பிறவியை நீக்கும் திருவுடையார் – அறநெறிச்சாரம் 2

நேரிசை வெண்பா

மறவுரையும் காமத் துரையும் மயங்கிய
பிறவுரையும் மல்கிய ஞாலத்(து) - அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடை யார். 2 அறநெறிச்சாரம்

பொருளுரை:

பாவத்தினை வளர்க்கும் நூல்களும், ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிறவற்றினை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த உலகில் அறத்தினை வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற் பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கேற்ற வீட்டுலகினையுடையவராவர்.

குறிப்பு:

பிறவுரை - சோம்பல் முதலியவற்றை வளர்ப்பன.

உரை-ஈண்டு நூலை உணர்த்தலின் ஆகு பெயர்.

திரு-ஈண்டு நற்பேற்றினையும், வீட்டினையும் உணர்த்திற்று. இதனால், அறவுரை கேட்டலின் இன்றியமையாமை கூறப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Nov-19, 11:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே