வையமெலாம் முந்தோடி ஆள முயல்கின்றோம் அந்தோ - உறுதி, தருமதீபிகை 497
நேரிசை வெண்பா
வந்தோம்; இனிதாக வாழ்கின்றோம்; வையமெலாம்
முந்தோடி ஆள முயல்கின்றோம்; - அந்தோபின்
போகும் நிலையறியோம்; போற்றோம்; அதற்கொன்றும்
சாகுநாள் ஆமோ தவம். 497
- உறுதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
இவ்வுலகில் வந்து பிறந்தோம்; இனிதாக வாழ்ந்து வருகிறோம்; மேலும் உலகை எல்லாம் ஆள வேண்டும் என்னும் ஆவலோடு அலைந்து திரிகிறோம்; அந்தோ! போகும் நிலையை உணராமல் புலையாடி நிற்கிறோம்; சாகும் நாள் யாது வரும்? அதனை யூகமாய் உணர்ந்து உய்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.
தனது வாழ்வின் நிலைமைகளை ஆழ்ந்து சிந்தித்துத் தனக்கு வேண்டிய உறுதி நலங்களை ஓர்ந்து கொள்வது மனிதனுடைய உயர்ந்த ஞானமாய் ஒளி மிகுந்துள்ளது
பல பிறவிகளிலும் படிந்துழன்று நெடிது திரிந்து முடிவில் அரிய மானிடராய் வந்திருக்கும் அருமையை உணர்ந்து உரிமை புரிந்து கொள்ள ’வந்தோம்’ என்றது. வரவுநிலை தெரிந்து செலவுநிலை அறிந்து உறவுநிலை தெளிந்து உறுதி நிலையை அடைந்து கொள்வதே உயர்ந்த ஞானத்தின் முடிந்த நிலையாம்.
பெற வேண்டியதைப் பெறாமல் பிழைபட்டு நிற்பது பேதைமையாதலால் அது ஏதம் என நின்றது. தெளிந்த மேதைக்குப் பயன் இழிந்த வழிகளை நீங்கி உயர்ந்த நிலையை உரிமையாக மருவிக் கொள்வதேயாம்
எல்லாவற்றிலும் உயர்ந்து என்றும் அழியாத இன்ப நிலையமாயிருப்பது பரம்பொருளே; அந்த இன்பப் பொருளை அடைந்த பொழுதுதான் துன்ப இருள் தொலைந்து ஒழியும். தனி முதலான அது புனித நிலையுடையது; அந்த இனிய நீர்மையைத் தழுவிய அளவு மனிதன் தெய்வமாய் இன்ப நிலையை எய்துகின்றான்.
எவ்வழியும் பிறவி துன்பமுடையதாதலால் அதனை நீக்கியருள வேண்டும் என்று இறைவனை நோக்கி உருகி உணர்வுடை உயிர்கள் ஊக்கி எழுகின்றன. நூலறிவு தெளிந்த பொழுது வாலறிவனை வளைந்து கொண்டு வாழ்த்தி வணங்குகின்றது; அன்புரிமையோடு புகழ்ந்து போற்றி இன்ப நிலைகளை விழைந்து வேண்டுகின்றது. துதி மொழிகள் எல்லாம் கதி விழைவுகளோடு கனிந்து வருகின்றன.
செங்கண் குறவர் கருங்காட்டு வளர்த்த
பைங்கொடி வள்ளி படர்ந்தபுய மலையோய்!
இமயம் பூத்த சுனைமாண் தொட்டில்
அறிவின் தங்கி, அறுதாய் முலைஉண்(டு) 40
உழல்மதில் சுட்ட தழல்நகைப் பெருமான்
வணங்கி நின்றேத்த, குருமொழி வைத்தோய்!
'ஓம்'எனும் எழுத்தின் பிரமம் பேசிய
நான்மறை விதியை, நடுங்குசிறை வைத்து,
படைப்பு முதல்மாய, வான்முதல் கூடித் 45
தாதையும் இரப்ப, தளைஅது விடுத்தோய்!
வெட்சி மலர்சூழ்ந்த நின்இரு கழற்கால் 56
குழந்தை அன்பினொடு சென்னிதலைக் கொள்ளுதும்
அறிவுநிலை கூடாச் சில்மொழி கொண்டு,
கடவுள் கூற உலவா அருத்தியும்,
சனனப் பீழையும், தள்ளாக் காமமும், 60
அதன்படு துயரமும் அடைவுகெட்(டு) இறத்தலும்,
தென்புலக் கோமகன் தீத்தெறு தண்டமும்,
நரகொடு துறக்கத்து உழல்வரு பீழையும்
நீளாது இம்பரின் முடித்து,
மீளாக் காட்சி தருதியின் றெனவே. – வேலன் வணக்கம், பாயிரம், கல்லாடம்
பிறவித் துயரை நீக்கிப் பேரின்ப நிலையை அருளும்படி முருகக் கடவுளை நோக்கிக் கல்லாடர் இவ்வாறு துதித்து வேண்டியிருக்கிறார். உலகங்களையெல்லாம் படைக்கின்ற பிரம தேவனையும் சிறையிலிட்டுப் பின்பு சிவபெருமான் வேண்ட அருள் புரிந்து வெளியே விட்ட முருகநாதா! எனது பிறவிச்சிறையை நீக்கி, ‘எனக்குப் பேரின்ப முத்தி தந்தருளுக’ என்று அன்பு கனிந்த நெஞ்சராய்க் கவிஞர் வேண்டியுள்ள உரிமை உவகை புரிந்து வருகின்றது. சிறந்த அறிவு நிறைந்த பொழுது அது உயர்ந்த உண்மையை உறுதியாக விழைந்து கொள்கின்றது.
’வையமெலாம் ஆள முயல்கின்றோம்’ சீவர்களுடைய இயல்பான மையல் மயக்கத்தைக் காட்டியிது உய்தியை உணர்த்தியுள்ளது. மனிதனது ஆசைக்கு எல்லையில்லை. எது கிடைத்தாலும் மேலும் வேண்டுமென்று மூண்டெழுந்து திரிகின்றான். உலகம் முழுவதையும் ஆள எண்ணுகின்றான். அவ்வாறு மண் ஆண்டு மண்ணோடு மண்ணாய் மாண்டு போன மன்னர்கள் கதிகளை எண்ணியுணராமல் ஏமாந்துழல்கின்றான். முடிவு தெரியாமல் முடிந்து போவனவே சீவ சுபாவங்களாய் முடிந்திருக்கின்றன.
மிகுந்த பொருளாசையுடைய ஒருவன் அதனை மருள் மண்டி விழைந்தான். தான் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமென்று கடவுளை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான்: தெய்வம் தோன்றியது; உனக்கு யாது வேண்டும்? என்றது. தீண்டியது எல்லாம் பொன்னாக வேண்டும் என்று வேண்டினான். ’அவ்வாறே ஆகும்’ என்று கூறி அது மறைந்து போயது. அவன் விரைந்து வீட்டுக்கு வந்தான். பண்டங்களைத் தொட்டான்; யாவும் பொன் ஆயின, உவந்து துள்ளினான்; விழைந்து போய் மனைவியைத் தழுவினான்; அவள் பொன்னாய் முன்னே உயிரின்றி நின்றாள்: அன்னோ என்றலறினான்; பசிமிகுந்தமையால் அன்னத்தை எடுத்து உண்ணப் போனான்; அதுவும் பொன்னாய் மாறி நின்றது; யாதும் தெரியாமல் அப்பேதை மகன் விழித்தான்; செய்த பிழையை நினைந்து வெய்துயிர்த்தான்; பட்டினி கிடந்து பதைத்துச் செத்தான்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமெனக் கடவுளைமுன்
தொழுது வேண்டி
இட்டமுடன் சித்திபெற்றான் இருங்களிப்பால் துள்ளிவந்தான்
எலலாம் தொட்டான்
ஒட்டிநின்ற யாவையுமே பொன்னாக உறுபசியால்
உள்ளு டைந்தே
பட்டினியால் பதைத்திறந்தான் படுகேடு தெரியாமல்
பட்டான் அந்தோ!
தனக்கு நேருகிற முடிவை உணராமல் சீவர்கள் இவ்வாறு மாய மயக்கங்களில் மடிந்து முடிந்து போகின்றனர். பேதைப் பித்தங்கள் பெருகியிருத்தலால் ’பேய்ப்பய உலகம்’ என வையத்தாரை நோக்கி வானத்தார் வைது வருகின்றனர். ’இருளுடையுலகம்’ என கம்பர் கூறியது பல பொருள்களையுடையது. ஈன இருளும், ஊன மருளும் ஞான ஒளியால் நீங்குகின்றன; ஆகவே அதனையுடையவர் மானவர் திரளில் மகிமை பெற்று மிளிர்கின்றார்; இனிய சீலம் அரிய தவம் ஆகிறது.
சாகும் நாள் ஆமோ தவம்? ஆகாது என்பதை ஓகாரம் உணர்த்தி நின்றது.
போகும் நிலையை எதிரறிந்து சாகும் முன்னமே செய்ய வேண்டியதைச் செய்து கொள்ளாதவன் உய்தி இழந்தவனாய் வெய்துயிர்த்து விளிகின்றான்.
தானம், தவம், தருமம் என்பன ஆன்ம ஊதியங்களாய் மருவியுள்ளன. நாளும் அழிவு நிலையில் உள்ள மனிதன் தன் உயிர்க்கு உறுதிநலனை ஓராதிருப்பது பேரிழவாகின்றது.
நேரிசை வெண்பா
தேளே றியவிடம்போல் தீயபசி உள்ளேற
நாளே ரிடல்போல் நவையாமே - மூளும்
மரணம் வருமுன் மதிதெளிந்து நல்ல
அரணம் அடையார் அவம்.
தேள் கொட்டிய விடம்போல் பசித்தீ உள்ளே வருத்த, அன்று போய் நாள் ஏர் வைத்து உழுது விதைக்கப் போனவன் போல் சாவு நேர்ந்தபோது ஒருவன் தருமம் செய்ய எண்ணுவது ஆகும்.
இந்த உவமைக் குறிப்பில் உள்ள நயத்தை ஊன்றி உணர்ந்து உறுதி நலனை ஓர்ந்து கொள்ள வேண்டும்.
அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)
பசிமிகுந்த பின்நெல்லை விதைப்பதுபோல் வீட்டில்தீ
..பற்றிக் கொண்டு
நசியும்போ(து) அதையவிக்க ஆறுவெட்டல் போலும்போர்
..நடக்குங் காலை
விசிகநூல் கற்கமுயல் வதுபோலுங் கபமிஞ்சி
..விக்கிச் சிக்கி
இசிவுகொண்டு சாங்காலத் தெப்படிநீ அறம்புரிவாய்
..இதயப் பேயே. 1 அறஞ்செயல், நீதிநூல், மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
ஒரு உண்மையை விளக்கப் பல உவமானங்கள் விழி தெரிய வந்துள்ளன. காலம் உள்ள பொழுதே நல்ல உறுதியை நாடிக் கொள்ளுக; இல்லையேல் அல்லல்கள் எல்லையின்றி மூடிக் கொள்ளும்; முடிவு தெளிந்து விடிவு காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.