செவப்பி - நெடுங்கதை

செவப்பி
==========
அத்தியாயம் 1
===============
"வாங்க.. வாங்க.. வணக்கம்..."
"உங்க முகத்துல சில்லுனு காத்து படுதா.. அப்படியே ஒரு பச்ச மண்ணு வாசம் உங்க மூக்கு தொலைக்குதா.. அப்ப நீங்க பொய்கை ஆற்றங்கரையோரம் நிக்கறீங்கன்னு அர்த்தம்.."
"சுத்திமுத்தியும் பாருங்க.."
"எவ்வளவு மரம்...! எவ்வளவு வனம்...! எவ்வளவு பறவைங்க...! எப்படி சிரிச்சுகிட்டு கெடக்கு பாருங்க இந்த பூமி..!"
"அட.. அந்த வானத்தைப் பாருங்க.. எவ்வளவு பொலிவா இருக்குனு"
"அடடே! என்ன இது சத்தம்? கொய்யா முய்யா கொய்யா முய்யானு.."
"ஓ அப்படியே சேதி கேட்டுட்டே... பத்மாவதியம்மா வீட்டுக்கு வந்துட்டோமா..!"
"வாங்க.. உள்ளே ஏதோ சிரிப்பு சத்தம் கேக்குது.. என்னனு பாப்போம்
"ஹேப்பி பர்த்டே டூ யூ.."
"ஹேப்பி பர்த்டே டூ யூ.."
"ஹேப்பி பர்த்டே டூ தர்ஷி குட்டி.."
"ஹேப்பி பர்த்டே டூ யூ.."
கேக்க வெட்டி முதல்ல பாட்டிக்கு ஊட்டிவிட்டா நாலு வயசு வாலு தர்ஷனி...
பாட்டி மேல அவ்வளவு உசுரு
அப்புறமாத்தான் அப்பா அம்மா பக்கமாவே வந்தா..
"தர்ஷு"
"இங்க பாரு இப்படி சிரி", என்று மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள் அவளது சித்தி ரூபா..
அம்மா ஷோபாவும், அப்பா முகேஷும் இந்த சந்தோஷ நிகழ்ச்சியினை ரசித்துக் கொண்டிருந்தனர்.
கேக்கின் முன்னாடி அக்கம் பக்கத்து வீட்டின் நாலைந்து வாண்டுகள் நாக்கில் எச்சில் ஊற இடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தனர்.
சில பல சொந்தங்களால் வீடு நிறைந்து கிடந்தது. கிருஷ்ணய்யாவின் மறைவுக்குப் பின் பத்மாவதியம்மா தான் வீட்டை தாங்கு தாங்கென தாங்குகிறாள்.
ரெண்டு பொண்ணு ஒரு பையன்..
பெரிய பொண்ணு ஷோபா கல்யாணம் ஆயிடுச்சு.. சின்னப்பொண்ணு ரூபா காலேஜ் தேர்டு இயர்..
நடுவுல பையன் ரகு... சென்னையில வேலைக்கு போயிட்டு இருக்கான்.. இப்ப பர்த்டேக்காக ஊருக்கு வந்திருக்கான்.. ஆனா இப்ப வீட்ல இல்ல...
எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தாலும், பத்மாவதியம்மா சிரித்தபடி இருந்தாலும், அவர் மனதிற்குள் ஒரு மெல்லிய சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.
'ரகுபதி எங்க போனான்?'
பிறந்தநாள் கேக்கும் வெட்டியாச்சு.. வெயிட் பண்ணுங்க வரேன்னு சாயந்திரமா கிளம்பி போனவன் தான் இன்னும் காணோம்..
'தர்ஷினியும் எவ்வளவு நேரம்தான் மாமவுக்காக வெயிட் பண்ணுவா?'
ரகு காலேஜ் முடிச்சிட்டு சென்னையில ஒரு நல்ல கம்பெனியில வேல பார்க்கறான். நாலு நாள் லீவுல ஊருக்கு வந்திருக்கான்..ரகுபதி ஷோபாவுக்கு தம்பி.. ரூபாவுக்கு அண்ணன்.. ஊரிலேயே நல்ல பேரு. இப்ப எங்க போயிட்டான்?
வேகமாக ஓடிவந்த தர்ஷினி பத்மாவதியம்மா முகத்துல கிரீம அப்பவும்தான் நினைவை விட்டு நிகழ்காலத்துக்கு வந்தாள்.
"யே தர்ஷூ!என்ன இது?" எனச் செல்லமாக கோவிக்க
"என்ன பாட்டி கிரீம் தானே!", என்று சொன்ன தர்ஷினி அவங்க முகத்தில இருந்த க்ரீமை தன் நாக்காலேயே எடுக்க குடும்பமே இதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
இப்போது பொடிசுகள் கேக் முடித்துவிட்டு அடுத்த ரவுண்ட் என்ன கிடைக்கும் என்று காத்திருந்தார்கள்.
அப்படியே வீட்டை விட்டு மெதுவாக வெளியே வந்தாள் பத்மாவதியம்மா..
கண்கள் ரகுபதியை வெகுதூரம் வரை பார்த்து தேடின.. கண்ணில் தட்டுப்படவில்லை..
அருகில் இருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த லட்சுமியை லேசாக தடவிக் கொடுத்தாள்.. அந்த பசுவும் இவருக்கு முதுகு கொடுத்தபடி அவரது கண்களையே பார்த்துக்கொண்டிருந்தது.
பொடிசுகள் அடுத்த ரவுண்ட் தின்பண்டங்களை முடித்துவிட்டு டாட்டா சொன்னபடி கிளம்பிய வேளை, தூரத்தில் ஒரு உருவம் வருவது பத்மாவதியம்மாவின் கண்ணில் பட்டது.
'ம் அவன் தானு நினைக்கிறேன்' என யோசித்தபடி உற்றுப்பார்க்க, ரகுபதி தான் வருகிறான் என்பது உறுதியானது. ஆனால் ஒரு துள்ளலுடன் உற்சாகத்துடனும் எப்போதும் காணப்படும் நடையாக அது படவில்லை. துவண்டு போய்.. வருந்தி.. கஷ்டப்பட்டு நடந்து வருவதைப் போல இருந்தது.
அருகில் வந்ததும் அவனது கண்ணில் துளிர்த்திருந்த கண்ணீர் துளிதான் பத்மாவதியம்மாவுக்கு கண்ணில் பட்டது
"டேய் ரகு.. எங்கடா போன இவ்வளவு நேரம்? இது என்ன கண்ணுல தண்ணி... ஏதாவது தூசி கீசி விழுந்துடுச்சா?"
"ம் ஒன்னுமில்லமா", எனச் சொன்னவறே ரகுபதி வீட்டில் நுழைய, வீடு இவனது நிலை கண்டு அவனைச் சூழ்ந்து கொண்டது.
ரகு.. அவமானப்பட்டவனாய் கூனிக்குறுகி காணப்பட்டான். யாரோ அடித்திருந்தது போலவும் இருந்தது.
ஷோபாவும் ரூபாவும் சேர்ந்தே கேட்டனர்...
"என்ன ரகு.. என்னாச்சு? யாராவது அடிச்சிட்டாங்களா?"
"மச்சான் என்னாச்சு? அவர்களுடன் சேர்ந்து கொண்டான் ஷோபாவின் கணவன் முகேஷ்...
அவன் யாருக்குமே பதில் சொல்லாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"மாமா.. மாமா..", என்று ஓடிவந்து தர்ஷினி கொடுத்த கேக்கை வாங்கி கொஞ்சமாய் வாயில் வைத்து கொண்டவன், அதற்கு மேல் எதுவும் சாப்பிடாமல் அப்படியே வைத்திருந்ததை கவனித்த பத்மாவதியம்மா அருகில் வர, அவன் எழுந்து அவனது ரூமுக்குச் சென்றான்.
ரகுபதியின் வருகைக்குப்பின் வீடானது கொண்டாட்ட களை இழந்து வேறு களைக்கு மாறி விட்டதாய் தோன்றியது.
பின்னாடியே சென்ற பத்மாவதியம்மா அவன் தோளில் கையை வைத்தாள்.
"டேய் யாருடா உன் மேல கைய வச்சா? எவ்வளவு தைரியமானவன் நீ.. எவனுக்குடா இவ்வளவு தைரியம் இந்த ஊர்ல?
"விடுமா.. நான் எதுவும் சொல்ல விரும்பல.."
"டேய் உனக்கே இது நியாயமா படுதா... யாரு அடிச்சானு மட்டும் சொல்லு.. நாங்க யாரும் போயி, என்ன ஏதுனு விசாரிக்க மாட்டோம்"
"இல்லமா.. நான் சொன்னாலும் நீ என்னனு கேட்கப் போக மாட்ட"
"என்னடா பெரிய பீடிகையா போடற..?"
"விடுமா... நான் சொல்லாம இருந்தா தான் நல்லது.. சொன்னேனா ரொம்ப உடஞ்சு போயிடுவ"
"ம்கூம்.. அப்படியெல்லாம் விட முடியாது. எந்த தப்பு தண்டாவுக்கும் போகாத ஆளு நீ.. உன் மேல கை வைக்க எவனுக்கு மனசு வந்துச்சு.. எறும்புக்கு அடிபட்டுடக் கூடாதுன்னு நடக்கும் போது கூட கீழே பார்த்து பார்த்து எட்டு வைப்ப.. உன்னப் போய் எதுக்கு அடிச்சானுக.. புத்தி கித்தி மழுங்கிடுச்சா?"
"அம்மா.. எங்கிட்ட இப்படியே பேசிப் பேசி, கேட்டு கேட்டு பேரச் சொல்ல வச்சிடாத.. வேணாம்... என்னக் கொஞ்சம் தனியா விட முடியுமா ஒரு பத்து நிமிஷம். கொஞ்சம் தெளிவாயிட்டு முகம் கழுவிட்டு நானே ஹாலுக்கு வரேன் ப்ளீஸ்.."
"போடா.. நீ பேரை சொன்னாத்தான் நான் இந்த இடத்தை விட்டே கிளம்புவேன்"
"அப்ப நான் பேரை சொல்லித்தான் ஆகணும்"
"ஆமா.."
"அம்மா வேணாம்"
"டே சொல்லுடா.. யாருன்னு சொல்லுடா"
"அப்ப சொல்லணும்"
"ஆமா.."
"சரி சொல்றேன்"
"சொல்லு"
"செவப்பி"
பேரைக் கேட்டதும் மயங்கி விழுந்தாள் பத்மாவதியம்மா..
(தொடரும்)
செவப்பி 2
=========
செவப்பி..
அந்த கிராமத்துக்கே காவல் தெய்வம் மாதிரி..
எல்லா நேரமும் சாதாரணமாகத்தான் இருப்பா.. ஆனா.. யாராவது ஊருக்குள்ள தப்பித்தவறி ஏதாவது தவறு பண்ணாங்கனு தெரிஞ்சா.. நிச்சயமா செவப்பி கையால தண்டனை உண்டு.
செவப்பி யாரையாவது அடிச்சுட்டா அப்படீனா.. கண்டிப்பா அவன் தப்பு செஞ்சிருக்கானு அர்த்தம்.
அதனால ஊருக்குள்ள யாருமே தப்புத்தண்டாவுக்கு போறதே இல்ல.
அவகிட்ட ஒரு பெரிய சக்தி இருக்குனு எல்லாருக்குமே நம்பினாங்க..
அதுக்கு தகுந்த மாதிரி தான் அவளோட நடவடிக்கைகளும் இருக்கும்.
தெனம் தெனம் விடியறதுக்கு முன்னாடியே எந்திரிச்சு ஆத்துக்குப் போயி குளிச்சிட்டு, பூவெல்லாம் பறிச்சுப் போயி சாமிக்கு படைச்சு.. நல்லா கும்பிட்டுட்டுத்தான் அவளோட எல்லா நாட்களும் தொடங்கும்.
அப்படி அவ சாமி கும்பிட்டுட்டு ரோட்டுல நடந்து வரும் போது, ஒரு சாமி போலவே இருக்கும். ரோட்ல நடக்குற எல்லாருமே கையெடுத்துக் கும்பிடுவாங்க..
செவப்பிக்கு சொந்த பந்தம்னு யாருமில்லை.
நாடோடியா வந்த ஒரு கூட்டம், தெரிஞ்சோ தெரியாமலோ ஆத்தங்கரையோரமா ஒரு குழந்தைய விட்டுட்டுப் போயிட்டாங்க..
அப்ப அந்த வழியாப் போன பூசாரி பொஞ்சாதி ருக்மணி தான், அந்த அழுக சத்தத்தைக் கேட்டு, அத வாரி அணைச்சுக்கிட்டா.. அவளும்தான் பாவம் என்ன பண்ணுவா..? பல வருஷமா குழந்தை பாக்கியம் இல்லாம இருந்தவ..
பூசாரிக்கும் சந்தோஷம் சொல்லி மாளல.. ஏதோ கடவுளே வந்து வரம் கொடுத்த மாதிரி அவ்ளோ கொண்டாடினாங்க..
அவங்க வீட்ல தான் ராணி மாதிரி வாழ்றா செவப்பி..
சில மாசங்களுக்கு முன்னாடி..
பண்ணையார் அவங்க ஆளுங்களோட எங்கேயோ போயிருக்கும் போது, அவரு கண்ணுல முத்துலட்சுமி பட்டுட்டா..
முத்துலட்சுமி ராணுவத்துல இருந்த கணவன இழந்து தனியா வாழ்ந்து வர்றவ..
அவள அடையனும்னு பண்ணையார் செஞ்ச முயற்சியில எப்படியோ தப்பிச்சவ, செவப்பிகிட்ட போயி அழுதுகிட்டு நின்னா..
அந்த காட்சி இப்போது..
கலகலப்பா இருந்துச்சு பண்ணையார் வீடு, வீட்டுப் பெண்கள் எல்லாம் சிரிச்சு பேசிட்டு இருந்தாங்க.. பசங்க எல்லாம் ஓடிப் பிடிச்சு விளையாடிக்கிட்டு இருந்தாங்க..
காலையில ஒரு ஒன்பது மணி இருக்கும்.. ஆடு, மாடு, கோழி எல்லாம் அது அதுக வேலையப் பார்த்துட்டு இருந்துச்சுங்க..
பண்ணையாரு குளிச்சிக்கிட்டு இருந்தாரு.. ஒரே கத்தலா இருந்த வீடு, சட்டுனு மயான அமைதி ஆச்சு.. பண்ணையார் காதுல கேட்டுக்கிட்டிருந்த சத்தமெல்லாம் நிக்கவும், அவரு காதை கூர்மையாக்கி என்னனு கேக்கப் பாத்தாரு.. பெரும் நிசப்தம் தான் அவருக்கு பதிலாக கெடச்சுச்சு.. சரினு.. சட்டுபுட்டுனு குளிச்சிட்டு தலைய துடைச்சுக்கிட்டே வெளியே வந்தாரு பாருங்க..
வெளிய பத்ரகாளி கணக்கா... கண்ணெல்லாம் நெருப்பா, கையில ஒரு பெரிய கட்டையோட நின்னுகிட்டு இருந்தா செவப்பி..
இவரு என்ன ஏதுனு யோசிக்கிறதுக்குள்ள சாத்து சாத்துனு சாத்த ஆரம்பிச்சுட்டா.. 'ஐயோ அம்மா'னு அவர் கத்துன கத்துக்கு ஒருத்தர் கூட உதவிக்கு வரல..
தன்னோட ஆவேசம் தீர்ந்த பிறகு, கலைஞ்சு போன முடிய இழுத்து நல்லாக் கட்டிக்கிட்டு, வந்த விஷயம் முடிஞ்ச திருப்தியோட கெளம்பி போனா செவப்பி..
அப்புறமென்ன, நாலஞ்சு நாளு பண்ணையாருக்கு ஆஸ்பத்திரியில இருக்க வேண்டியதாப் போச்சு, எதுவுமே வெளிக்காயம் இல்ல.. எல்லாமே உள்காயம்.
அவரப்பத்தியும் ஊரு முழுக்க பரவிடுச்சு.. கொஞ்ச நஞ்ச மரியாதை வச்சிருந்தவங்களும், அவரப் பார்த்தா விலக ஆரம்பிச்சிட்டாங்க..
வன்மம் கொஞ்சம் கொஞ்சமா அவருக்குள்ள விஷம் போல பரவ ஆரம்பிச்சிருச்சு..
அப்பயிருந்து செவப்பிய ஏதாவது செஞ்சே தீரணும்னு துடிச்சுக்கிட்டு இருக்காரு பண்ணையார்..
செவப்பி 3
==========
சரி.. இப்ப ரகுவோட வீட்டுக்கு வருவோம்..
செவப்பிங்கற பேரைக் கேட்டதுமே அதிர்ந்து போயிருந்தாங்க பார்வதியம்மா..
திரும்பத் திரும்ப எதுக்காக என்னதுனு ரகுகிட்ட கேட்டுப் பார்த்தும், அவன் ஒரு தெளிவான பதிலே தரல..
பிறந்தநாள் கொண்டாட வந்திருந்த ரகுவோட அக்கா ஷோபா குடும்பமும், அவங்க ஊருக்கு கிளம்பிப் போயிட்டாங்க..
ரூபா வழக்கம் போல காலேஜுக்கு போயிட்டு வந்துட்டு இருக்கறா..
இன்னைக்கு நைட்டு மறுபடியும் சென்னைக்கு கிளம்புகிறான் ரகு.. லீவு முடிஞ்சு போச்சு..
துணிமணி எல்லாம் எடுத்து வச்சுட்டு கெளம்பிக்கிட்டே இருந்தான்..
பின்னால போயி நின்னா பார்வதியம்மா...
"ரகு...!"
"எதையும் மறந்துடாம எடுத்து வச்சுக்கப்பா.. கரெக்டா சென்னையில பஸ்சை விட்டு இறங்கினவுடனேத்தான் சில விஷயம்.. அடடா.. மறந்துட்டேமேனு உனக்கு போன டைம் மாதிரி ஞாபகம் வரப் போகுது.. கவனமா கெளம்பு.."
"சரிமா... இன்னும் கெளம்பறதுக்கு பத்து நிமிஷம் இருக்கு.. நீ போயி தோசை ஊத்து.. நான் சாப்பிட்டுட்டு கெளம்புறேன்.."
"சரிப்பா..", எனச் சொல்லிச் சென்று, தோசை ஊற்றி சாம்பார் சட்னியுடன் எடுத்து கொண்டு வந்த பார்வதியம்மா, ரகுவை பார்த்துக் கொண்டே நிற்க,
"அம்மா.. என்னம்மா பார்க்கற..? அப்படி வை.. நான் சாப்பிடுகிறேன்"
"அப்ப கடைசி வரைக்கும் செவப்பி அடிச்ச காரணத்த நீ சொல்ல மாட்ட"
சாப்பிடப் போனவன் திரும்பி பார்வதியம்மாவைப் பார்த்தான்.
"இப்ப என்ன சாப்பிடச் சொல்றியா..? இல்ல வேணாம்னு சொல்றியா!?"
"நான் எப்பப்பா உன்னை சாப்பிட வேணாம்னு சொன்னேன்?"
"அப்ப பக்கத்துல வந்து நிற்காத.. அடுப்படிக்குப் போ..", என சூடான வார்த்தைகளைக் கக்க,
கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது பார்வதியம்மாவிற்கு, சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்தபடியே அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
ரூபா போனில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு, எதையோ நோண்டி கொண்டிருந்தாள். இவர்களின் பேச்சை கவனித்தது மாதிரியே தெரியவில்லை.
இப்படி எந்த விஷயமும் நடக்காத மாதிரியே, பையை மாட்டிக்கொண்டு, 'பாய்' சொல்லிவிட்டுக் கிளம்பினான் ரகு.
குழப்பத்தின் உச்சத்தில் இருந்தாள் பார்வதியம்மா..
'இப்படி மறைக்க வேண்டிய விஷயம்னா, அப்படி என்னவாத்தான் இருக்கும்.. இத தெரிஞ்சுக்க என்னதான் வழி"?, என யோசித்துக் கொண்டே இருந்தவள் தூங்கிப் போயிருந்தாள்.
"வாம்மா.. வா.. உனக்கு என்ன வேணுமோ கேளு..", என நாக்கைத் துரித்துக்கொண்டு சாமி ஆடிக்கொண்டிருந்தாள் செவப்பி.
அவளுக்கு முன்னே ஊரே கையை கூப்பிடவாறு நின்று கொண்டிருந்தது.
ஒவ்வொருவராகச் சென்று, தங்களின் விடை தெரியாத கேள்விகளை அவளிடம் கூறி, திருப்தியான ஒரு பதிலை வாங்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர்.
திடீரென செவப்பியின் ஆவேசம் அதிகமானது.
"என்ன... நீ எங்கிட்ட வரமாட்டியா..? நானா உன் பேரைச் சொல்லி கூப்பிட்டாத்தான் வருவியா..? நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா? இப்ப எதுக்கு சேலைத் தலைப்பால முகத்த மூடிக்கிட்டு நிக்கற... தைரியமா முன்னால வா... உன் கேள்வியக் கேளு.. ம்.. வாஆஆஆ..."
"ஏ யம்மா"
"ஏ யம்மா"
"யே.. பார்வதியம்மாஆஆஆஆ...",வென ஊரே அதிரும் படி அலறினாள் செவப்பி..
"இதோ.. வர்றேம்மா..", என்று காட்டுக்கத்து கத்தியபடி தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்தாள் பார்வதியம்மா... அருகே பேயரஞ்ச மாதிரி பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தாள் ரூபா..
"அம்மா.....", என்று கத்தியபடி தூக்கக் கலக்கத்துடன், தன்னை பயமுறுத்தி எழுப்பி விட்ட அம்மாவையே கோவமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ரூபா..
"சாரிடி... ஏதோ நெனச்சுக்கிட்டே படுத்திருந்தேனா.. அப்படியே கனவு வந்துடுச்சு போல.. கனவுல வந்த செவப்பி என் பேரச் சொல்லி கத்தவும் நானும் கத்திட்டேன்.. சரி படு.. நாளைக்கு காலேஜ் போகனுமில்ல..."
"போம்மா.. ரொம்ப டயர்டா தூங்கிட்டிருந்தேன்.. அந்தத் தூக்கமெல்லாம் போயே போச்சு. இப்ப மறுபடியும் அடுத்த ரவுண்டு தூங்கப் போறேன்... திரும்பவும் கனவுல வெள்ளச்சி வந்தா, கருப்பி வந்தா, அது இதுனு சொல்லி எழுப்பி விட்றாத... ப்ளீஸ்", எனச் சொல்லி தூங்கிப் போனாள்.
ஒரு தெளிவான பதில் கிடைத்தது போல் உணர்ந்தாள் பார்வதியம்மா... அப்ப என் கேள்விக்கான விடையை நேரா செவப்பிகிட்ட போயி கேட்டு தெரிஞ்சிக்க வேண்டியதுதான்.. இது தான் சரி.. நாளைக்கு காலையிலேயே செவப்பி வீட்டுக்குப் போயிட வேண்டியது தான்", என யோசித்தவாரு ஒரு நிம்மதிப் பேருமூச்சுடன் கண்கள் சொக்கினாள் பார்வதியம்மா.
அவளுக்கு காலையில் காத்திருக்கிறது ஒரு பேரதிர்ச்சி..
அத்தியாயம் 4
=============
செவப்பி பூசாரியின் வீட்டுச் செல்லப்பிள்ளை.
செவப்பி அவர்கள் வீட்டுக்கு வந்த பிறகு, மிக நன்றாகவே வாழ்கிறது பூசாரியின் குடும்பம். மரியாதையும் கூடி இருக்கிறது.
செவப்பியின் இந்த தாக்குதல்கள், அவளுக்கு ஊருக்குள்ளே சில எதிரிகளை உருவாக்கியிருந்தது.
அவர்களும் செவப்பிக்கு ஏதாவது பண்ணியே தீர வேண்டும் என்ற வெறியுடன் கங்கணம் கட்டிக்கொண்டு அழைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த லிஸ்டில் புதிதாகச் சேர்ந்து விட்டார் பண்ணியார்.
இந்த மாதிரி தாக்குதலுக்கு அப்புறமா.. யாரும் தைரியமா வந்து செவப்பிகிட்ட என்ன காரணம்? எதுக்காக அடிச்சே? அப்படின்னு கேட்டதே இல்லை.. அது ஒரு தெய்வ குத்தம் ஆகிடும் அப்படின்னு நினைச்சு விட்டிருவாங்க..
ஆனாலும் அது என்ன விஷயத்துக்காக நடந்த தாக்குதல்னு கொஞ்ச நாள்ல ஊர் முழுக்க கண்டிப்பாக தெரிய வந்திரும்..
பண்ணையார் கோபக்காரர் தான்.. ஆனா நேரடியா எந்த விஷயத்திலையும் இறங்க விரும்பல.. அதுக்கு தோதான நேரமும் காலமும் அமையும்னு, மீனுக்குக்காக காத்து கெடக்கிற கொக்கு மாதிரி காத்திருக்க ஆரம்பிச்சாரு..
காலையிலேயே எந்திரிச்சு.. ரூபாவ காலேஜிக்கு அனுப்பி விட்டு கிளம்ப ஆரம்பிச்சா பத்மாவதியம்மா..
'இன்னைக்கு செவப்பிய பார்த்து.. இந்த விஷயத்தை பத்தி கேட்டு தெரிஞ்சுக்காம விடக்கூடாது'
'ரகு ரொம்ப நல்ல பையன், எந்த கெட்ட காரியத்துக்கு போக மாட்டான்.. என்ன காரணத்துக்காக செவப்பி அடிக்கணும்? ரகுவ பத்தி ஊர்பூரா தெரியும். எல்லாரும் அவன் கிட்ட அவ்ளோ அன்பா பேசுவாங்க.
'வாப்பா ரகு, இப்பத்தான் வந்தியா? வேலையெல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு?'னு அவன் லீவுக்கு வரும் போதெல்லாம் விசாரிக்காத ஆளே இல்லை ஊருக்குள்ள...
ஊர்ல யாருக்காவது ஏதாவது உதவி தேவைனா,முதல் ஆளா போயி நிப்பான்..
ஊரு புல்லா சின்ன வயசுல, அவன் எங்க போனாலும், அவங்க வீட்ல எல்லாம் கூப்பிட்டு, சாப்பாடு போட்டு தான் அனுப்புவாங்க. ஆனா அதை அவன், என்கிட்ட சொல்லாம வீட்டுக்கு வந்தும் ஒரு கட்டு கட்டுவான். அதனாலேயே அப்ப அவன் நல்லா குண்டா இருப்பான்.
'பெருசா வளர்ந்தப்புறம் தான், ஜிம்மு அது இதுன்னு போயி நல்ல ஒல்லியா கட்டுக்கோப்பா ஆயிட்டான். ம்.. அவன் என்ன தான் பண்ணி இருப்பான்?', என யோசித்துக் கொண்டே பூசாரியின் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் பத்மாவதியம்மா..
அவள் நடக்க நடக்க எதிர்பட்ட ஊரின் மனிதர்கள் எல்லாம் வெளிரிப் போய் இருப்பது போலவும், ஊரே ஒரு மயானக் கலையை அடைந்தது போலவும் அவளுக்குப் பட்டது.
அதோ.. அங்கு தூரத்தில் தான் பூசாரியின் வீடு. பக்கத்தில் வர வர, அங்கே மக்கள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
'என்ன இது? ஊரே இங்க கெடக்கு.., என யோசித்த பத்மாவதியம்மாவின் செவியை பெரும் அழுகுரல் எட்டியது.
பக்கத்துல இடித்துக் கொண்டு வேக வேகமாய் நடந்து போன பாட்டியைக் கேட்டாள்.
"எ.. என்னாச்சு? ஏன் இங்க ஊரு சனம் பூரா வந்திருக்கு?"
"என்னம்மா.. உனக்கு விஷயமே தெரியாதா? செவப்பி செத்துப் போயிட்டா!!!"
அப்படியே உறைந்து போனாள் பத்மாவதியம்மா..
அத்தியாயம் 5
=============
நாம ஒன்னு நெனைப்போம்.. கடவுள் ஒன்னு நெனைப்பார். ஆனா, அவர் என்ன நெனைச்சாருங்கிறது அப்ப தெரியாது. அப்புறந்தான் தெரியும்.
செவப்பிகிட்ட அடி வாங்கின பண்ணையாரு ரொம்ப கோவமா இருந்தாரு. நாலஞ்சு நாளா சரியா சாப்பிடாம.. கொள்ளாம.. என்ன.. என்ன.. எப்படி.. எப்படினு யோசிச்சதுல.. அவரோட வலதுகைதன காட்டானப் பத்தி சொன்னான்.
காட்டான், அசலூர்க்காரன்.. ஏற்கனவே ரெண்டு மூணு கேஸ்ல உள்ள போயி, இப்ப ஜாமீன்ல வெளிய வந்து, சுத்திக்கிட்டு இருக்கான். அவன்கிட்ட மட்டும் ஒரு வேலையைக் கொடுத்து, நல்ல அமௌன்ட் தள்ளினோம்னா சரியா செஞ்சிடுவான் அப்படீனு..
அடுத்த நாள் ராத்திரிக்கு, அவங்க ஊருக்குப் போயி, காதும் காதும் வச்சா மாதிரி, விஷயத்தைச் சொல்லி, பேமண்டும் கொடுத்திட்டு வந்தாச்சு..
விடியற்காலையிலேயே கெளம்பிட்டான் காட்டான்.
பொய்கை நதிக்கரையோரம் வந்தவன், இறைக்காக காத்திருக்கிற நரியா வெயிட் பண்ணிட்டு இருந்தான்.
இது எதுவுமே தெரியாத செவப்பி, காலங்காத்தாலேயே எந்திருச்சு எப்பவும் போல ஆத்துக்கு குளிக்க வந்துட்டா..
சாமிப்பாட்டு ஒன்ன பாடிக்கிட்டே ஆத்துக்குள்ள எறங்கி மூழ்கினவதான்...
அவள வெளிய வரவே விடல காட்டான்.. அப்படியே தண்ணியிலேயே அழுத்திப் பிடிச்சுக் கொன்னுட்டான்.
அப்ப அங்க ஒரு ஈ காக்கா கூட இல்லை..
என்ன நடக்குதுனு செவப்பி யோசிக்கக் கூட டைம் தரல..
பார்த்த சாட்சினு யாருமே இல்லாம, செவப்பியோட வாழ்க்கைய முடிச்சிட்டான் காட்டான்.
உடனே அங்கே இருந்தே, ஒரு போன் போட்டான் பண்ணையாருக்கு..
"அய்யா, நீங்க சொன்னபடி முடிச்சிட்டேன்"
இந்த வார்த்தைய கேட்ட பண்ணையாரு ஆடாத குற தான்..
கமுக்கமா வீட்ட விட்டு வெளிய வந்தான்..
"காட்டான், கலக்கிட்ட.. இப்ப ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ.. இந்த விஷயம் பரவ ஆரம்பிக்கறதுக்குள்ள, அந்த இடத்த விட்டு கெளம்பிடு.."
"முடிஞ்சா இன்னும் பத்து பதினைந்து நாளைக்கு உங்க ஊருக்கு கூடப் போகாத. வேற ஏதாவது ஊருக்குப் போயிடு"
"இந்த எல்லா விஷயமும் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ஞ்சு போனப்பறம், நானே உனக்கு ரிங் பண்ணிச் சொல்றேன். அப்ப வந்தாப் போதும். என்ன புரிஞ்சுதா?"
"சரிங்க அய்யா.. ஆனா இன்னிக்கு டக்குனு நான் கெளம்பி வெளியூருக்கெல்லாம் போகல, எல்லாம் சந்தேகப்படுவாங்க.. நாளைக்கு கண்டிப்பா வெளியூர் போயிட்றேன்..", என்று சொல்லி போன் காலை கட் பண்ணிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தபடி, அவனுக்கான முடிவு தேதி குறிக்கப்பட்டு விட்டதைக் கூட அறியாமல், அந்த இடத்தை விட்டு கிளம்பிச் சென்றான்.
இதுவரை நடந்த விஷயங்கள் எதுவுமே தெரியாத மாதிரி, எப்பவும் போல சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது பொய்கை நதி..
அத்தியாயம் 6
=============
வீட்டுக்குள் வந்து, கிடத்தப்பட்டிருந்த செவப்பியைக் கண்டதுமே அழுகை பொத்துக்கொண்டு வந்தது பார்வதியம்மாவிற்கு..
அவள் கண்ட காட்சி.. அவளாலேயே நம்ப முடியவில்லை.. ஏன்.. ஊரே நம்பவில்லை.. இப்படி ஒரு விபரீத முடிவு செவப்பிக்கு ஏற்படும் என்று ஒருவர் கூட நினைத்துப் பார்க்கவில்லை.
'இப்போ என்ன ஆகும்.. இந்த கிராமத்துக் குற்றவாளிகளுக்கு யார் தண்டனை கொடுப்பா? இருந்த கொஞ்ச நஞ்ச பயமும் போயிடுச்சுன்னா, எல்லாரும் ஓவரா ஆட ஆரம்பிச்சிடுவாங்களே..', என்று நினைத்தவாறே அங்கிருந்தோரிடம் பேச்சு கொடுத்தாள் பார்வதியம்மா.
"எ.. எப்படி..? என்ன நடந்துச்சு?"
"அதுவாம்மா.. எப்பவும் போல ஆத்துக்கு குளிக்க போயிருக்கா செவப்பி.. இன்னிக்கினு பார்த்து ஏதோ புது இடத்தில இறங்கிட்டா போல.. அங்க இருந்த புதகுழியில மாட்டினவ அப்படியே மூழ்கிட்டா.. ரொம்ப நேரமாச்சே.. இன்னும் ஆள காணோமேன்னு தேடிப்போன பூசாரி தான், கஷ்டப்பட்டு இவள கண்டுபிடிச்சு இருக்காரு.. பாரும்மா, இந்த ஊருக்கு வந்த சோதனைய.." என்று சொல்லி ஓவென அழ ஆரம்பித்தாள் டீக்கடை சுகந்தி.
ஒவ்வொருவராகச் சொல்லி, செய்தி ஊர் முழுதும் பரவி எல்லோருமே அங்கு வந்து விட்டார்கள்.
யாருமே சந்தேகப்படாமலும் இல்லை.
கண்டிப்பா எவனோ தான் இப்படி பண்ணியிருக்கணும் என்றவாறு கிசுகிசுவென பேசிக்கொண்டு இருந்தனர்.
பார்வதியம்மாதான் உடைந்து போயிருந்தாள்.
சேதி பரவி.. பள்ளி கல்லூரி சென்றவர்கள் எல்லாம் திரும்பி வந்து விட்டனர்.
ரூபா.. வந்து அம்மா பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தாள்.
மனசுக்குள்ளேயே பொலம்பிக் கொண்டிருந்தாள் பார்வதியம்மா.
'நம்ம கிராமத்துக்கு இது ஒரு கஷ்டமான விஷயம் தான்.. ஆனா, அதைவிட கஷ்டமான விஷயமா எனக்கு இது ஆகிப்போச்சே.. ரகுவப் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு நம்பிக்கிட்டிருந்த ஒரே விஷயமும், இப்படி காலை வாரிவிடும்னு நினைக்கலையே! இது என்ன எனக்கு வந்த புது சோதனை..?'
'வாழ்க்கையில இது வரைக்கும் எத்தனையோ கஷ்டங்கள கடந்து வந்தாச்சு.. சின்னஞ்சிறு பொடுசுங்கள எங்கிட்ட விட்டுட்டு, அவர் பாதியிலேயே போனப்புறம் படாத கஷ்டமா! எப்படியோ ஏதேதோ வேல செஞ்சு.. சம்பாதிச்சு.. பசங்களை படிக்க வச்சு... பெரியவள கட்டிக் கொடுத்து, இப்ப ரகு வேலைக்குப் போக ஆரம்பிச்சவுடனேத்தான், வேற எங்கேயும் போகாம வீட்டிலேயே இருக்க ஆரம்பிச்சேன். இப்பவும் வேலைக்குப் போக நான் ரெடி தான், ஆனா ரகு தான் விட மாட்டேங்குறான்'
'அதான் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன்ல.. சும்மா வீட்ல இருங்கம்மான்னு சொல்லி, வீட்டிலேயே உக்கார வெச்சுட்டான்'
'இப்ப அந்தப் பையன் மேல இப்படி ஒரு பழி! அது என்னனு தெரிஞ்சு நிவர்த்தி செய்யலாம்னு பார்த்தா, அவனும் பிடிவாதமாக சொல்ல மாட்டேங்குறான்..'
'சரி அது இல்லாட்டி விடு... அதான் இன்னொரு வழி இருக்கேனு அத நாடி வந்தா.. அந்த வழியையேக் காணோம், இப்படி நடுக்காட்டுல விட்டா, என் கேள்விக்கு என்ன தான் பதில்? அதுக்கு யார் தான் பதில் சொல்லுவா?', என மனதிற்குள் நினைத்த நொடி..
தன்னைச் சுற்றி ஒரு அதிர்வை உணர்ந்தாள். ஒரு மெல்லியக் காற்று, தன்னருகே.. தன் காதருகே.. சங்கமிப்பதாய் அறிய முடிந்தது.
"நான் சொல்லுவேன், இல்ல யாரையாவது சொல்ல வைப்பேன்", என்ற குரல் கிசுகிசுப்பாய் காதுக்குள் கேட்டது.
சுற்றும் முற்றும் பார்த்தாள் பார்வதியம்மா.. அருகில் நின்றிருந்த ரூபா 'என்ன?' என்பதாய் சைகையால் கேட்டாள்.
இவள் 'ஏதும் இல்லை' என்பதாய் தலையை ஆட்டினாள்.
'யார் இப்ப பேசினா?' என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள் பார்வதியம்மா..
அத்தியாயம் 7
===============
அன்னைக்கு ராத்திரி பண்ணையாரோட காட்டு பங்களாவுல ஒரு பெரிய பார்ட்டியே நடந்துகிட்டு இருந்துச்சு..
ஆட்டம் பாட்டம் மியூசிக்னு தூள் கெளப்புச்சு..
ரொம்ப ஹேப்பியா கைல கிலாஸோட ஆடுக்கிட்டு இருந்தாரு பண்ணையார்..
தன்னோட பெருமைய தன் வாயாலேயே வேற, அடிக்கடி அவரோட கூட்டாளிகளுக்குச் சொல்லிக்கிட்டே இருந்தாரு..
"இந்த ஊரையே எப்படி மயக்கி வைச்சிருந்தா..!! என்னமா பயமுறுத்திக்கிட்டு கெடந்தா..!! வச்சோம்ல ஆப்பு.. இனிமே நம்ம ராஜாங்கம் தான்.. எவன் எவனோ இத்தன நாளா இந்தக் கொண்டாட்டத்துக்காக காத்திக்கிட்டு இருந்தானுக.. என்கிட்டயே இதப்பத்தி எத்தன பேரு பேசியிருக்கானுக.. அவனுககிட்ட இருந்தெல்லாம் இதுக்கு ஷேரா பணத்தை கறக்க வேண்டியது தான்...."
கறியும் மதுவுமா களை கட்டியிருந்த பார்ட்டியின் நடுவே, ஒரு சிணுங்கலுடன் ஒலித்தது பண்ணையாரின் செல்போன்..
'நானே.. வருவேன்.. இங்கும் அங்கும்...'
நூறு மடங்கு சப்தமாய்...
'இந்த ரிங்டோன நான் எப்ப வச்சேன்!!?', என யோசித்தவாறே, போனை அட்டென்ட் செய்தவருக்கு ஒரு மிகப்பெரிய ஷாக் கிடைத்தது.
போன் பேசி முடிச்சப்பறமும் அப்படியே ஆடிப்போய் நின்றிருந்தார் பண்ணையார்.
உடம்பெல்லாம் வேர்த்து போயிருச்சு.. ஒரு நடுக்கம் கூட அவருக்கு வந்துருச்சு..
கூட்டாளிகளெல்லாம் கப்சிப்புனு ஆயிட்டாங்க..
"என்ன?.. என்னனு..?", ஒவ்வொருத்தரா கேக்கவும், வேர்த்து விறுவிறுத்து நின்னுக்கிட்டிருந்த பண்ணையார் வாயத் தொறந்தாரு..
"அந்த.. அந்த காட்டான்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, அவங்க ஊர் கெணத்துல குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டானாம்..."
"என்ன..."!!"
அதிர்ச்சி அலைகள் அப்படியே எல்லோருக்கும் பரவியது.
'பார்ட்டி ஓவர்'
"எப்படிடா.. எப்படி? அவன் ரொம்ப தைரியசாலி ஆச்சே..! எதுக்குமே... என்னைக்குமே.. எவனுக்குமே... பயப்படாதவனு தானே கேள்விப்பட்டோம்.."
"மேட்டர முடிச்சுட்டு கூட, ரொம்ப ஹாப்பியாத் தான்டா என்கிட்ட பேசினான்.. நாங்கூட இப்ப ஊருக்குப் போகாத, கெளம்பி எங்கேயாவது வெளியூர் போயிடுனு சொன்னேன். இல்ல இப்ப உடனே கெளம்பினா சந்தேகப் படுவாங்க.. அதனால ஒரு நாள் ஊருல இருந்துட்டு.. நாளைக்கு கண்டிப்பா கெளம்புறேனு சொன்னான்.. இப்படி ஒரேயடியா கெளம்பிடுவானு நெனைக்கலியே...!"
"கண்டிப்பா அவனா இந்த முடிவு எடுக்க வாய்ப்பே இல்லை"
"இதுக்கு பின்னாடி என்னவோ நடந்திருக்கு"
"ஒரு வேள இது தப்புனு அவனுக்கேத் தோணி, இந்த முடிவ எடுத்திருப்பானோ!?"
"அவம் ரொம்ப மோசமானவன்டா.. இது மாதிரி ஒரு விஷயத்துக்கு அப்புறம், அதப்பத்தி யோசிச்சுக்கூட பார்க்க மாட்டான்"
"டே..! நிறுத்துங்கடா.. எல்லாரும் ஒன்னொன்னாப் பேசி குழப்பாதீங்க.. என்னப் பொருத்த வரைக்கும் இது கண்டிப்பாக அவனா செஞ்சிருக்க மாட்டான்", என குறுக்கே புகுந்தார் பண்ணையார்...
"அப்படினா.. எப்படி? எவன்? யாரு?"
"அது..நான் தான்டா.."
பண்ணையாரின் காதுக்குள் கேட்ட அந்தக் குரல் அவரை குலை நடுங்கச் செய்தது.
"...யாரு.. யாரு... யா...யாரு..?"
"நான் தான்டா.."
"செவப்பி"
"அடுத்து"
"நீ தான்"
"ரெடியா இரு"
அத்தியாயம் 8
=============
நடுங்கிப் போய் கெடந்தார் பண்ணையார்..
ஒழுங்கா போயிட்டு இருந்த வாழ்க்கையில, தேவையில்லாம ஏதேதோ செய்யப்போயி, இப்ப செவப்பி கைல வசமா மாட்டிக்கிட்டாரு..
இப்பெல்லாம் அவரு வேற மாதிரி ஆயிட்டார்..
ஒழுங்கா ஏதாவது விஷயம் பேசிட்டே இருப்பார், திடீர்னு பயந்த மாதிரி உலற ஆரம்பிச்சிடுவார்.
அவருக்குத்தான் அந்த ஊரிலேயே ஆறுதல் சொல்ல யாருமில்ல..
ரெண்டு நாளைக்கு முன்னாடி அவரோட பிறந்தநாள். அவங்க வீட்டு ஆளுங்க எல்லாம் சேர்ந்து அவர சந்தோஷமா வச்சிருக்க என்னென்னவோ முயற்சி பண்ணினாங்க...
ஆனா.. அவரு தான் ஒரு மாதிரியே இருந்தார்...
கேக்க வெட்டும் போதும் சரி.. எல்லோரும் ஹேப்பி பர்த்டே பாட்டு பாடின போதும் சரி.. கேக் சாப்பிடுங்கனு அவரோட மனைவி ஊட்டி விட்ட போதும் சரி.. எங்கேயோ வெறிச்சு பாத்துக்கிட்டே இருந்தார்..
அப்ப அவருக்கு ஒரு போன் வந்துச்சு..
'அவரோட ஒரு ஏக்கர் தென்னந்தோப்பு ஒன்னு முழுசா எரிஞ்சி போச்சுனு'
கலங்கிப்போனவர் மனசுக்குள்ளேயே சொல்லிக்கிட்டார்..
'செவப்பி பழி வாங்க ஆரம்பிச்சுட்டா'
அடுத்த ரெண்டு மூணு நாளைக்கு அவர் அடிக்கடி செவப்பியோட கோவத்தப் பார்க்க ஆரம்பிச்சாரு..
ஒழுங்கா இருந்த அவரோட மொபைல் சுக்கு நூறா உடைஞ்சுப் போச்சு..
நல்லா ஓடிக்கிட்டிருந்த ஏசி, கார், தண்ணி மோட்டர்னு ஒவ்வொன்னா மக்கர் பண்ண ஆரம்பிச்சது..
துவண்டு போயிட்டாரு பண்ணையார்..
விஷயம் மெள்ள ஊருக்குள்ள பரவ ஆரம்பிச்சுச்சு..
'செவப்பி சாகல.. இன்னும் நம்ம கூடத்தான் இருக்கா.. மறுபடியும் எப்பவும் போல தப்பு செஞ்சா தண்டனை உண்டுனு'
இது மொத்த ஊரையே மகிழ்ச்சியில ஆழ்த்துச்சு சில பேரைத் தவிர..
கிலி பிடிச்ச அவங்கெல்லாம் வெலவெலத்துக் கெடந்தாங்க..
'என்ன! மறுபடியும் பழைய மாதிரியா..! இந்த கிராமத்துல இருந்தா எப்பவும் பயந்துட்டே தான் வாழனும் போல.. என் நெனச்சவங்க அந்த ஊர காலி பண்ணிட்டு வேற ஊருக்கு கெளம்பி போக ஆரம்பிச்சாங்க..
பண்ணையார் வீட்டம்மா தான் பாவம்..
அவங்க என்ன தப்பு பண்ணாங்க..? தப்பு பண்ணியது பண்ணையாரு தானே!
இப்ப தண்டனை அவங்க வீட்ல எல்லாருக்குமா?
இதுக்கு ஒரு தீர்வே இல்லையா..! அப்படினு யோசிச்சு குழம்பிப் போய் இருந்தாங்க..
பண்ணையாரோட மாமாவும் அவங்க வீட்டுல தான் இருந்தாரு, கொஞ்சம் வயசானவரு.. எல்லோரும் அவரை பெரியவருனு தான் கூப்பிடுவாங்க..
அவரே பண்ணையாரு பொஞ்சாதி கற்பகத்தைக் கூப்பிட்டார்..
"என்ன கற்பகம் இப்படி ஆகிப்போச்சு நம்ம நெலம? இத மாத்த வேண்டாமா? மறுபடியும் சந்தோஷத்த இந்த வீட்டுக்குள்ள கொண்டுட்டு வர வேணாமா...?"
"ஆமா பெரியவரே! இப்பெல்லாம் இந்த வீட்ல இருக்கவே பயமா இருக்கு.. அவர் திடீர்ன் திடீர்னு பெணாத்தா ஆரம்பிச்சிடுறார்.. பசங்கெல்லாம் பயந்து போய் கெடக்காங்க.. சீக்கிரமா ஏதாவது செய்யணும்"
"நானும் அதத்தாம்மா யோசிச்சிட்டே இருக்கிறேன்... எனக்கு ஒரு மந்திரிவாதியத் தெரியும்.. அவனுக்கு இந்த விஷயம் எல்லாம் அத்துப்படி.. கொஞ்சம் பணம் அதிகமாக கேப்பான்.. பாத்துக்கலாம்.."
"அவனைப் போய் பார்த்து பேசி, நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ஏதாவது பூஜை போடச் சொல்லலாம்.. கெட்ட ஆத்மாவெல்லாம் நம்ம வீட்ட விட்டு மட்டுமல்ல, நம்ம ஊரையே விட்டுப் போயிடும்.. சரியா..?"
"சரிங்க பெரியவரே.. அப்படியே செய்யுங்க.."
உடனே கிளம்பி அந்த மந்திரவாதியைக் கூட்டி வரச் சென்றார் பெரியவர்..
அத்தியாயம் 9
=============
பார்வதியம்மா தான் துவண்டு போய் இருந்தாங்க..
அந்த நாளைக்குப் பின் வீட்டிலே ஒரு மகிழ்ச்சியே இல்லை. ரகுவும் பதிலேதும் சொல்லாமல் கிளம்பிச் சென்று விட்டான். செவப்பியும் பதில் சொல்ல இப்போது இல்லை, என யோசித்தவளுக்கு ரகுவின் பால்ய சினேகிதன் மகேஷ் ஞாபகத்துக்கு வந்தான்.
'எப்படி மறந்தேன்?'
'அவனப் பார்த்தாப் போச்சு..'
'அவன விசாரிச்சா கண்டிப்பா என் கேள்விக்கான விடை கிடைக்கும்'
மகேஷ்.. ரகு கூட படித்தவன்.. பத்தாவது பாஸாக முடியாததால் விவசாயத்தில் இறக்கிவிட்டது அவனது குடும்பம்.
விவசாயமும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. பார்க்கற இடமெல்லாம் விசாரிப்பான்.
நல்ல பையன்.
அப்பப்போ பண்ணையாரோ, இல்லை வேறு யாரோ ஏதாவது வேலை சொன்னாலும் மறுக்காமல் செய்வான்.
அவனப் பார்த்து நம்ம சந்தேகத்த நிவர்த்தி செஞ்சுக்க வேண்டியது தான் என முடிவெடுத்தவள்.. ரூபாவிடம், "கடைக்குப் போயிட்டு வரேன்டி", என சொல்லி விட்டு கிளம்பினாள்.
சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு, எதிரிலே எதிர்பட்டார் பெரியவர்..
அவரைப் பார்த்து, "வணக்கங்க", என மரியாதை செய்ய, அவரும் "வணக்கம்மா", என்றார்.
ஊரில் அவருக்கென்று ஒரு மரியாதை உள்ளது.
"ஐயா.. என்னாச்சுங்க..? இப்படி ஓட்டமும் நடையுமா எங்க கெளம்பிட்டீங்க?"
"உனக்கு விஷயம் தெரியும்னு நெனைக்கிறேன். செவப்பி, எம்மருமவன நல்லா பயமுறித்தி வச்சிருக்கா.. அவன் ரொம்ப நொந்து போயிருக்கான்.. அதனால எங்க குடும்பமே குழம்பிப் போய் கெடக்கு.."
"அதான் ஒரு மந்திரவாதிய கூட்டிட்டு வந்து, இதுக்கு எதாவது நிவர்த்தி பண்ணலாம்னு நெனைச்சு கெளம்பி போயிட்டு இருக்கேன்.. அப்பறம்.. உங்க வீட்ல எல்லாரும் சௌக்கியம் தானே...!", என கேட்ட படியே நடையைக் கட்டினார்.
பின்னாடியே வந்து கொண்டிருந்தாள் ருக்மணி, பூசாரியின் மனைவி.
அவளைக் கண்டதும் பார்வதியம்மாவிற்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
கண்ணீரைக் கண்ட ருக்மணியும் அப்படியே தழுவிக் கொண்டாள். சிறிது நேரம் அமைதியாக கண்ணீர் வடித்தவள், "வரேம்மா!", என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள்.
'பாவம்.. ருக்மணியும் பூசாரியும்.. எவ்ளோ சந்தோஷமா இருந்தாங்க.. அவங்க சந்தோசத்துல இப்படி மண்ண அள்ளிப் போட்டுருச்சே விதி.. பரிசா கெடச்ச பொண்ணு மேல, இவ்ளோ பாசம் கொட்டி வளர்த்தது தப்பா..? இப்படி இவங்கள அழவச்சிட்டாரே கடவுள்..' என யோசித்துக் கொண்டே நடந்தவள் வயல்வெளியை அடைந்து விட்டாள்.
அப்படியே நோட்டம் விட்டவளுக்கு, மகேஷ் வெகுதூரத்தில் நிற்பது கண்ணில் பட்டது.
செய்கையாலேயே அழைத்தாள் அவனை... மகேஷும் பார்த்துவிட்டான்..
அத்தியாயம் 10
==============
பார்வதியம்மாவை தூரத்தில் கண்டதுமே, வயலில் இருந்த மகேஷ் வரப்புக்கு வந்துவிட்டான்.
"எப்படிமா இருக்கீங்க?"
"ரகு ஊருக்குப் போய்ட்டானா?", போன்ற வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு பேச்சை ஆரம்பித்தார்.
"மகேஷ்.. எனக்கு ஒரு உதவி வேணும்..."
"என்னனு சொல்லுங்கம்மா.. முடிஞ்சா நிச்சயமா செய்யறேன்"
"என் பையனப் பத்தி சில விஷயங்கள் தெரியணும்.. ஸ்கூல்ல ரகுவும், நீயும் பத்தாவது வரைக்கும் ஒரே கிளாஸ்.. ஏதோ போறாத காலம், நீ விவசாயம் பார்க்க வந்துட்ட.. ஆனா ஸ்கூல் டேஸ்ல நடந்த சில விஷயங்கள நான் தெரிஞ்சுக்கலாமா?"
"என்னனு கேளுங்கம்மா.. சொல்றேன்.."
"இந்த செவப்பியைப் பத்தி சொல்லேன்"
கேட்டதுமே முகம் வாடிப்போனது மகேஷுக்கு..
பார்வதியம்மா அதனை கவனித்துவிட்டார்.
"கொஞ்ச நாளைக்கு முன்னாடி செத்துப் போச்சே.. அந்தப் பொண்ணாமா.. அதப்பத்தி இப்ப தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போறீங்க?"
'சரி.. இவன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்ல வேண்டியது தான்.. என.. பேத்தியின் பர்த்டே அன்று நடந்த விஷயங்கள், அன்று அவமானப்பட்டு, அடிபட்டு வந்த ரகுவின் துயரம், அதன் பின் சந்தேகம் நிவர்த்தியாக செவப்பி வீடு சென்று சோகமாக திரும்பியது..' என அனைத்தையும் கொட்டித்தீர்த்தார் பார்வதியம்மா.
"எல்லாம் எனக்கு தெரியும்மா..", எனச் சொன்னவனை தலை நிமிர்ந்து பார்த்தார் பார்வதியம்மா..
"எப்படீனு கேட்டீங்கன்னா, ரகுவே என்கிட்ட சொன்னான்.. சரி செவப்பி விஷயத்துக்கு வருவோம்.. நாங்க படிச்ச ஸ்கூல்ல தான் செவப்பியும் படிச்சா.. எங்களோட ஒரு கிளாஸ் கம்மி.. அப்பெல்லாம் சாதாரணமாத்தான் இருந்தா.. எங்க கூடல்லாம் ரொம்ப நல்லா பேசுவா.."
"நான் பத்தாவது பெயில் ஆகி, வருத்தத்துல இருந்தப்ப ஆறுதல் சொல்ல வந்தான் ரகு.. அப்ப கூட செவப்பியும் வந்திருந்தா.."
"அப்ப அவங்க பேசின, பழகின விவரத்தப் பார்த்தப்பவே புரிஞ்சுக்கிட்டேன்.. ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் ரொம்ப பிடிச்சுப்போச்சுனு"
"அதுக்கப்புறமெல்லாம், என்னைக் காவலா வச்சுதான் ரெண்டு பேருமே அடிக்கடி சந்திக்க ஆரம்பிச்சாங்க"
"பனிரெண்டாவது முடிச்சுட்டு அவன் காலேஜ் போக ஆரம்பிச்சும் இது தொடர்ந்துச்சு"
"எப்ப செவப்பிக்கு அந்த சாமி மாதிரி ஒரு சக்தி வந்துச்சோ, அப்ப இருந்தே அவ அவங்கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சுட்டா.."
"அப்படி அன்னைக்கு பேச்சு முத்திப் போய் தான் ரகு, அவ மேல கைய ஓங்கிட்டான்.. அப்ப அவளுக்கு எங்க இருந்து தான் அந்த ஆவேசம் வந்துச்சோ தெரியல.. ரகுவ நல்லா சாத்திட்டா.. தடுக்கப் போன எனக்கும் ரெண்டு மூணு அடி விழுந்துச்சு.. அப்பத்தான் அவனும் கோவமா, சோகமா அங்கிருந்து கெளம்பிப் போனான்"
"ஆனா விஷயம் எங்கேயும் கசியாமப் பார்த்துக்கிட்டோம்.. அவன் செவப்பிகிட்ட அடி வாங்கினாங்கற விஷயம் வெளிய தெரிய ஆரம்பிச்சாலே போதும், ரகு தன்ன விட்டு நிரந்தரமா விலகிடுவானு கணக்குப் போட்டாளோ என்னவோ தெரியல!.. ஆனா இப்ப அது தான் காரணம்னு ஓரளவு தெரிஞ்சு போச்சு"
"இப்ப அவளே செத்துப்போயிட்டா"
"அவ இறந்த அன்னைக்கி, அவனுக்கு போன் பண்ணேன். அழுதுக்கிட்டே கெளம்பினவன் அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு போன் பண்ணான்.. "இல்லடா.. இப்ப நான் ஊருக்கு வரல,, இத்தன நாளா சாமி மாதிரி வாழ்ந்தவ, இனியும் ஊரு கண்ணுக்குச் சாமியாவே இருக்கட்டும்.. நான் வந்து, அவ என் லவ்வருனு சொல்லி, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, அவ பேரக் கெடுக்க விரும்பலனு" சொன்னான்.
"திரும்ப ரெண்டு நாள் கழிச்சி, நான் போன் செஞ்சப்ப, 'டே.. அன்னைக்கு நான் கெளம்பிட்டு தான்டா இருந்தேன். ஆனா.. செவப்பியோட குரல் எனக்கு கேட்டுச்சுடா.. வேணாம்.. வேணா ரகு... இப்ப ஊருக்குப் போகாத.. நான் சொல்லும் போது போனா போதும்.. என்னைக் கொன்னவங்கல பலி வாங்காம விட மாட்டேனு, அதனால தான் நான் வரல.. அவள கொன்னவங்கல பலி வாங்க, நானும் காத்துகிட்டு இருக்கேனு சொன்னான்.."
"இப்ப ஊர்ல நடக்கிற விஷயங்களப் பார்த்தா அவன் சொன்னதுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கு"
"அதுமட்டுமில்லாம.. இப்ப நீங்க என்னை பார்க்க வருவீங்க.. இதெல்லாம் சொல்லுனு செவப்பியோட குரல் எனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டுச்சுமா.. அன்னைக்கு ரகுவ அடிக்க காரணம் என்னனு நான் இப்ப சொன்னேனே அது தான்னும் செவப்பி சொன்னாமா.."
என ஒரு பெரிய சொற்பொழிவே ஆற்றி முடித்தான் மகேஷ்.
தனது கேள்விக்கான விடை இப்போது இப்படி கிடைச்சிருக்கே...!
'ம்.. எதுவுமே என்கிட்ட மறைக்க மாட்டான் ரகு.. இப்படி ஒரு விஷயத்த இத்தன வருஷமா எப்படி என்கிட்ட சொல்லாம மறச்சான்..!!? அட.. நான் தான் எப்படி தெரிஞ்சுக்காம மிஸ் பண்ணேன்! இது மட்டும் தானா.. இல்ல இன்னும் பல சீக்ரெட் அவன்கிட்ட இருக்கா!?', என அனைத்தையும் நினைத்துக்கொண்டே மகேஷிடம் இருந்து விடை பெற்றார் பார்வதியம்மா....
அத்தியாயம் 11
==============
அப்போது தான் மந்திரவாதியின் கிராமத்திற்கு வந்தடைந்தார் பெரியவர்..
'இவன் சக்தி வாய்ந்தவன் தான்.. இவன்கிட்ட சொன்னா நம்ம பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்குமா? மருமகன் அவனோட பிரச்சனையில இருந்து வெளிய வருவானா? பழைய படி நம்ம வீடு மகிழ்ச்சியான கட்டத்துக்கு திரும்புமா? கற்பகத்து முகத்துல மறுபடியும் சிரிப்ப பார்க்க முடியுமா...' என பலவாறு யோசித்தபடியே மந்திரவாதியின் வீட்டிற்கு வந்தார் பெரியவர்..
அந்த கிராமத்திலேயே அந்த வீடு தனித்து இருந்தது.. வீட்டைச் சுற்றிலும் ஏராளமான மரங்கள்.. மரங்களிலிருந்த பறவைகள் சத்தம் காதைத் துளைத்தது.
இவர் வீட்டில் நுழையும் முன்னே,
"நில்லு பெரியவரே... நீ வீட்டுக்குள்ள வராதே..", என கத்திச் சொன்னார்.
பெரியவர் பயந்துவிட்டார்.
"ஏம்பா.. மந்திரவாதியே... ஏன் என்னை உள்ள வராதேனு சொல்ற?"
"நீ அங்கேயே நில்லு பெரியவரே..! நானே வரேன்", என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் உடனடியாக வெளியேயும் வந்து விட்டார்..
மந்திரவாதி தனி மனுஷன் தான். அதிக நேரம் பூஜையிலேயே செலவிட்டுக் கொண்டிருப்பதால் ஜடா முடியோடு, பெரிய மீசையோடு திடகாத்திரமாய் பெரிதாய் நெற்றியில் குங்குமம் வைத்தவராய் கொஞ்சம் பயமுறுத்தும் தோற்றத்துடனேயே காணப்பட்டார்.
"நீ வருவேனு எனக்குத் தெரியும்.. ஆனா செவப்பியோட சக்தி அதிகமா இருக்கு.. அவளோட தீராக்கோவத்த என்னால அடக்க முடியாது.. நான் கும்படற சாமி.. உனக்கு எந்த உதவியும் பண்ணக்கூடாதுனு நேத்து என் கனவுல வந்து சொல்லிடுச்சு.. நான் மட்டுமல்ல.. வேற யாராலயும் செவப்பிய அடக்க முடியாது.. ஒன்னு செவப்பியாவே கோவத்த விடனும், இல்ல அவ கோவத்துக்கு பரிகாரம் கெடைக்கனும்.. இது ரெண்டுல ஒன்னு தான் நடக்கும்.. அதனால நீ கெளம்பு"
இப்படி ஒரு பதிலை பெரியவர், மந்திரவாதியிடம் எதிர்பார்க்கவில்லை.
'அப்ப மருமகன காப்பாத்த வேற வழியே இல்லையா..!!!' என யோசித்தவாரே துக்கத்துடன் வீடு திரும்பினார்.
இவரது முகத்தைக் கண்டதுமே கற்பகத்திற்கு புரிந்து விட்டது.
"என்ன பெரியவரே..! இப்படி முகத்த தொங்கப் போட்டுட்டு வந்துருக்கீங்க..?"
"அதுவாமா.. அது ஒன்னுமில்ல.."
"அப்படியா.. அப்ப உங்க கூட மந்திரவாதி வரல"
"அவர் வந்து இன்னும்.. ரெண்டு.. ரெண்டு.. நா.. நாள்ல...."
"பெரியவரே.. எதுக்கு திக்கறீங்க? ஏதாவது என்கிட்ட மறைக்கப் பாக்குறீங்களா? ஏதா இருந்தாலும் பரவாயில்ல.. சொல்லுங்க"
"இல்லம்மா..."
"அட... சொல்லுங்க பெரியவரே.."
"அது.. மந்திரவாதி வர முடியாதுனு சொல்லிட்டான்மா.. அது மட்டுமல்ல.. வேற எவனும் வரமாட்டானு வேற சொல்லிட்டான்... அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு..."
"என்ன! அப்படியாச் சொன்னார்?", எனச் சொன்ன கற்பகம் ஓவென அழ ஆரம்பித்து விட்டாள்.
அத்தியாயம் 12
==============
அன்று இரவு நிம்மதியாக தூங்கினார் பார்வதியம்மா.. பல நாட்களாய் மனதில் அழுத்திக் கொண்டிருந்த விஷயத்திற்கு விடை கிடைத்திருக்கிறது.
காலையில் விழித்ததும் எழுந்து நின்றார். அப்போது யாரோ காலைத் தொட்டுக் கும்பிடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.
கிச்சனுக்கு போக அங்கே ஆச்சரியம் காத்திருந்தது. அப்படியே சாப்பிட்டு விட்டுப் போட்டிருந்த பாத்திரங்களும், பிற அனைத்துமே கழுவி கவிழ்க்கப்பட்டு, அவ்விடமே படு சுத்தமாக இருந்தது.
வாசலுக்குப் போக அங்கேயும் ஒரு ஆச்சரியம். வாசலில் தண்ணி தெளிக்கப்பட்டு, அழகான கோலம் போடப்பட்டிருந்தது.
"ம்.. இந்த ரூபாவுக்கு என்னாச்சு..? எவ்ளோ சொன்னாலும், எத்தன தடவை சொன்னாலும் இதெல்லாம் செய்ய மாட்டா.. இன்னைக்கு எப்படி?", என யோசித்தபடியே "ரூபா.. ரூபா..", என கத்திய பார்வதியம்மாவிற்கு போர்வையை இழுத்துப் போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்த ரூபா தான் கண்ணில் பட்டாள்...
'என்னடி இவ, எங்கிட்டயே விளையாடுறாளா...!' என யோசித்தவாறு ரூபாவைப் போட்டு குலுக்கினார்.
பதறியடித்து எழுந்தாள் ரூபா....
"என்னம்மா... நிம்மதியா தூங்கக் கூட விடமாட்டேங்கற...?"
"ஏய்.. நடிக்காத.. நீ முன்னாடியே முழுச்சிட்ட தானே..!! பாத்திரமெல்லாம் கழுவி வச்சிட்டு, வாசல்ல தண்ணி தெளிச்சு கோலம் போட்டுட்டு, அப்புறம் என்னடி தூங்கற மாதிரி நடிப்பு!!!?"
"ஏம்மா.. உனக்கு என்ன பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிருச்சா.. நேத்து கூட நல்லா தானே இருந்த.. அதெல்லாம் நான் எப்பமா பண்ணியிருக்கேன்? படிச்சு முடிச்சு, புரொஜக்ட் வொர்க் முடிச்சு, தூங்கும் போது ஒரு மணி ஆயிடுச்சு.. இன்னும் தூக்கம் அப்படியே கண்ணுக்குள்ள இருக்கு.. இப்படி குலுக்கி குலுக்கி எழுப்பி விட்டுட்டு.. தொல்லை பண்றியே..! போம்மா", என சொல்லிவிட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு மறுபடியும் தூங்க ஆரம்பித்தாள்.
'அப்போ.. இதெல்லாம் யாரு..?', என யோசித்தவருக்கு ஏதோ புரிந்தது போலவும் இருந்தது, புரியாதது போலவும் இருந்தது.
அப்புறம் வழக்கம் போல எழுந்து கல்லூரி சென்ற ரூபா, வீட்டுக்கு மிகவும் பரபரப்பாக வந்தாள்.
"அம்மா.. இன்னைக்கு காலையில காலேஜ்ல என்ன நடந்துச்சு தெரியுமா?"
"என்னடி... என்னனு சொல்லு..?"
"ஒரு பையன் என்னை ரொம்ப நாளா தொல்லை பண்ணிட்டே இருந்தான். இன்னைக்கும் போகும் போது குறுக்கால நின்னு என்கிட்ட ஏதேதோ பேச ஆரம்பிச்சான். திடீர்னு அவனோட உடம்புல அடி விழ ஆரம்பிச்சிருச்சு.."
"ஐயோ அம்மா.. ஐயோ அம்மானு..." அலற ஆரம்பிச்சிட்டான். அப்புறமா வந்து இனிமே உன் வழில என்னைக்குமே நான் வரமாட்டேன்னு சொல்லிட்டு. கும்பிடு போட்டு போயிட்டான். எனக்கு ஒரே ஆச்சரியமா போச்சு..."
"எப்படிம்மா இதெல்லாம்... என்னம்மா நடக்குது?"
"அப்ப அவ உனக்கும் பாதுகாப்பா இருக்கிறா..."
"என்னம்மா சொல்ற...? எவ அவ...? எனக்கு எதுக்கு பாதுகாப்பா இருக்கறா...?"
"வாய்ல போடு.. வாய்ல போடு.. அவ இவனு சொல்லாத"
"அப்ப அவங்க யாரு?"
"ம்... உன் அண்ணி..."
"என்னது அண்ணியா...!" என்ற ரூபாவிற்கு இதுவரை அவளுக்குத் தெரிந்த விஷயங்களை எல்லாம் சொன்ன பார்வதியம்மா, காலையில் வீட்டில் நடந்த விஷயம் வரைக்கும் சொல்லி முடிச்சாங்க...
அத்தியாயம் 13
===============
இவ்வாறாக இரண்டு மாதம் கழிந்தது...
ஊருக்கு கிளம்பி வந்து கொண்டிருந்தான் ரகு.. அவனிடம் நேற்றே சொல்லியிருந்தாள் செவப்பி..
'இப்ப ஒரு நல்ல வாய்ப்பு வரும் போல.. உடனடியா நாளைக்கு ஊருக்கு கிளம்பு' என..
ஊருக்குள் பஸ்ஸில் வந்து இறங்கியவனுக்கு ஊரே வெறுமையாய் தோன்றியது.
நினைவுகளைச் சுமந்தவாறே வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
அப்போது சிறிது தொலைவில் பண்ணையார் தனது கூட்டாளிகளுடன் நடந்து வருவது கண்ணில் பட்டது.
ஒரு சூரைக்காற்று அவனை மெல்ல தொட்டு விட்டுப் போனது..
இப்போது அவன் அவளாகியிருந்தான்.
கண்கள் ரத்தச் சிவப்பாயின..
ஆக்ரோஷமாய் பண்ணையாரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது அவன(ள)து நடை..
"டேய்....", எனக் கேட்ட செவப்பியின் குரல் பண்ணையாரை குலை நடுங்க வைத்தது.
"காதும் காதும் வச்சாப்பல என்னை முடிச்சுட்டேனு பார்ட்டி எல்லாம் வச்சு என் சாவக் கொண்டாடுனியே... இருடி.. உனக்கு வைக்கிறேன் ஆப்பு.. இன்னும் ரெண்டே நாள்ல..."
நடுங்கிக் கொண்டிருந்தான் பண்ணையார்.
கொஞ்ச நாட்களாகவே எந்த தொல்லையும் இல்லாமல் இருந்தவன், இந்த திடீர் எச்சரிக்கையை எதிர்பார்க்கவில்லை. அவனுடன் சேர்ந்து அவனது கூட்டாளிகளும் பயந்து போய் நின்று கொண்டிருந்தனர்.
எச்சரிக்கை விட்டதும் சாதாரணமான ரகு, பண்ணையாரை முறைத்தபடியே நடக்க ஆரம்பித்தான்.
"செவப்பி குரல்ல வந்து மிரட்டி பயமுறுத்தினா. ஓகே.. இப்ப இவன் எதுக்கு காரணமேயில்லாம மொறச்சிட்டுப் போறான்...", எனக் குழம்பிப் போயிருந்தான் பண்ணையார்..
அவனைத் தாங்கிப் பிடித்தவாறு வீட்டிற்கு கூட்டிச் சென்றனர் கூட்டாளிகள்.
வீட்டுக்கு வந்த ரகுவிடம், செல்லச் சண்டை போட்டனர் அம்மாவும், தங்கச்சியும்..
"என்கிட்டயே மறைச்சிட்டு இல்லடா..!"
"இல்லமா.. சம்மதம் கிடைச்சவுடனே சொல்லலாம்னு இருந்தேன்.. ஆனா விதி அதுக்கு வழி விடலையே...", என்றவாரு கண் கலங்கினான் ரகு.
"அண்ணா! இங்க நடக்கற விஷயம் தெரியுமா..?", என அன்று வீட்டில் நடந்த நிகழ்ச்சியையும், அவளது காலேஜில் நடந்த நிகழ்ச்சியையும், அன்றிலிருந்து தினம் தினம் நடக்கும் ஒவ்வொரு அதிசயத்தையும் அடுக்க ஆரம்பித்தாள் ரூபா...
செவப்பி மீது மிகுதியான அன்பு பிறந்ததை உணர்ந்தவனாய், அவனது கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவெனக் கொட்டியது.
அடுத்த இரண்டாவது நாள் காலையிலேயே இவனுக்கு எங்கு போக வேண்டும்.. என்ன செய்ய வேண்டும்.. என்பதான அறிவிப்புகள் செவப்பியால் கொடுக்கப்பட, ஆத்தங்கரையிலேயே காத்திருந்தான் ரகு.
செவப்பி போலவே பண்ணையார் நீருக்குள் மூழ்கிய வேளை, அவனுக்கே தெரியாமல் வெளியே வர முடியாதபடி அப்படி அழுத்திப் பிடித்துக் கொண்டான் ரகு.
அந்நேரம் பார்த்து ஒரு பெருங்கூட்டமே அக்கரைக்கு குளிக்க வர, அங்கிருந்து நைசாக நழுவினான்.
பெருமூச்சு விட்டபடியே தப்பித்த பண்ணையார், இனிமே தனியா எங்கேயும் போகக்கூடாது என நினைத்தவாறு வீட்டை நோக்கி வேக வேகமாக ஓட, அவனைப் பார்த்து, அவனது பயத்தைப் பார்த்து, அவனது பரிதாப நிலையைப் பார்த்து, சிரித்துக் கொண்டிருந்தாள் செவப்பி காற்று ரூபத்தில்..
அத்தியாயம் 14
================
ரகு மேல அப்பப்போ செவப்பி வந்து போற விஷயம் ஊருக்குள் மெல்ல பரவ ஆரம்பித்தது.
பயந்து போயிருந்தார் பார்வதியம்மா..
'பலி வாங்கப் போறது என்னவோ செவப்பி.. ஆனா மாட்டினா தண்டனை வாங்கப்போறது ரகு.. இதப்பத்தி அவன் எதுவும் யோசிச்ச மாதிரியே தெரியலையே..'
'செவப்பிய லவ் பண்ணினான்.. அது முழுசா நிறைவேறல... அவளும் இப்ப இல்ல.. இப்பவும் அவன் அவளுக்காக இப்படி ஏடாகூடமா எதுனா பண்ணப்போயி, ஏதாவது சிக்கல்ல மாட்டினா.. அப்புறம் அவனோட வாழ்க்கை...!?'
ரகு அந்நேரம் வரவும், அவன்கிட்டேயே கேட்டார்..
"ரகு.. ரூபா படிப்ப முடிச்சிட்டு, கல்யாணத்துக்கு நிக்கப் போறா.. நீ என்னடானா, உன்னோட காதலுக்காக இப்ப 'பலி வாங்கும் படலத்துல' இறங்கிட்ட.. கொஞ்சம் யோசிப்பா"
"நீ சொல்ற.. சரிமா... திரும்ப எங்கிட்ட செவப்பி பேசினானா... நான் உன்னோட கவலைய அவளுக்குச் சொல்றேன்"
"ஆனா ஒன்னுமா.. நான் இப்பவும் அவள காதலிக்கிறேன்.. என்னிக்குமே அவளுக்கு மட்டும் தான் என் மனசுல இடமிருக்கு.."
"அதனால.. கல்யாணம் பண்ணு அது இதுனு பேசிட்டு என்கிட்ட வராத.. சரியா.."
'என்னடா இவன் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கறான்.. எல்லா விஷயமும் சரியா போயிட்டு இருக்கு.. கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னா விடமாட்டான் போல இருக்கே..' என யோசித்த பார்வதியம்மா அடுத்த கட்ட வேலைக்காக கிச்சனுக்கு சென்றார்..
அத்தியாயம் 15
==============
'என்னடா இவன்...'
'தங்கச்சி கல்யாணம் பாதிக்கும்.. கொஞ்சம் ஒழுங்கா இருடானு சொல்லப்போனா.. தனக்கே கல்யாணம் வேணானு சொல்லி தலையில குண்ட போடறான்', என யோசித்துக் கொண்டே தூங்கிப் போனார் பார்வதியம்மா...
அடுத்த நாள் காலை, தோட்டத்திலே உட்கார்ந்திருந்த ரகுவிற்கு செவப்பியின் குரல் கேட்டது.
"என்ன ரகு.. உனக்கு ஏதாவது பிரச்சினை வந்திடும்னு பயப்படறியா.. அப்படியெல்லாம் எதுவும் ஆக விடமாட்டேன்.. கவலைப்படாதே.."
"இன்னொன்னு.. நீ ஏன் கல்யாணம் பண்ணமாட்டேனு அத்தைகிட்ட சொல்லிட்டு இருந்த..?"
"ஒழுங்கா முடிய மாத்திக்கோ.."
"முடியாது செவப்பி.. என் மனசு புள்ளா இப்பவும் நீ தான் இருக்க.. எப்பவும் நீ மட்டும் தான் இருப்ப.. இப்ப நீயே சொன்னாலும் என்னால எதுவுமே பண்ண முடியாது"
"உனக்கென்னப்பா.. ஆவியா மாறி சுத்திகிட்டு இருக்க.."
"காதல மனசுல சுமந்துகிட்டு, அது நிறைவேறப் போறதே இல்லேனு தெரிஞ்சுக்கிட்டு, வாழ்ற வலியிருக்கே அது வாழும் போது தான் தெரியும்... நீ வேற என்ன வேணும் சொல்லு.. செய்யத் தயார்.."
"நான் உன்னை மட்டும் தான் லவ் பண்ணேன்.. பண்றேன்... பண்ணுவேன்.. இதுல எந்த விதமான மாற்றமும் இல்ல.."
"வேற எவளையாவது காதல் பண்ணு, கல்யாணம் பண்ணுனு சொல்லிட்டு இருக்கற வேளைய இத்தோட விட்டுடு செவப்பி"
"சரி.. சரி.. ரொம்ப நேரமாச்சு.. நீ கெளம்பு கெளம்பு.. உங்க வீட்ல.. தேட மாட்டாங்க..", எனச் சொல்லி நாக்கை கடித்துக் கொண்டான் ரகு.
அப்போது சட்டென வந்து விழுந்த செவப்பியின் கண்ணீர், காற்றுக்கு கூட தெரியவில்லை..
அத்தியாயம் 16
===============
அடுத்தநாள் அந்த கிராமத்தில் நடந்த விஷயம் செவப்பிக்கே அதிர்ச்சி கொடுத்துடுச்சு..
பண்ணையாரு பொண்டாட்டி கற்பகம் விஷத்த குடிச்சு தற்கொலை முயற்சி பண்ணிக்கிட்டா.. எப்படியோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் முறையான சிகிச்சைய சரியான நேரத்துக்கு கொடுத்ததால, சாவோட விளிம்புக்கு போனவ பிழைச்சுக்கிட்டா..
பாவம் அவதான் என்ன பண்ணுவா? வாழ்க்கையே நிம்மதி இல்லாம போச்சு.. பயத்தோடவும், படபடப்போடவும் எப்பவுமே நிம்மதியில்லாம வாழ்றதுக்கு, போயிச்சேர்ரதே மேலுனு நினைச்சுட்டா போல..
கொஞ்சம் கொஞ்சமா மருந்தும், குளுக்கோசும் உள்ள போக, மெதுவா பழைய நிலைமைக்குத் திரும்பினா..
அவள பாதுகாப்பா கொண்டு வந்து வீட்ல விட்டுட்டாங்க, அவளோட சொந்தக்காரங்க..
அவ உயிருக்கு ஆபத்து ஏதுமில்லேனு தெரியவும், ஒவ்வொருத்தரா அவளுக்கு அட்வைஸ் பண்ணிட்டு கிளம்ப ஆரம்பிச்சிட்டாங்க..
இப்ப தனியா கண்ணீர் விட்டபடியே பெட்ல படுத்திருந்தா..
அப்ப ஒரு குரல் கேட்டுச்சு..
"கற்பகம்..."
"கற்பகம்..."
"ய.. யாரு..?"
"கற்பகம்.. நான் தான் செவப்பி..."
பதட்டமாகி, பெட்டிலிருந்து சட்டென எழுந்து நடுங்கியபடி உட்கார்ந்தாள் கற்பகம்..
"பயப்படாத கற்பகம்... உன் புருஷன் பண்ண பாவத்துக்கு, உனக்கு எதுக்குமா தண்டனை தரணும்.. சரி எனக்கு நடந்தது நடந்து போச்சு.. இனி என்னால திரும்பி உயிரோட வரமுடியாது. இன்னும் உன் புருஷன் மேல இருக்கிற என்னோட கோபம் தீரல தான்.. ஆனாலும் உனக்காக.. நான் அவன பழி வாங்குற என்னோட வெறிய தணிச்சுக்கலாமுனு இருக்கேன்.. ஆனா.. திரும்பவும் அவன்.. எந்த பொண்ணுக்காவது ஏதாவது கெடுதல் பண்ணினதா தெரிஞ்சா, அடுத்த நொடி அவனுக்கு ஆபத்து தான்.. சொல்லி வை.. இனிமே நான் அவனுக்கு எந்த தொந்தரவும் தரமாட்டேன்.. எனக்கு வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு.. நீ எதுக்கும் பயப்படாத..சரியா", எனச் சொல்லி முடிக்க...
பொல பொலவென்று உதிர்ந்த கண்ணீரோடு, கை கூப்பியவாறு நன்றி சொல்லி அமர்ந்திருந்தாள் கற்பகம்..
அத்தியாயம் 17
===============
சரி.. பண்ணையார் விஷயம் முடிவுக்கு வந்துருச்சு..
'ரகுவுக்கு ஒரு ஒரு நல்ல வழி பண்ணனுமே' என நினைச்ச செவப்பிக்கு சிறு வயது ஞாபகம் ஒன்று வந்தது.
அவள் அப்போது எட்டாம் வகுப்பு மாணவி..
வகுப்புக்கு ஒவ்வொருத்தரா வர வர.. வாத்தியார் வருவதற்கு முன்னாடியான சந்தோசத்தில் இருந்தது..
அது முழுஆண்டு விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கின முதல் நாள்..
அந்த லீவுல நடந்த கதைகள், பார்த்த படங்கள், போன ஊர்கள்.. என சிரிப்பும் கும்மாளமுமாக வகுப்பு இருந்தது..
கொஞ்ச நேரத்துல ராம் சார் வந்துட்டாரு..
எல்லோருக்குமே ரொம்பவே பிடிச்ச வாத்தியார் அவர்.. படத்தை விட வாழ்க்கையைத் தான் தெளிவா கத்துக் கொடுத்தார்..
அவரு வந்தவுடனே ஒவ்வொருத்தரையா நிக்க வச்சு, அவங்க லீவு ஸ்டோரியக் கேட்டு, அதுல ஏதாவது காமெடி பண்ணி, எல்லோரையும் சிரிக்க வச்சுக்கிட்டிருந்தாரு..
அப்பத்தான் கிளாஸுக்கு வெளியில ஒரு சவுண்ட் கேட்டுச்சு..
"சார்... சார்.."
கிளாஸே அமைதியாகி அங்கே கவனிக்க, அங்கு நான் நின்று கொண்டிருந்தேன்..
'நான் என்று சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு.. அது என்னானு கொஞ்ச நேரத்துல சொல்றேன். இப்ப அங்கே கவனிப்போம்'
"குட் மார்னிங் சார்... என் பேரு தேன்மொழி.. இன்னைக்குத்தான் ஸ்கூல்ல சேர்ந்தேன் சார்..."
"குட் மார்னிங்.. வாம்மா.. வந்து உட்காரு.. அட என்னம்மா.. அப்படியே செவப்பி மாதிரியே அச்சு அசலா இருக்க.. உங்களுக்குள்ள ஆறு வித்தியாசம்,எட்டு வித்தியாசம் அப்படி எதுவுமே இல்லை, அவ்வளவு ஒற்றுமை", என சார் சொன்ன வேளை, தேன்மொழி என்னைப் பார்த்தாள். ஒரு சினேகப் புன்னகை பூத்தாள்.
அனிச்சையாக என் அருகே நான் அவளை அமரச் சொல்ல.. அவளும் வந்து அமர்ந்து கொண்டாள்.
அடுத்த நாள் ரகு கிட்ட நான் அவளை அனுப்பி வைச்சேன்.. ஆனால் அது நான் இல்லேனு சரியா கண்டுபிடிச்சிட்டான்.. இருந்தாலும் அப்படி ஒரு ஆச்சரியம் அவனுக்கு..
அன்னைக்கு கிளாஸ்லயே ராம் சார் சொன்னாரு...
"உலகத்தில மொத்தமாக ஏழு பேர்.. ஒரே மாதிரி இருப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா இன்னைக்குத் தான் செவப்பியோட இரண்டாவது ஆளையே பார்க்கறேன்.. இன்னும் அஞ்சு பேரு எந்த நாட்டுல இருக்காங்களோனு.."
'ஆமா.. அதே தான் ஒரே வழி' என யோசித்த செவப்பி.. இப்ப தேன்மொழி எங்கே இருப்பா?னு தேட ஆரம்பிச்சா..
(தொடரும்)
(அடுத்த அத்தியாயத்தோடு முடியும்)
செவப்பி - அத்தியாயம் 18 (இறுதி அத்தியாயம்)
==============================================
பண்ணையாரு வீட்டுக்கு வந்தவுடனே, நடந்த விஷயத்த ஒன்னு விடாம கொட்டினா கற்பகம்..
அத்தனையும் கேட்ட பண்ணையாரின் கண்களில் நீர்த்துளி லேசாய் எட்டிப்பார்த்தது.
"செவப்பிய சாமியாவே கும்பிடறவங்க, இந்த ஊர்ல ரொம்ப பேர் இருக்காங்க.. அவங்களையெல்லாம் வரவழைச்சுப் பேசி, 'செவப்பியம்மா"ங்கற பேர்ல ஒரு கோவில் கட்டுங்கனு சொல்லலாங்க, அதுக்கு அதிகபட்சமா நாம செலவு பண்ணலாம், என்ன உங்களுக்கு சம்மதம் தானே?"
தலையை வேக வேகமாக சரி சரி என தலையை ஆட்டிய பண்ணையாரைக் கண்ட செவப்பி.. அங்கே தான் நின்று கொண்டிருந்தாள்.
அவளுக்கு அப்படி ஒரு பூரிப்பு...
'சரி.. நான் எதுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு, மறுபடியும் இங்க வந்தேன்'
'சரி.. தேன்மொழியைத் தேடலாமென யோசித்தபடி கிளம்பினாள் செவப்பி...
அதே நேரம்.. தேன்மொழி...
சென்னையில் தான் இருந்தாள்.. ரொம்பவும் மாடர்ன் பெண்ணாக, உயர் தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள்..
நன்றாகப் படித்து நல்ல வேலையில் கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு, அதை சந்தோசமாக செலவழித்தும் கொண்டிருந்தாள்.
அவளைக் கண்டதும் தனது லீலையை ஆரம்பித்தாள் செவப்பி..
அவள் போன காரை பஞ்சராக்கி நடக்க வைத்தாள், அதே பாதையில் ரகுவை வரும்படி வைத்தாள். அவன் வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஹெல்மெட் போட்டுக் கொண்டு அங்குமிங்கும் பார்க்காமல் ஸ்ரைக்டாக போனவனை ஒரு அழகான கை வழிமறித்தது.
வண்டி சட்டென ஆஃப் ஆனது. அப்போது தான் பார்த்தான் முன்னே நின்று கொண்டிருந்தவளை..
ஒரு விநாடி "செவப்பி" எனக் கூப்பிடப் போனவன், பின் பின் சுதாரித்து "தேன்மொழி" எனக் கூப்பிட்டான்.
தேன்மொழியும் அப்போது தான் பார்த்தாள்.. அவளுக்கு முன்னே நிற்பது 'ரகு' என்று..
"ஏய் ரகு.. எங்க இங்க..?"
"ஹே தேன்மொழி.. நான் இங்கத்தான் ரொம்ப நாளா வேலை பாத்துட்டு இருக்கேன்.."
"ப்பா... பார்த்து எத்தனை நாளாச்சு... சூப்பர்.. சரி உட்காரு.. கேள்விப் பட்டிருப்பேனு நினைக்கிறேன்"
"ஆமாம்.. நானும் கேள்விப்பட்டேன்.. ச்சே எப்படி வாழ்ந்தவ..!"
இப்படியாக அவர்களது பயணம் ஆரம்பமானது..
இது நிச்சயம் காதலில் முடியும் என்ற நம்பிக்கையோடு அப்படியே காற்றோடு காற்றாய் கலந்து காணாமல் போனாள்....
செவப்பி...!!!
(முற்றும்)