
எதிலும் தோல்வி!
தோல்வி!
தோல்வி! தோல்வி!
என்று தோல்வியே
இவரைப்பார்த்து
இரங்கும் அளவிற்கு
தோல்வி!

உள்ளம் உடைந்து
நரம்பீனமடைந்து
மனம் சிதைந்து
பைத்தியமாய்
சில காலம் ...
பரதேசியாய்
சில காலம்..

ஆனால்

பொறுத்தார்
பூமியாழ்வார்!
பொறுத்தாரின்
உள்ளத்தில்
சாமியே வாழ்வார்!

ஆம்!

பின்னொரு நாளில்
வந்ததெல்லாம்
தங்க வெற்றி!
காலத்தினால் மங்கும்
வெற்றியன்று!
காலாகாலத்திற்கும்
தங்கும் வெற்றி!
லிங்கன் முன்
தோல்விகள்
மண்டியிட்டன!
வெற்றிகள்
சுங்கம் கட்டின!

அதிபரானான்!
அடிமை
விலங்கை
அறுத்தெறிந்தான்!
அன்புச் சுடர்
அழியாச் சூரியனானான்!
அவன் மேற்கும்
உதித்தது!
இரவும் வெளுத்தது!


ஆதலால் நண்பா
சொல்கிறேன்
கேள்!

வெற்றி என்பதென்ன!
தோல்விகளின்
பரிணாம வளர்ச்சி தானே!

தோல்வி என்பதென்ன?
பூப்படையாத வெற்றி
தானே!


மழைத்துளியை உயிர்த்துளியாய்
சேகரிக்கும் செந்தமிழ் நாட்டில்
உயிர்த்துளியை சிதறடிக்கும்
நிலைக்கு சித்தம்
சிதைந்ததேன்!

யாதும் ஊரே
யாவரும் உறவென்றான்
உன் பாட்டன் கணியன்!

காக்கை குருவி எம் ஜாதி
என்றான் பாரதி!

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக
என்றான் முப்பாட்டன்
வள்ளுவன்!

முல்லைக்குத் தேரீன்று
மயிலுக்கும் மனமிரங்கி
பயிர்வாடும் போது
உயிர்வாடும் நாடாம்
தமிழ்நாட்டில்

உன் உள்ளப்புண்
ஆற்றிடமாட்டோமா?
இல்லை,
உதவிக்கரம் நீட்டமாட்டோமா?

அன்பினும் வலியதெவ்வுலகிலுமில்லை!
நம்பிகெட்டோரென்று எக்கதையிலுமில்லை!
தம்பி! உலகினை ஸ்தம்பிக்க
வைக்கும் ஆற்றல்
உன்னிடம் குவிந்து கிடக்க...உன்
ஏக்கமெல்லாம் ஊக்கமாய்
ஆகட்டும்!

தற்கொலை என்பது
ஒரு கொலையல்ல!
பல தலைமுறைக் கொலை!
நீ உன்னை மட்டும்
கொல்லவில்லை!
உன்னோடு சேர்த்து உன்
தலைமுறையையும்
கொல்கிறாய்!

உணர்ந்து கொள்!
உன் சிந்தை தான்
உந்தாய்
உழைப்பு தான்
உன் தந்தை!
வெற்றி என்பது
தனித்திருப்பதன்று!
நீயே வெற்றிதான்!
உனக்குள்தான் வெற்றி!
தேடு,,!
தேடித் தேடித் தொலை!
தொலையும் வினாடியில்
வாகை சூடுவாய்!

சூழலைச் சூலாக்கு!
சிந்தையெல்லாம் மக
ரந்தமாக்கு!
வெற்றிக் கனியைச்
சொந்தமாக்கு!


அவமானத்தால்
தற்கொலை செய்கிறேன்
என்கிறாயே!
தற்கொலையே
அவமானமில்லையா?


ஆதலால் மீண்டும்
சொல்கிறேன்.

மரணம் என்பதும்
முற்றுப்புள்ளியும் அல்ல!
தற்கொலை
ஒரு தீர்வுமல்ல!

எழுதியவர் : பாபுகனி மகன் (9-Oct-19, 8:16 pm)
சேர்த்தது : Babu Ganison
பார்வை : 113

மேலே