வான்மையின் மிக்கார் வழக்கு – அறநெறிச்சாரம் 3

நேரிசை வெண்பா

உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவ(து)
உரைத்தனா லாய பயனும் - புரைப்பின்றி
நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்
வான்மையின் மிக்கார் வழக்கு. 3

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

அறங் கூறுபவனையும், அதனைக் கேட்பவனையும், உரைக்கப்படும் அறத்தினையும், உரைப்பதனால் உண்டாகும் பயனையும் குற்றமிலா வகை ஆராய்ந்து, அந்நான்கனுள்ளும் பிழைபடுவனவற்றை நீக்கி அவையினில் நிலைபெறச் செய்தல் ஒழுக்கத்தால் உயர்ந்தோர் கடனாகும்.

குறிப்பு:

உரைப்பவன், கேட்பான், உரைக்கப்படுவது: வினையாலணையும் பெயர்கள்.

புரைப்பு - குற்றம். வாய்மை - உயர்வு: ஈண்டு ஒழுக்கம். இதன்கண் அறவுரைக்கு இன்றியமையா நான்கும் அவற்றின் போலியும் தொகுத்துக் கூறப்பட்டன. அவற்றை மேலே விரிப்பர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Nov-19, 12:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

சிறந்த கட்டுரைகள்

மேலே