பெரியரெனத் தம்மைப் பிறர்மதிக்க எண்ணி அலைவர் - நாகரிகம், தருமதீபிகை 528

நேரிசை வெண்பா

பெரியரெனத் தம்மைப் பிறர்மதிக்க எண்ணி
அரிய அவாவில் அலைவர்; - உரிய
இயலும் செயலும் இழிவாகி யுள்ளே
மயலாய் உழல்வர் மருண்டு. 528

- நாகரிகம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தம்மைப் பெரியவராய்க் கருதிப் பிறர் எல்லாரும் மதித்துப் புகழ வேண்டும் என்று பலர் வெளியே பேராவலோடு அலைகின்றனர்; உள்ளே இயலும் செயலும் இழிந்து மயலாய் மருண்டு நிற்கின்றனர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதனைப் பிணித்திருக்கும் ஆசைகள் பல. எந்நிலையிலும் தன்னை உயர்ந்தவனாக உலகம் மதித்துப் புகழ வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் எவ்வழியும் தவித்து அலைகின்றான். அந்த ஆவலில் அவன் படாதபாடு படுகிறான். தன் பெயரை அச்சு எழுத்தில் பார்ப்பதில் அவன் எவ்வளவு இச்சை யுடையனாய் நச்சி நிற்கிறான்! தன்னைப்பற்றி எவரேனும் புகழ்ந்து பேச நேர்ந்தால் அதனை நெடு நேரம் விழைந்து நயந்து நுழைந்து கேட்கிறான். மேலும் மேலும் பேசும்படி பலவகையிலும் நயமாகக் தூண்டி முயன்று வேண்டி விரிகிறான்.

Talk to a man about himself and he will listen for hours. - Disraeli

’ஒரு மனிதனைக் குறித்துச் சிறப்பாகப் பேசு, நெடுநேரம் அதனை அவன் விருப்பமாய்க் கேட்பான்' என டிசரேலி என்னும் ஆங்கில இராச தந்திரி இவ்வாறு கூறியிருக்கிறார்.

தான் என்பதில் மனிதனுக்கு ஒரு பெரிய ஆனந்தம் பெருகியிருக்கிறது. தன் உள்ளத்தில் நல்ல தகுதி இல்லாத பொழுது தன்னை வெளியே புகழ்ந்து சொல்லுவன எல்லாம் பழிமொழிகளே என்பதை அவன் தெளிவாக உணர்ந்து கொள்ளுவதில்லை. ஆசை மயக்கில் அறிவுநிலை குலைந்து பெரிய வெறியனாகி விடுகிறான்

’அரிய அவாவில் அலைவர்’ என்றது இழிவான நிலைகளில் இருந்து கொண்டே உயர்வான பெருமைகளை அவாவி அலைகிற அவரது சிறுமை தெரிய வந்தது. வஞ்சக் கபடங்களை நெஞ்சக் குகைக்குள் ஒளித்து வைத்து வெளியே நல்லவர்கள் போல் நடித்துத் தம் நிலைமைக்கு மிஞ்சிய மதிப்புகளை உலகில் அடைந்து கொள்ளலாம் என்று விழைந்து திரிவது இழிந்த மடமையாம்.

தன் உள்ளத்தின் தகுதியளவே உலகத்தில் ஒருவனுக்கு மதிப்பு உண்டாகிறது. பான்மைக்கு மாறான மேன்மையை எவனும் அடைந்து கொள்ள முடியாது. கள்ளம் புரியக் கருதுகின்றவன் எவ்வழியும் எள்ளலடைந்தே இழிகின்றான்.

பிறரை ஏமாற்ற எண்ணுகின்றவன் தானே ஏமாந்து போதலால் தன் அழிவுக்கு அவன் வழி கோலினவன் ஆகின்றான்.

‘மயலாய் உழல்வர் மருண்டு’ என்றது இயலும் செயலும் இழிந்து நின்றும் உயர்ந்த மேன்மைகளை அடைய விழைவது மதி கேடான மடமையாம் என்பதை விழிகாண விளக்கிக் காட்டியது.

நேரிசை வெண்பா

உள்ளத்து லோபம் உரையில் வெறும்பசப்பு
பள்ளத்தே பாயும் பசும்புனல்போல் - கள்ளத்தே
ஓங்கு பொருள்மேல் ஒழியாத பேராசை
ஈங்கு மருளர் இயல்பு.

என்றபடி இழிவழிகளில் ஓங்கியிருந்தும் உயர் மகிமைகளுக்கு ஏங்கி அலைவது மருளான மயலேயாம். அருளான நாகரிகத்தின் பொருள்நிலை தெரிந்து தெருளுற வேண்டும்.

பகட்டான வெளி மினுக்கில் எவனும் பெரிய மனிதனாக முடியாது. உள்ளத்தைப் பண்படுத்தி நல்ல நீர்மைகளை வளர்த்து வந்தால் அங்கே எல்லாப் பெருமைகளும் தாமாகவே வந்து சேரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Nov-19, 10:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே