திருப்பிரமபுரம் - சம்பந்தர் தேவாரம் பாடல் 5

ஓரடியே பொருள் வேறுபட்டு நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாத அந்தாதி எனப்படும்.

ஏகம் – ஒன்று, பாதம் – அடி.

முதல் திருமுறையில் உள்ள 127 வது திருப்பிரமபுர பதிகம் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டது. இது ஏகபாத அமைப்புடையது.

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன். பாடல் எண்: 5

குறிப்புரை :

சுடுநிலமாகிய மயானத்தை நடமாடும் இடமாகக் கொண்டும், முப்புரங்களையும் நகை செய்து சுடப்பட்ட வெற்றிப் போரையுடைய தும்பைமாலைக் கடவுள்.

சூடார் என்றது சுடர் எனவும், ஈமம் என்றது இம் எனவும் குறுகி நின்றன. துரோணம் என்றது தோணி எனமருவிற்று.

என் உச்சிக்குச் சூடாமணியுமாய் என்மேல் வைத்த மாலினை உடையனுமாய் யாகத்தின்கண் வந்த யானையை வடிவொழித்துப் போர்க்கும் தன்மையை உடையவன்.

சூடாமணி என்றது சுடர்மணி எனவும், மாலி என்றது மாளி எனவும், தோல் என்றது தோள் எனவும் நின்றன. மாலையுடையவன் - மாலி. தோல் - யானை.

சூரியனுடைய களங்கத்தைக் கழுவப்பட்ட சமுத்திரம் போன்ற ஜனனக் கடலிலே கீழ்ப்பட்டு அழுந்திக் கெடுகின்ற ஆன்மாக்களுக்குக் கைப்பற்றிக் கரையேறும் தெப்பமாகப் பிரணவம் என்கிற மந்திரத்தை அவரது செவியின் கண்ணே உண்டாக்கா நின்றவன்.

மண்ணி என்பது மணி என இடை குறைந்து நின்றது. புரந்தவன் என்றது புரத்தவன் என வலித்தல் விகாரமாயிற்று.

விளக்கத்தையுடைய நவரத்தினங்களாலே அலங்கரிக்கப்பட்ட மாளிகை சூழ்ந்த திருத்தோணிபுரத்திலே வீற்றிருக்கும் சிவன் இத்தன்மையன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Oct-19, 8:03 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 65

மேலே