திருப்பிரமபுரம் - சம்பந்தர் தேவாரம் பாடல் 4

ஓரடியே பொருள் வேறுபட்டு நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாத அந்தாதி எனப்படும்.

ஏகம் – ஒன்று, பாதம் – அடி.

முதல் திருமுறையில் உள்ள 127 வது திருப்பிரமபுர பதிகம் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டது. இது ஏகபாத அமைப்புடையது.

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன். பாடல் எண்: 4

குறிப்புரை :

கன்று குணிலாக எறிந்து விளவின் கனியைக் கொண்ட நாரணனைப் பிரகாசஞ் செய்யப்பட்டு நின்மலமாயிருந்துள்ள தனது பெரிய திருமேனி யிலே ஒன்று பாதியாக வைத்துள்ளான்.

தீ என்றது தி எனக் குறுகிநின்றது.

கழுதரு என்றது கழ்தரு என நின்றது.

குணில் - குறுந்தடி, பறையடி, கவண்.

மாறுபாடாய்க் கதறப்பட்ட புத்தனது தலையிலே அக்கினியைச் சொரிந்து மிக்க பயத்தோடும் விழுகின்ற இடியை விழும்படி ஏவிப் புத்தரை வேரறுத்தானும் தானேயன்றி யானன்றாகும்.

தீ என்றது தி எனவும், காழ்தரு என்றது கழ்தரு எனவும், ஏங்கு என்றது எங்கு எனவும் குறுகி நின்றன.

தனது பரிபூரணத்திலே தன்னையிழந்து இரண்டாய் விசுவம் உருகித்தான் விஷமாகத் தூஷணப்பட்டு நிற்கின்ற எனக்கும் குருமூர்த்தியாய் வந்து என் பிறவியை ஒழித்துத் தனது பேரின்பமாகிய பரிபூர ணத்திலே எனது அடிமை குலையாமல் இரண்டற வைத்தவன்.

மேலே சொல்லப்பட்ட செய்திகளெல்லாம் உடையவன் எத்தன்மையன் என்றால் எங்கும் பிரகாசியாய் நின்ற, கீர்த்தியினால் சிறக்கப்பட் டுள்ள, இயமனால் பூசிக்கப்பட்ட வெங்குரு என்னும் திருப்பதியை விரும்பியுள்ளான்.

வெங்குரு என்பதும் சீகாழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Oct-19, 7:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே