மரம் மட்டுமல்ல அது

தொன்னுத்தொம்போதுல இங்க
குடி வந்தப்போ வச்ச குச்சி அது

பாரு இருவது வருசமா பூத்து

காச்சி பறிச்சு தின்னோம்

மழ இல்லா நேரத்துல

வாடி வதங்கினாலும் ஒத்த துளி

மேல பட்டா சிலுப்பிட்டு வளரும்

பச்ச பச்சயா

புழுவெல்லாம் அலையுது

வெட்டிருங்கனு சொன்னா

கோவப்பட்டவன் அவன் தான்




அவனுக்கு கல்யாணம்

பொம்பளப்புள்ள இல்லாத வீடு

ஒத்த ரூம்புக்குள்ள அந்தப் புள்ளயும்

வாழனுமேனு ஒரு ரூம்பு கட்டிக்கிடுதான்

உள்ளேயே குளிக்க பாத்ரூம் ஒன்னு வேற

வேணும் தான அதுவும்




பிஞ்ச ஒடைச்சு ஆட்டுக்குப் போட்டு

காய சாம்பாருக்கு பொரியல் வைச்சிடு

இலைய கீரை வச்சிடுனு போன்ல

சொன்னான்னு தொங்கிப் போன

மொகத்தோட அவக அப்பா தான்

துள்ளத் துடிக்க வெட்டிப் போட்டாக

அந்த முருங்க மரத்த




அம்மாவிற்கோ கதைகள்

கதைகளோடு தான் அவள் வாழ்வு

இப்படிப் பேச்சுகளிலும்

பழைய நினைவின் மூச்சுகளிலும் தான்

அவள் வாழ்வு




ஒன்றும் மறுத்துப் பேசாதவர் அப்பா

எப்பொழுதும் மரத்தில் சைக்கிளை

சாய்த்துவிட்டு அதன் வேரில்

கால் முகம் கழுவி நீர் ஊற்றிவிட்டுத் தான்

உள்ளே நுழைவார்

மரம் வெட்டிய பின்னும்

சைக்கிளை அங்கு தான் நிறுத்துகிறார்

புதிதாக கட்டிய அறையின்

சுவரில் சாய்த்து

அங்கே முகம் கழுவி விட்டு

கொஞ்சம் நீரெடுத்து சுவரில் தெளிக்கிறார்




அம்மாவோ பாத்திரம் அலசிய

நீரைக் கொட்ட ஓடி வந்து

பின் சுதாரித்து மரத்த வெட்டுனது

அய்த்துப் போச்சு லே என்று

அசட்டுச் சிரிப்பு சிரித்து விடுகிறாள்




புதுப் பொண்டாட்டியோடு சந்தைக்கு

சென்றவன் மனைவி

முருங்கைக் கீரை கேட்க

அதான் வீட்ல அத்தா பெரிய

மரம் இருக்கே ஒடிச்சுத் தாரேன்

என்று சொல்லிப் பின்

கொஞ்சம் கண் கலங்கி

கட்டு பத்து ரூவா என்று

கேட்டு வாங்கிப் போனான்

முருங்கைக் கீரையை

எழுதியவர் : mariselvam (28-Oct-19, 10:29 am)
சேர்த்தது : Mariselvam
பார்வை : 60

மேலே