இதமே புரியும் இயல்புடையார் ஈசன் பதமே உறுவர் படிந்து - பண்பு, தருமதீபிகை 538
நேரிசை வெண்பா
அல்லல் கருதி அவமதிப்பே செய்துவரும்
பொல்லா ரிடமும் பொறுமையாய் - நல்ல
இதமே புரியும் இயல்புடையார் ஈசன்
பதமே உறுவர் படிந்து. 538
- பண்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
அவமதித்து அல்லலைச் செய்து வருகிற பொல்லாரிடத்தும் பொறுமையாய் நல்ல இதங்களைச் செய்து வரும் பண்புடையாளர் இறைவன் திருவருளை மருவி இன்பம் அடைகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
பொறுத்தருளுகிற தன்மை பெருத்த நன்மைகளை விளைத்து வருகிறது. அந்த உண்மையை இது உணர்த்துகிறது.
ஒருவனுடைய பெருந்தகைமையைத் தெளிவாக அளந்து அறிதற்குப் பொறுமை அரிய ஒரு சோதனைக் கருவியாய் அமைந்திருக்கிறது.
சீவர்கள் பலவகையான வினைகளின் விளைவுகளால் இங்கே வந்து பிறந்திருக்கின்றனர். பழகி வந்துள்ள பழைய வாசனைகளின்படியே அவர்களுடைய எண்ணங்களும், மொழிகளும், செயல்களும் இயங்கி வருகின்றன. யாவரும் வாசனை வயத்தராயலைந்து வருதலால் வெவ்வேறான மாறுபாடுகள் மனிதரிடம் மருவி நிற்கின்றன.
நல்ல சுபாவங்களையுடையவர் எவ்வழியும் நல்லவராய் நலம் பல புரிகின்றனர். தீய இயல்பினர் தீவினையாளராய்ப் பாவ கருமங்களையே விழைந்து செய்கின்றனர். அறிஞர், மூடர், இனியவர், கொடியவர் என இன்னவாறு பல்வேறு நிலைகளில் பரவியிருந்தாலும் நல்லவர், தீயவர் என இரு பிரிவுகளுள் எல்லா மனிதர்களும் அடங்கி நிற்கின்றனர்.
நல்லவர் அமுதம் போல் இனியராய் உள்ளனர்.
தீயவர் நஞ்சு போல் கொடியராய் இருக்கின்றனர்.
பொல்லாத இயல்பினர் யாண்டும் அல்லல்களையே விளைத்து வருவராதலால் அவரால் நாட்டுக்கு எல்லையில்லாத இடர்கள் நேர்கின்றன. கெட்டவர்கள் கேடு செய்தாலும் நல்லவர்கள் அவரிடமும் நலமே நாடியருளுகின்றனர்.
முத்தநாதன் என்னும் தீயவன் வஞ்சமாய் வந்து தன்னை வாளால் வெட்டிய போதும் மெய்ப்பொருள் நாயனார் அவனிடம் அன்பு புரிந்து அவனை ஆதரித்து அருளினார். அதனால் அவர் பேரின்ப நிலையையே மருவினார். அவரது மனப்பண்பையும், பெருந்தகவையும் உலகம் இன்றும் உவந்து போற்றி வருகிறது
வழியிடையே கண்ட தூர்த்தர் இருவர் கோவலனையும், கண்ணகியையும் கேலியாய்ப் பரிகாசம் செய்தனர். உடனிருந்த கவுந்தி என்னும் தவமுதுமகள் அப்புல்லரைப் பொல்லாத நரிகளாகச் சபித்தார்; அவ்வாறே அவர் ஒல்லையில் உருமாறி ஊளையிட்டு நின்றனர். அதனைக் கண்ட கண்ணகியும் கோவலனும் உள்ளமிரங்கி அவர்க்கு உதவி புரிய வேண்டினர்.
குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு
நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி
நெறியின் நீங்கியோர் நீரல கூறினும்
அறியா மையென் றறியல் வேண்டும்
செய்தவத் தீர்நுந் திருமுன் பிழைத்தோர்க்(கு)
உய்திக் காலம் உரையீரோ. - நாடுகாண் காதை, புகார்க் காண்டம், சிலப்பதிகாரம்
என அவர் மறுகி வேண்டியிருத்தலால் அவருடைய பரிவும் பண்பும் அறிய வந்தன. தம்மை இகழ்ந்தவரிடத்தும் இரங்கி இதம் புரிவது உயர்ந்த பண்பாடாய்ச் சிறந்து நின்றது.
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை. 998 பண்புடைமை
கொடுமையாய் இடர் செய்கின்ற பகைவரிடத்தும் இனிமையாய் இதம் செய்வதே உயர்ந்த பண்பாம் என இது உணர்த்தியுள்ளது. இனிய நீர்மைகள் தோய்ந்து எவ்வழியும் புனிதம் எய்தியிருத்தலால் பண்பாளர் யாண்டும் அன்பு சுரந்து யாரிடமும் இதமே புரிகின்றனர்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
அன்(பு)ஒப் புரவு கண்ணோட்டம்
..அழியா வாய்மை காணாதி
இன்பம் பெருக்கு நற்குணங்கள்
..எல்லாம் நிறைந்த சான்றோர்கள்
துன்புற் றவர்க்கும் இனியனவே
..சூழ்வர் துணையின் வினைமுடிப்பர்
வன்பில் தளரார் நட்டார்க்கு
..மடங்கித் தோற்றல் காணாரே. – விநாயக புராணம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
இன்புவந்(து) உற்ற போதும்
..எதிர்மறை உற்ற.போதும்
முன்புடல் உறுமூழ் என்றே
..விருப்புறார்; முனிவும் செய்யார்;
அன்புசிற் றுயிர கத்தும்
..அமைந்துவாழ் கின்ற நீரார்
வன்புமும் மலமும் நீங்கத்
..திருவருள் முழுகு மாண்பார். - மாயூரப் புராணம்
உயர்ந்த பண்புடைய சிறந்த பெரியோர்களின் செயல் நிலைகளை இவை தெளிவாக விளக்கியிருக்கின்றன. இனிய நீர்மைகள் சுரந்த பொழுது அரிய சீர்மைகள் நிறைந்து வருகின்றன.
துன்பத் தொடர்புகள் நீங்கி இன்ப நலங்களையே இயற்றி வருதலால் உள்ளப் பண்பாளர் பேரின்ப வெள்ளத்தை அடைந்து கொள்கின்றனர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.