எட்டும் கனி அல்லவே

எட்டும் கனி அல்லவே
நீ எந்தன்
பூவிழி தேன்மொழியோ
சுட்டும் வான் சுடரும்
நின் கண்கள்
பேசத் துணிவில்லையோ

பட்டும் பால் நிறமும்
ஒன்றாகக் கூடிய தேகமோ
கட்டும் கண்ணிரண்டும்
கொட்டாமல் பார்த்திட தோன்றிடுமோ

பேரலை நூறலையாய்
நெஞ்சத்துள் ஆடி அடிக்குதடி
கானலை பார்த்திடினும்
கங்கையாய் ஆவி துடிக்குதடி

கன்னத்தில் ஒரு மச்சம்
ஓரத்தில் ஓயாமல் சிரிக்குதடி
கிண்ணத்தில் நீர் குடித்தேன்
அம்மம்மா வெந்நீராய் எரிக்குதடி

கூந்தலின் நிறமறிய
வான்முகில் கூடுதடி
வாசங்கள் தான் பிடிக்க
பூக்களும் தேடுதடி

கருமணி வெண்திரையில்
ஓவியம் காட்டிடுமோ
ஒருமணி ஒருமுறையில்
காவியம் மீட்டிடுமோ

இறைவனின் கொடையிதுவோ
அமைத்தது இடை இதுவோ
சமைத்ததும் இரங்கவில்லை
சுவைத்திடும் நாள் எதுவோ

கைவிரல் தன் மெதுமை
தானறிய முற்படுமோ
மென்மையின் உண்மைகளை
வேறெதுவும் சொற்படுமோ

உதட்டினை அவள் சுழிக்க
இருதயம் வழுக்கிடுதோ
சுழுக்கிட்ட போதினிலும்
அழுத்தமாய் வழக்காடுதோ

கால் நடை தேரழகோ
கை குடை ஓரழகோ
நூல் இடை கண் தைக்கும்
காட்சியில் பேரழகோ

நிழல் என நீ எனையே
நிஜத்தோடு தொடு துணையே
கனல் கக்கி சிதறுதடி
தினந்தோறும் தலையனையே

காதலின் வயதெதுவோ
காதலி இவள் வயதோ
இவளருகினில் முளைத்துவிட்டால்
சுருக்கங்கள் இளவயதோ

கால்நகம் நிலம் கிழிக்க
பூமுகம் காட்டடியோ
துடிப்பெல்லாம் குறையுதடி
இதயத்தில் ஒருநொடி காற்றடியோ

எழுதியவர் : புரூனே ரூபன் (25-Oct-19, 12:42 pm)
சேர்த்தது : புரூனே ரூபன்
Tanglish : yettum kani allava
பார்வை : 99

மேலே