ஒன்றும்,நீ ஓராமல் ஊனமுற நின்றாயேல் என்றுநீ காண்பாய் இதம் - மறதி, தருமதீபிகை 487
நேரிசை வெண்பா
முன்னநாம் எங்கிருந்தோம்? மூண்டிங்கே ஏன்வந்தோம்?
இன்னம்போய் எங்கே இருப்புறுவோம்? - அன்னவகை
ஒன்றும்,நீ ஓராமல் ஊனமுற நின்றாயேல்
என்றுநீ காண்பாய் இதம். 487
- மறதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
நாம் முன்பு எங்கு இருந்தோம்? இங்கு ஏன் வந்தோம்? இனி எங்கே போகப் போகின்றோம்? போகுமுன் செய்ய வேண்டியது என்ன? என இன்னவாறு நிலைமைகளை நினைந்து பாராமல் மறந்திருப்பது மதி கேடாம்; உடனே கதி காண்க என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் வந்த வரவைச் சிந்தனை செய் என்கின்றது.
எண்ணங்கள் சீவ ஒளிகளாய் எழுகின்றன. அவை பல வழிகளில் வெளி வருகின்றன. உலக நிலைகள் பலவற்றையும் எண்ணி அறிகின்ற மனிதன் தன் உண்மை நிலையை யாதும் அறியாமல் மறந்து விடுவது பெரிய மாய மயக்கமாயுள்ளது.
நான் யார்? ஏன் இங்கு வந்தேன்? என்ன செய்ய உரியேன்? முன்னும் பின்னும் யாதும் தெரியாமல் இன்னவாறு வந்துள்ளேனே! என எவன் சிந்தனை செய்ய நேர்கின்றானோ அன்றே அவன் தன்னை அறியத் தலைப்பட்டவன் ஆகின்றான்.
தத்துவஞானி, சீவன்முத்தன் என மேவி வருபவர் எவரும் இந்த வித்தக நிலையிலிருந்து தான் விளைந்து வருகின்றனர்.
எதை அறிய வேண்டுமோ அதை அறிவது புனித ஞானம் ஆகின்றது; ஆகவே அதனையுடையவன் புண்ணியவானாய்த் தனி மகிமையடைகின்றான். முனிவன், யோகி என்னும் பெயர்கள் உண்மையான மனன சீலங்களை உணர்த்தி வருகின்றன.
எளிமையும் இனிமையுமான இந்த நிலையில் எவருடைய சிந்தனையும் செல்வதில்லை; தவறான வழிகளிலேயே யாவரும் தாவி ஓடுகின்றனர். ஆவி அலமந்து அவலமாய் விடுகின்றனர்.
உலகக் களிப்புகளிலேயே உழன்று திரிந்து பல பிறவிகளிலும் பழகி வந்துள்ளமையால் அந்தப் பழக்க வாசனைகள் மனிதனைப் பாழான வழிகளில் இழுத்துப் போகின்றன.
அசுத்த வாசனைகள் மக்களை.அவல நிலையில் ஆழ்த்துகின்றன. சுத்த இயல்புகள் உத்தம நிலையில் உயர்த்துகின்றன.
நல்ல நீர்மைகளையுடையவர் சித்த சாந்தராய்ச் சிறந்து திகழ்கின்றார், அவரது அறிவு புனிதமாய் உள்ளமையால் ஒளி மிகுந்து உண்மை நிலையைத் தெளிவாக உணர்ந்து கொள்கின்றது.
நிலையில்லாத அநித்தியப் பொருள்களை நிலை என்.று கொள்வது புலை அறிவாய்ப் புன்மையடைகின்றது. நிலையுடைய நித்தியப் பொருளை நினைந்து தெரிவது உத்தமமான உண்மையறிவாய் உயர்ந்து நன்மைகள் பல சுரந்து நலம் பல பெறுகின்றது.
1. விவேகம், 2. நிராசை, 3. மன அமைதி, 4. ஆன்ம நோக்கம் என்னும் இந்நான்கும் முத்தியின்பத்தை அருளுகின்ற உத்தம சாதனங்களாய் அமைந்திருக்கின்றன. இந்த நீர்மைகளால் பரிபக்குவம் அடைந்த போதுதான் அந்த மனிதன் அதிசய மேதையாய் ஆனந்தம் அடைகின்றான்.
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
சாதனம் இன்றி ஒன்றைச்
..சாதிப்பார் உலகில் இல்லை;
ஆதலால் இந்த நான்கும்
..அடைந்தவர்க்(கு) அறிவுண் டாகும்;
நூதன விவேகி உள்ளம்
..துழையாது; நுழையு மாகில்
பூதசன் மங்கள் கோடி
..புனிதனாம் புருட னாமே. 11 கைவல்யம்
இதன் பொருளை ஈண்டு இனிது சிந்திக்க வேண்டும். வைய மையலில் பாய்ந்து பாழாகாமல் தன்னுடைய மெய்நிலையில் ஆழ்ந்து தோய்ந்து உய்தி பெறவுரியாரை இது உணர்த்தியுள்ளது. உயர்ந்த அறிவு படைத்திருத்தும் உண்மையான உறுதியை நாடாமல் மனிதன் புன்மையாய் இழிந்து போவது பொல்லாத கேடாய் விளைந்து வருகின்றது.
’என்று நீ காண்பாய் இதம்?’ ஒன்றையும் நினைந்து பாராமல் உண்மையை மறந்திருக்கும் புன்மை யாண்டும் யாதும் நன்மை காணாதாதலால் அதனை ஈண்டு இது எடுத்துக் காட்டியது. எதையும் பகுத்தறிந்து பார்க்கின்ற உயர்ந்த உணர்வுடைய பிராணியாய் மனிதன் பிறந்திருக்கிறான்; பிறந்தும் பிறவிப் பயனை உணர்ந்து கொள்ளாமல் ஒழிந்து போகின்றான். அப் போக்குகள் ஆக்கக் கேடுகளாய் அவலம் தருகின்றன. நோக்கிக் கொள்வது பாக்கியமாகின்றது என்றும், உண்மை நினைவு உயர்நலம் அருளுகின்றது என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.