கண் பாராது காது கேளாது போவாய்
நெருங்கும் கை விரலாக
உருகித் தேடும்
காலத்தின் கட்டாய காதல்,
உறங்கும் உள்ளுணர்வை
திருகி எழுப்புவிட,
உறையும் பொன்னிதயம்
ஊர்ந்து நகரும்
எடையேறி
எடை குறையும்.
தடுக்க முடியா
காட்டாறாய்
கரை தேடி
முறை துறந்து
அதிவேகமாக
அலையோடு நுரை தள்ளி
கிளை முறித்து
பலமோடு பாயும் உட்குருதி!
நரம்புகள் மூழ்கி
முகம் தள்ள எந்திரிப்பது
தொடர்கதையாகும்
ஹார்மோன் சத்தங்கள் சந்தங்களாகும்,
வீதி விளக்குகள்
நிலாக்களாகத் தெரியும்
கருமேகம் கலராகும்
எருமை பசுவாய்த் தெரியும்
சிறு பொழுதும் விழுதாகும்
விழுந்தும் வேராகும்
கால் நடைகளை கொஞ்சுவாய்
கை நகம் அதிகம் கடிப்பாய்
தோள் தொடும் நட்புடன்
கதை,
முலம் போட்டு பேசுவாய்
கனவில் அவள் கண்கள்
இருட்டை பகலாக்கும்
உயிரைக் கடைந்து
கரையும் துண்டுகளை
சிறு சிறு துகளாக்கும்
முகம்,
வெளிக்கொணரும்
வெள்ளந்திச் சிரிப்பும்,
கணிக்க முடியாது
பூசிக்கொள்ளும்
அழகான நகைப்பும்,
விதிகளை உடைத்து
வீதியில் நடமாடும்.
மழை
தலை தொட
வெயில் எனக் கொள்வாய்
வெயில்
வியர்வை தர
பனி என துடைப்பாய்
காகம் கரைவதும்
குயில் இசைப்பதும் ஒன்றென்பாய்
தாகம் வருகையில்
வெந்நீர் குளிரென்பாய்
கண்ணாடியில் கண்ணடிப்பாய்
அம்மா அப்பாவிடம்
பொய் சொல்லி நடிப்பாய்
தானே பேசுவாய்
நீயே உனை ரசிப்பாய்
ஊனுயிர்
உணர்தல் தேடி அலைவாய்
நிசப்தம் நெஞ்சில் வரும்
சின்னதொரு சப்தம்
மூளை ஏறும்;
அடிக்கடி மனசுக்குள்
அவள் ஞாபக தந்தி
வந்து வந்து
தகவல் சேரும்.
முட்டாளாவாய்,
முந்தி முழிப்பாய்,
காது கேளாது
கண் பாராது போவாய்,
அக்கம் பக்கம்
சுத்தும் மறப்பாய்,
இருந்தும் நடப்பாய்...
...........