கிருஷ்ண கானம்
கிருஷ்ண கானம்.
நண்பர்களே உங்களுக்காக இதோ ஒர் அருமையான ஆய்வு கட்டுரை.
கவிஞர் என்றால் அது கன்னதாசன் தான்.
கன்னதாசன் எழதிய ஒரு தனிப்பாடல் தொகுப்பு "கிருஷ்ண கானம்". மொத்தம் பதிமூன்று பாடல் கொண்ட தொகுப்பு அது. அற்புதமான இனிய பாடல் கொண்ட அந்த " கிருஷ்ண கானம்" முதல் பாடலாக
" புல்லாங்குழல் கொடுத்து மூங்கில்களே!
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்! என்று ஆரம்பிக்கும். அற்புதமான அந்த இனிய பாடலின் ஆய்வு தான் இந்த கட்டுரை.
அது ஏன் கன்னதாசன் புல்லாங்குழலை புருஷோத்தமன் புகழ் பாட சொல்கிறார். புல்லாங்குழலில் இருந்து வரும் ஓசை, ஒலி, இசை அனைவர் மனதையும், ஆன்மாவையும் கவரகூடியது. ஓர் அற்புத இசை கருவி புல்லாங்குழல். அப்படிபட்ட மகோன்னதனமான இசை கருவி அவ்வப்போது கண்ணனின் உதட்டிலும் உறவாடும், இடுப்பிலும் உறவாடும். ஆண்டாள் கண்ணனிடம் சங்கை கேட்டாள். ஆனால் நம் கன்னதாசன் புல்லாங்குழலை கண்ணனின் புகழ் பாட விரும்புகிறார் . காரணம் , சங்ககை கண்ணன் எடுத்து ஊதினால் அது போருக்கு அச்சாரமாக அமைந்துவிடும். கன்னதாசன் காதலை விரும்புபவர், மென்மையானவர், ஆகையால் புல்லாங்குழலில் அந்த கண்ணன் புகழ் பாட சொல்கிறார்.
இரண்டாவது வரி
"வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன் "
கவி நயத்திற்க்காக போகிற போக்கில் கவிதை எழுதுபவர் அல்ல கவிஞர், இந்த வரியில் ஒரு மகாபாரத கதை உள்ளது.
பீமன் தினமும் காலையில் கங்கை ஆற்றில் ஓரு குறிப்பிட்ட பகுதியில் குளிப்பது அவன் வழக்கமான ஒன்றாக இருந்தது. இதை அறிந்த துரியோதனன் அந்த பகுதியில் மட்டும் நிறைய ஈட்டிகளை நட்டு வைத்து , அதன் முனைகளில் விஷத்தையும் தடவி இருந்தான். பீமன் வருவான், ஆற்றில் வழக்கம்போல் ஆற்றில் குதிப்பான், ஈட்டியால் குத்து பட்டு விஷம் அவன் உடம்பில் இறங்கி அவன் இறந்துவிடுவான், இது துரியோதனனின் கொடிய எண்ணம். இந்த
அகில உலகத்தையே ஆளும் அந்த பரந்தாமன் , கிருஷ்ணன், மாய கண்ணன் பீமன் உயிர் விடுவதை தடுத்து நிறுத்த, அந்த அத்துனை ஈட்டிகளின் மேல் வண்டாக அவதாரம் எடுத்து அமர்ந்து கொண்டான்.
குளிக்க சென்ற பீமனை பார்த்து நீ அன்றாடம் குளிக்கும் பகுதியில் முழக்க வண்டுகள் பரவலாக உட்கார்ந்து உள்ளது. நீ இப்போது அந்த இடத்தில் குதித்து குளித்தால், வண்டு உன்னை பதம் பார்க்கும், அல்லது உண் பலம் பொருந்திய உடல் அந்த வண்டுகளை ஆழித்துவிடும். ஆகவே இரண்டும் வேண்டாம், நீ வேறு இடத்தில் குளி என்றார் . துரியோதனன்
திட்டம் அந்த
மாய கண்ணனால் தகர்த்தபட்டது. பீமன் சூழ்ச்சியில் இருந்து காப்பாற்ற பட்டான். அது தான் "வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்".
அடுத்த வரி,
பண்ணிர் மலர் சொரியும் மேகங்களே, எங்கள் பரந்தாமன் மெய் அழகை பாடுங்களேன்.
கண்ணன் அவதரித்தார். உடனே அவரை ஒரு கூடையில் மிக பத்திரமாக வைத்து தன் தலையில் சுமந்த வண்ணம் வசுதேவர் கோகுலத்தை நோக்கி பயணிக்கிறார். அப்போது மேகம் மெல்லிய தூரல் அல்லது சாரல் அவர் மேல் பட செய்கிறது. உடனே நாகம் அந்த தூரலில் பரந்தாமன் நினையாமல் இருக்க குடையாக மாறுகிறது. அது என்ன மெய் அழகு, பரந்தாமனின் பிறந்த மேனி, அந்த பரந்தாமனின் மெய் அழகை பார்த்த ஒரே சாட்சி மேகம். ஆகவே பண்ணீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய் அழகை பாடுங்களேன்.
அடுத்த," தென் கோடி தென்றல் தரும் ராகங்களே எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுஙகளேன்".
வடக்கில் கிருஷ்ணனை பற்றி ஏராளமான பக்தி பாடல்கள் , கஸல்கள் உள்ளது. என்றாலும் நம்
ஆழ்வார்கள் கிருஷ்ணனை பாடியது போல் எவறும் பாடியதும் இல்லை, போற்றியதும் இல்லை, அனுபவித்தும் இல்லை. புரிகிறதா இப்போது கன்னதாசன் ஒவ்வொரு வரியிலும், எப்படி எல்லாம் தன் வார்த்தை ஜாலங்களால் விளையாடியிருக்கிறார் என்று.
அடுத்து,
பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான்,
அன்று பாரத போர் முடிக்க சங்கை எடுத்தான், பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான், நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்.
துரியோதனன் பாஞ்சாலியை மானபங்கம் செய்ய கட்டளை இட, துச்சாதனன் அவள் சேலையை இழக்க , அவளுக்கு அபயமாக சேலை கொடுத்தான் அந்த ஆபத்பாண்டவன். துச்சாதனன் இழக்க, இழக்க, சேலை வந்துக்கொண்டே இருந்தது. ஓய்ந்து போனான் துச்சாதனன். அங்கே அவள் பெண்மை காப்பாற்றபட்டது.
பாண்டவர்க்கு அவருடைய நியாயமான பங்கை கொடுத்தான், அது சரி கண்ணனை அனுதினமும் நினைப்பதாலும், வேண்டுவதாலும், நமக்கு என்ன கொடுத்தான். நாம் எல்லோரும் படிக்க
" கீதை " என்னும் நூலை கொடுத்தான். அது தானே கண்ணனின் சிறப்பு.
இப்பாடலை முடிக்கும் போது கவிஞர்,
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்,
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்,
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்,
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்.
அடேயப்பா கண்ணனை கன்னதாசன் எப்படியல்லாம் நேசித்து இருந்தால் இப்படி யோசிக்க முடியும். அபாரம். அற்புதம். கவிஞர், கவிஞர் தான்.
வைணவத்தில் பகவானை மூன்று கோலமாக சொல்வதுண்டு.
1.நின்ற கோலம்
2. இருந்த கோலம்
3. கிடந்த கோலம்
கன்னதாசன் ஒரு படி மேலே போய் " தவழ்ந்த கோலத்தையும்" அதனுடன் சேர்கிறார்.
குருவாயூர் தன்னில் தவழ்கின்றவன்
( தவழ்ந்த கோலம்)
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் ( நின்ற கோலம்)
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் ( இருந்த கோலம்)
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன். (கிடந்த கோலம்)
இப்படி ஒரு தனி பாடலில் இவ்வளவு அற்புதமான விஷயங்களை இடம் பெற செய்த அந்த கவிஞர் கன்னதாசனை பாராட்டாமல் இருக்க முடியுமா. இந்த நூற்றாண்டின் மிக பெரிய கவிஞன் கன்னதாசன்.
(இனையத்திற்க்கு நன்றி)
- பாலு.