உற்ற விருந்தை உபசரித்து நின்றொழுகும் காட்சி யுடையார் - பண்பு, தருமதீபிகை 536

நேரிசை வெண்பா

உற்ற விருந்தை உபசரித்(து) உள்நோக்கி
மற்றவரை ஆதரித்து மாண்புறுத்திக் - கற்ற
கலைநெறி நின்றொழுகும் காட்சி யுடையார்
தலைநெறி யாவர் தழைத்து. 536

- பண்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வந்த விருந்தினரை உபசரித்து ஊட்டி, யாவரையும் ஆதரித்து எல்லாரையும் மேன்மைப்படுத்தி, நெறியோடு ஒழுகிவரின் அது உயர்ந்த பேரின்ப நிலையாய் ஒளிபெற்று வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனித சமுதாயத்துக்கு இனிது பயன்படுகிற அளவே உலகிலுள்ள பொருள்கள் மதிப்பும் மாண்பும் அடைகின்றன. சீவ கோடிகளுக்கு இதமாகவே யாவும் படைக்கப்பட்டுள்ளன. அந்தப் படைப்புகளைக் கொண்டு மனிதன் அதிசய நலங்களை ஆற்றி, விதி முறைகளைப் போற்றி வருகிறான்

அறிவும், ஆற்றலும் நெறியும், நீர்மையும் மனித இனத்தில் பெருகியிருத்தலால் அரிய பல உரிமைகளை மருவித் தனி நிலையில் உயர்ந்து இந்த மரபு தழைத்து நிற்கிறது. அளவிடலரிய பிராணிகளுள் மனிதன் உயர்வாய்ச் சிறந்து திகழ்வது மனவுணர்வின் பண்பாடுகளாலேயாம்.

பகுத்து உணரும் அறிவு மனிதனை உயர்த்துமாயினும் பண்போடு கலந்தபோதுதான் அது இன்பமாய் எழில் சிறந்து ஒளி புரிந்தருளிகின்றது; பண்பு படியவில்லையாயின் அந்த அறிவு இன்பரசம் இழந்து இழிந்து படுகின்றது.

பண்பு படிந்த பெருந்தகைமை யாண்டும் அன்பு சுரந்து ஆருயிர்களை ஆதரித்து வருகிறது. உள்ளம் கனிந்து விரிந்த பொழுது உலகம் அங்கே உவந்து குவிகிறது.

’உற்ற விருந்தை உபசரித்து’ என்றது. அதிதிகளை ஆதரித்தருளும் அமைதி தெரிய வந்தது. உயிர்களைப் பற்றியுள்ள துயர்கள் பல; அவற்றுள் பசித்துயரம் மிகக் கொடியது. சீவர்களை வருத்தி வருகிற இந்தத் துயரத்தை நீக்கியருளுவது உயர் பெரும் புண்ணியமாய் ஒளி சிறந்துள்ளது. கொடிய துயரை நீக்கி, அரிய உயிரை இனிது மகிழச் செய்தலால் அன்னம் இடுவது பெரிய கருமம் என இன்னவாறு பெருமகிமை பெற்றது.

இருந்தோம்பி இல்வாழ்வ(து) எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. 81 விருந்தோம்பல்

விருந்தினரை விழைந்து பேணி அவரை உவந்து உபசரிப்பதே இல்லறத்தின் உயர்ந்த பயனாம் என வள்ளுவர் இங்ஙனம் உணர்த்தியுள்ளார். எவ்வழியும் சீவர்களுக்கு இதம் செய்வது திவ்விய வாழ்வாய்ச் சிறந்து திகழ்கிறது.

உற்ற விருந்தை விரும்பி உபசரிக்க வில்லையானால் அந்த மனைவாழ்க்கை குற்றமுடையதாய்க் குலைந்து படுகிறது.

உணவு அருந்தின் விருந்து உவந்து செல்லுகின்றது; அதனால் புண்ணியம் வருகிறது; அவ்வரவு மேலான பதவியை அருளுகிறது. அங்ஙனம் அருந்தாவிடின் வருந்தி அகலுகிறது; அதனால் பாவம் படிந்து கொள்ளுகிறது.

நேரிசை வெண்பா

வருந்தி ஒருவன்பால் மற்றொருவன் வந்தால்
பொருந்தி அகமலர்ந்து போற்றி - விருந்தேற்றுத்
தன்னால் இயன்றளவும் தானுதவான் ஆகினவற்(கு)
இன்னா நரகே இடம். - பாரதம்

பசித்து வந்தவர்க்கு இரங்கி உதவி புரியானாயின் அவன் பாவியாய் இழிந்து படரடைய நேர்கின்றான் என இது கூறியுள்ளது. இனியது ஒழியவே இன்னாமை எய்தியது.

விருந்தினரை ஆதரிப்பதைச் சிறந்த கடமையாக இந்நாடு கருதி வந்துள்ளமையை நூல்கள் காட்டி நிற்கின்றன.

ஒரு வீரன் போருக்கு எழுந்தான்; அப்பொழுது தனது அடலாண்மையை அயலறியும்படி அவன் வீர சபதம் கூறினான். போராட நேர்ந்தவன் அன்று சொல்லாடி நின்றதை எல்லாரும் வியந்து கேட்டனர்.

விருத்தக் கலித்துறை

இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்ற நெஞ்சிற்
புல்லாள னாக மறந்தோற்பினெ னப்பு கைந்து
வில்வா ளழுவம் பிளந்திட்டுவெ குண்டு நோக்கிக்
கொல்யானை யுந்திக் கடைமேலுமொர் கோறொ டுத்தான். - 218

மண்மகள் இலம்பகம், சீவக சிந்தாமணி

போரில் இன்று எதிரியை நான் வெல்லேனாயின் மனைவிக்குப் பயந்து விருந்தாளியைப் பேணாது கைவிட்ட பேடி போல் இழிந்து படுவேனாக’ என அவன் மொழிந்திருக்கிறான். பல நூறாண்டுகளுக்கு முன்னதாகவே நடந்த நிகழ்வு சொல்லப்பட்டுள்ளது.

விருந்தினரை உபசரித்தருளுவதை எவ்வளவு பெரிய தருமமாக அக்காலத்தவர் கருதி வந்துள்ளனர் என்பதை இதனால் அறிந்து கொள்கிறோம்.

பண்பு நிறைந்த பெருந்தன்மைக்குச் சிறந்த அடையாளமாக விருந்து பேணுதல் அமைந்திருத்தலால் அது முதலில் வந்தது.

யாவர்க்கும் ஆதரவு புரிந்து எவ்வழியும் உபகாரங்கள் சுரந்துவரின் அம் மனிதவாழ்வு புனிதமான உயர் பெருந்தகைமையாய் ஒளி சிறந்து விழுமிய மகிமைகளை அடைந்து கொள்கிறது என்கிறார் கவிராஜ பண்டிதர்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-19, 3:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

சிறந்த கட்டுரைகள்

மேலே