அங்கமெல்லாம் பூத்தவள்

அங்கமெல்லாம் பூத்தவளே - இயற்கை
அழகையெல்லாம் கோர்த்தவளே
தங்கமுலாம் பூசியமேனியவள்
தரைமிண்ணும் தாரகையே!

ஓடையிலே மலர்ந்த
ஒய்யாத தாமரையே
பனிவாடையிலே மெய்வருடி
வம்பளக்கும் காரிகையே!

முத்தமழை தினம்வழங்கும்
மோகனமாம் பூவிதழில்
நித்தம் நான் தேனருந்தி
நினைவெல்லாம் மகிழ்ந்தேனே!

தூண்டில் மீனெனவே
துடிதுடிக்க எனைவிடுத்து
மீண்டுமென்முன் தோன்றாது
மின்னலென நீ மறைந்தாய்

இளம் பூக்காட்டில் காதலனை
காக்க வைத்துவிட்டு
மாக்கடலின் சிப்பிக்குள்
மணிமுத்தாய் நீ புகுந்தாய்

உடல் வீணையினை மீட்டி பல
வித்தைகளை நான் புரிய
ஆணையிடும் என் மனதின்
ஆவகளை நீ அறியலையோ?

பல்லியொலி எழுப்பி
பஞ்சணைக்கு எனை அழைத்து
நெஞ்சோடு நெஞ்சணைத்து
கொள்ள சுகம் தந்தவளே

அந்தி சந்தியிலே
அணுவணுவாய் இரசித்தவளே
சின்னஞ்சிறு மனதை
விலக்கி வைத்து சிதைக்காதே!

என் அஞ்சுகமே!
கொஞ்சி வந்து நஞ்செனக்கு
கொஞ்சம்போல் தந்துவிடு
ஓயாத என் காதல் அலை
உன் நெஞ்சில் வீழ்ந்து ஓய்ந்திடட்டும்
சாயாத எந்தன் உடல்
சாக்காட்டில் சாய்ந்திடட்டும்
காதல் என்ற இலக்கியங்கள்
கைகொட்டிச் சிரித்திடட்டும்
சாதலென்ற வெங்கொடுமை
சரித்திரத்தில் நிலைத்திடட்டும்
காற்றோடு காற்றாய்
என்மூச்சு கலந்திடட்டும்
இன்றோடு என் காதல்
இம்மண்ணுக்குள் புதைந்திடட்டும்
நாளைக்கு முடிந்தால்
நீ வந்து பால் ஊற்று
என் காதல் விதை முளைத்து
மரமாய் வளரட்டும்
எதிர் கால சந்ததிக்கு
அது வந்து நிழல் தரட்டும்!

எழுதியவர் : கிச்சாபாரதி (11-Oct-19, 12:40 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 145

மேலே