கருணை நயந்துநின்ற நாகரிகம் ஏற்ற கலியாகும் இசைந்து - நாகரிகம், தருமதீபிகை 526

நேரிசை வெண்பா

நல்ல கருணை நயந்துநின்ற நாகரிகம்
அல்லல் நிலைகட்(கு) அமைவாகச் - சொல்லவந்த
இன்னா நிலைமையே ஏற்ற கலிஎன்னும்
இந்நாளுக்(கு) ஆகும் இசைந்து. 526

- நாகரிகம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கருணை கனிந்து நல்ல நிலையில் உயர்ந்திருந்த நாகரிக வாழ்வு இன்று அல்லல் நிலையில் இழிந்துள்ளது; இருந்தும் அதனைப் புகழ்ந்து சொல்வது பொல்லாத கலியின் இயல்பாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உண்மை தெரியாமல் உழல்வது பொல்லாத புன்மையாப்ப் புலையுறுகின்றது. சிறுமையைப் பெருமையாகவும், இழிவை உயர்வாகவும் களிமிகுத்துத் திரிவது பழிவாழ்வாய் அழிவையே தருதலால் அது கொடிய அவலமாய் முடிகிறது.

நகர வாழ்வு நாகரிகம் என வந்தது எனப் பலர் பகர நேர்ந்தனர். நாகர் என்பது தேவராதலால் அவர் இயல்பு தோய்ந்தது நாகரிகம் என நேர்ந்தது என்று அதற்கு எதிர்மொழி எழுந்தது.

நாகர் – தேவர், இகம் - இவ்வுலகம். விண்ணுலக வாசிகளைப் போல் புண்ணிய நீர்மை தோய்ந்து கண்ணியமுடன் இம்மண்ணுலகில் நடத்தி வரும் வாழ்வையே நாகரிகம் என்னும் பதம் நன்கு உணர்த்தியுள்ளது என அறிஞர் முடிவு செய்துள்ளனர்.

எவ்வழியும் திவ்வியமான செவ்விய நீர்மையையே இது குறித்து வருதலால் இதன் சிறப்பும் சீர்மையும் செழித்து வந்தன.

‘நல்ல கருணை நயந்து நின்ற நாகரிகம்’ என்றது நாகரிகத்தின் உருவையும், உயிர் நிலையையும் கருதியுணர வந்தது. திருந்திய கருணையும் பெருந்தகவும் பொருந்தியுள்ளவரே சிறந்த நாகரிகராய் உயர்ந்து விளங்குகிறார்.

முதல் நாள் போரில் எதிர்ந்து பொருது தோல்வியடைந்து மறுகி நின்ற இராவணனைக் கண்ணோடி இரங்கி இராமன்.அருள் புரிந்து விடுத்த பெருந்தகைமையை உலகம் வியந்து புகழ்ந்து வருகிறது. அந்தப் புண்ணிய வீரன் அன்று கண்ணோடியருளியது கண்ணியமான நாகரிகம் என்று இன்றும் யாவரும் உவந்து போற்றுகின்றனர்.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

ஆள்ஐ யா!உனக்(கு) அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்றுபோய், போர்க்கு
நாளை வா'என நல்கினன் நாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். 255 , முதல்போர் புரிபடலம், யுத்த காண்டம், (இராமாயணம்

'சூறைக் காற்றில் எதிர்ப்பட்ட பூளைப் பூழிகள் போல் உன் படைகள் முழுவதும் நாசமாயின; பாணங்களால் அடிபட்டு நீயும் நொந்து நின்றாய், இன்று உன்னால் யாதும் இயலாது; ஊருக்குப் போய் உன் உடலைத் தேற்றிக் கொண்டு முடியுமானால் போருக்கு நாளை வா' என்று இலங்கை வேந்தனை நோக்கி இராமன் இங்ஙனம் கூறியுள்ளான். தன் மனைவியைக் கவர்ந்து கொண்டு தனக்குப் பெரிய துன்பங்களை விளைத்துள்ள கொடிய பகைவனை உரிய சமயம் வாய்த்தும் கொன்று வீழ்த்தாமல் ’இன்று போய் நாளை வா’ என்றது எவ்வளவு பெருந்தன்மை! எத்துனை நாகரிகம்! இதனை உய்த்துணர வேண்டும்.

தன்னைச் சிலுவையில் அறைந்து உயிர் வதை செய்த கொடியவர்களிடத்தும் ஏசுநாதர் இரங்கியருளி இதம் புரிந்துள்ளார்.

Father, forgive them; for they know not what they do. - Bible

"பிதாவே இவர்களை மன்னித்தருளும், தாங்கள் செய்வது இன்னது என்று இவர்கள் அறியவில்லை' என ஆண்டவனை நோக்கி அம்மகான் இவ்வாறு வேண்டியிருக்கிறார், தன்னைக் கொல்கின்ற கொலையாளிகளிடத்தும் உள்ளம் இரங்கி உதவியிருப்பது அவரது உன்னத நிலைமையை உணர்த்தி நிற்கிறது.

இன்னவாறு உயர்ந்த பண்பு படிந்து சிறந்த அன்பு நிலையில் மிகுந்த மேன்மையாய் மேவியிருந்த நாகரிகம் இன்னாளில் கீழ்மையான வழிகளில் வீணே பேசப்படுகின்றது.

’கலி என்னும் இந்நாளுக்கு ஆகும்’ என்றது முன்னாளில் உயர்ந்த மேன்மக்களின் இயல்பாய்ப் பான்மை சுரந்திருந்த நாகரிகத்தை இழிந்த நிலைகளில் இந்நாள் வழங்கி வருவது கலிகாலக் கொடுமையாய் முடிந்தது என இங்ஙனம் கடிந்து கூற வந்தது.

உணவு, உடை முதலிய பலவகைகளிலும் இஞ்ஞான்று அஞ்ஞானமாய் நாகரிகங்கள் பரவி நிற்கின்றன. நாகரிகம் எது? நல்ல நாகரிகர் யார்? இந்தக் கேள்விகளுக்கு யாரும் விடை கூறாமலே எல்லாரும் பதில் சொல்ல நேர்வர்.

பாத்திரத்தைக் கடித்துக் குடிப்பது நாகரிகம்; அண்ணாந்து எடுத்துக் குடிப்பது அநாகரிகம்.

தன் கையால் தன் முகத்தைச் சிரைத்துக் கொள்வது நாகரிகம்; சிரஞ்சீவியிடம் போய்ச் சிரைத்து வருவது அநாகரிகம்.

உயர்ந்த புகைச்சுருட்டுப் பிடிப்பது நாகரிகம்- அங்ஙனம் பிடியாதிருப்பது அநாகரிகம்.

தலை மயிரைத் தறித்து வகுப்பு எடுத்து நிற்பது நாகரிகம்; முடியை நெடிது வளர்த்து வருவது அநாகரிகம்.
இன்னவாறு நாகரிகங்கள் பல நம் நாட்டில் வந்து குடியேறியுள்ளன.

நேரிசை வெண்பா

கண்டவர் எல்லாம் கடித்துவாய் வைத்தெச்சில்
கொண்ட கலங்களையே கூசாமல் - தொண்டை
அளவும் துழாவி அருந்துவார்; இந்நாள்
அளவும் தெரிய அமர்ந்து. – கவிராஜ பண்டிதர்

நம்முடைய நாட்டின் முன்னேற்றத்தை இது காட்டியுளது.

நேரிசை வெண்பா

கன்னத்தில் முத்தமிட்டுக் கட்டித் தழுவுகின்ற
வன்னப் படக்காட்சி வந்தவுடன் - அன்னதனைப்
பார்த்துக் களித்தல் பரவசமாய் வந்ததுபோல்
வார்த்துக் கழித்தலே வாழ்வு. – கவிராஜ பண்டிதர்

நம் மக்களின் தினசரி வாழ்க்கையை இது மனமறிய விளக்கியது. மருளும் மயக்கமும் வாழ்வை இருள் செய்துள்ளன.

நேரிசை வெண்பா

தங்,கையால் தம்முகத்தைத் தாம்சிரைக்கத் தந்தலையைப்
பங்கையாய் வெட்டிப் பதம்படுத்த - மங்கைமார்
சொன்னத்தைக் கேட்டுத் தொழும்புசெய்யக் கற்றதல்லால்
என்னத்தைக் கற்றோம் இவண். – கவிராஜ பண்டிதர்

நாம் புதுமையாய்ப் படித்திருக்கும் படிப்பை இது வடித்துக் காட்டியுள்ளது. சிரைத்துக் கொள்வதைக் குறைத்துச் சொல்வதாகக் கோபம் கொள்ளலாகாது. கால வேற்றுமையால் நேர்ந்த மாறுதல் அது: அவசியம் செய்ய வேண்டியதே; ஆயினும் மயிரை மாத்திரம் அங்ஙனம் திருத்துவதோடு நின்று விடாமல் உளத்தையும் கொஞ்சம் திருத்திக் கொள்ள வேண்டும். உள்ளம் திருந்திய போதுதான் உயர்ந்த நாகரிகம் விளைந்து வரும், வெளிப்பகட்டிலும், மேனி மினுக்கிலும் வியனான பயனை அடைந்து கொள்ள முடியாது. மயிரைத் தடவி மடியாமல் உயிரைத் தடவி உயர்ந்து கொள்ளுக.

அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

முகத்திலெழு மயிரைநிதம் முளைக்காமல் துடைக்கின்றார்;
மூண்டு தீதாய்
அகத்திலெழு செயிர்களையார்; ஆசைகளை மிகவளர்ப்பார்
அவமாய் நின்று
சகத்திலிவர் செய்துவரும் சதுராட்டந் தனைக்கண்டு
சான்றோர் எல்லாம்
நகைத்துவரு தலைக்காணார்; நவையிலே சுவைகண்டு
நடக்கின் றாரே. 1

வாசமுறு தைலங்கள் வளம்படுத்தி வகுப்பெடுத்து
வகைசு ருட்டி
நேசமுடன் மயிரொழுங்கு நேர்செய்ய நெடும்பொழுது
நிதம்க ழிப்பார்;
பாசமுடன் மயிர்திருத்தப் படித்ததன்றி உயிர்திருத்தப்
படியார் அந்தோ!
ஈசனெதிர் பின்பிவர்போய் இன்னுயிருக்(கு) என்னபயன்
இசைப்பார் அம்மா! 2 கவிராஜ பண்டிதர்

இந்தப் பாசுரங்கள் ஈண்டு சிந்திக்கத் தக்கன. வந்துள்ள பிறவிப்பயனை முந்த உணர்ந்து முடிவு நேருமுன் கடிது கதி காணுக. அந்த இனிய காட்சி அரிய மாட்சியாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-19, 3:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே