பள்ளி மாணவர்கள் எளிதாகப் பயின்று இன்புற புணர்ச்சி இலக்கணம் பாகம் 2

பள்ளி மாணவர்கள் எளிதாகப் பயின்று இன்புற
புணர்ச்சி இலக்கணம் எளிய வடிவில்

பாகம் 2
வழங்குபவர்

திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி
தமிழாசிரியை
கோயம்புத்தூர் 22

அன்பு மாணவர்களே! கடந்த பதிப்பில் வெளியிட்டிருந்த புணர்ச்சி விதிகள் உங்களுக்குப் புரிந்தும், பிடித்தும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதோ இந்த இரண்டாம் பாகத்தினை உங்களுக்காக வெளியிடுகின்றேன்.
பயில்வோமா! வாருங்கள்: ஐயம் இருப்பின் தெளிவு பெற இதோ என் கைப்பேசி எண்கள் உங்களுக்காக. 9843297197 / 9043069396
தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பினையும் நல்லாதரவையும் தர அன்புடன் பணிகின்றேன். இந்த நூல்கள் அனைவற்றையும் என் அன்பு பெற்றோர்களின் பொற்பாத கமலங்களுக்குக் காணிக்கையாக்குகின்றேன்.

தொடர்வோம்…..
1. குற்றியலிகரப் புணர்ச்சி:
கடந்த வகுப்பில் குற்றியலுகரப் புணர்ச்சியைப் பற்றி விளக்கியிருந்தேன். இனி அதன் தொடர்ச்சியாக குற்றியலிகரப் புணர்சியினைப் பற்றி காண்போம். முன்னதாக…
நிலைமொழி வருமொழி என்பதில் உங்கள் ஐயம் தெளிவாகியிருக்கும் என நம்புகின்றேன் நிலைமொழி (நிற்கின்ற மொழி) அதாவது கூட்டல் குறிக்கு(+) முன்பாக உள்ள மொழி) வருமொழி நிலைமொழியினைத் தொடர்ந்து வரும் மொழி (அதாவது கூட்டல் குறிக்;குப் பின்பாக வரும் மொழி)
நூற்பா 1
“யவ்வரின் இய்யாம்”
நிலைமொழி ஈற்றில் குற்றியலுகர எழுத்து வந்திருந்து வருமொழி முதலில் யகரத்துடன் தொடங்கும் சொல் வந்தால் நிலைமொழி ஈற்று உகரம் யகரமாக மாறும்.
எடுத்துக்காட்டுகள் சில:
(அ) நாடு + யாது = நாடியாது

இதில் ‘டு’ என்பது குற்றியலுக எழுத்து ஆகும். வருமொழி முதலில் ‘யா’ என்ற எழுத்து
இவ்வாறு வரும் பொழுது நிலை மொழி ஈற்றில் வரும் ‘உ’கரம்(உ என்ற எழுத்து) இகரமாகத்(‘இ’ என்ற எழுத்தாகத்) திரியும். (ட் + உ = டு) என்பது (ட் + இ = டி) என மாறும்.
அதுவே நாடியாது என்று மாறியது.
எனவே, நாடு + யாது = நாடியாது என்றாயிற்று.
பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுகள்.
1. கொக்கியாது
2. வரகியாது
3. பாக்கியாது
4. நாகியாது
---------------------------------
2. நூற்பா -2
“முற்றும் அற்று ஓரோ வழி”
விளக்கம்:
முற்றியலுகரமும் சில பொழுது குற்றியலுகரம் போல் செயல்படும் என்பது இந்த நூற்பாவின் விளக்கம் ஆகும்.
இனி முற்றியலுகரம் என்றால் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு பின்னர் அதற்கான விளக்கங்களையும் சான்றுகளையும் காணலாம்.
மெய் எழுத்துகள் 18டினுள் க் ச் ட் த் ப் ற் - என்ற ஆறு எழுத்துகளும் வல்லினம் என்பதைப் பற்றிக் கண்டோமல்லவா!
1. அது அல்லாத பிற மெல்லின மெய்கள் ங் ஞ் ண் ந் ம் ன் ஆறு
எழுத்துகளும்,
ய் ர் ல் வ் ள் ழ் - என்ற இடையின மெய் எழுத்துகள் ஆறும் ஆக 12 மெய் எழுத்துகளும் முற்றியலுகரங்கள் எனப்படும்.
2. தனிக்குறிலை அடுத்து வரும் உகரம் முற்றியலுகரம் எனப்படும்.
(எ-கா) அழு, மனு, கணு, பரு, உழு, பலு.
3. சொல்லின் ஈற்றில் க்,ச்,ட்,த்,ப்,ற் - தவிர்த்து
பிற மெய்யெழுத்துகளின்மேல் ஏறிவரும் உகரம் முற்றியலுகரம் எனப்படும்.

(எ-கா) மாவு, வாழு
குற்றியலுகரம் X முற்றியலுகம்.
இனி அவை சொற்களில் எவ்வாறு புணர்கின்றது என்ற விளக்கங்களைக் காணலாம்.
எடுத்துக்காட்டு:
கதவழகு இச்சொல்லைப் பிரித்தால் கதவு + அழகு எனப்பிரியும்.
இதில் உள்ள வு என்ற எழுத்தைப் பிரித்தால் (வ் + உ) எனப்பிரியும்
இவ்வாறு வரும் பொழுது நிலைமொழியின் ஈற்று எழுத்து ‘உ’ என்பதாகும். வருமொழியின் முதல் எழுத்து ‘அ’ என்பதாகும் எனவே நாம் ஏற்கனவே கண்ட பயிற்சிகளில் இரண்டு உயிர் எழுத்துகள் ஒன்று சேராது என்பதனைக் கண்டிருக்கிறோம்.
அந்த அடிப்படையில் நிலைமொழி ஈற்று உயில் முற்றியலுகரம் என்பதால் இதற்கு
“முற்றும் அற்று ஓரோ வழி” என்ற நூற்பாவைப் பயன்படுத்தி, இங்குள்ள ‘ உ’ என்ற எழுத்தை நீக்கலாம்.
கதவு + அழகு
(வ் + உ)
‘உ’ என்ற எழுத்து சென்ற நிலையில் கதவ் + அழகு
இதற்கு நாம் ஏற்கனவே பயின்ற நூற்பா “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவரு இயல்பே” என்பதைப் பயன்படுத்தி (வ் + அ = வ) என மாற்றினால் இறுதியாக கதவழகு என்று புணரும்(சேரும்).
பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுகள்:
சாவு + இல்லை = சாவில்லை
கதவு + எங்கே = கதவெங்கே
உறவு + இல்லை = உறவில்லை
----------------------------
(பண்புப் பெயர் புணர்ச்சி)

நூற்பா 3
“ஈறு போதல் இடை உகர இய்யாதல்
ஆதி நீடல் அடி அகர ஐ ஆதல்
தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
இனமிகல் இனையவும் பண்பிற் கியல்பே”
முதற்கண் பண்புப் பெயர்கள் யாவை என்பதனைத் தெரிந்துகொள்ளலாம்.

பண்புப் பெயர்களாவன:
1. வண்ணம் குறித்த பெயர்கள்:
கருப்பு, சிவப்பு, மஞ்சள், நீலம்

2. வடிவம் குறித்த பெயர்கள்:
சதுரம், வட்டம், செவ்வகம்

3.குணம் குறித்த பெயர்கள்:
நல்லன், தீயன், வஞ்சகன், அன்பு, அழகு

4. அளவு குறித்த பெயர்கள்:
இரண்டு, முழம், சாண்

5. சுவை குறித்த பெயர்கள்:
இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு

இனி நூற்பா விளக்கத்தைக் காணலாம்.

விளக்கம்:
1. “ஈறுபோதல்” - விளக்கம்:
செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை, வெண்மை, கருமை, பொன்மை, பசுமை, பெருமை, அணிமை, நன்மை, தண்மை, பழமை, வன்மை, கீழ்மை, நொய்மை, இன்மை, பருமை இவை போன்ற சொற்களில் உள்ள ஈற்றெழுத்து (மை)கெடுதலை (மறைதலை) ஈறுபோதல் என்ற அடி விளக்குகின்றது.

எடுத்துக்காட்டுகள்:
வெண்மை + பட்டு = வெண்பட்டு
வெண்மை + குடை = வெண்குடை
செம்மை + மலர் = செம்மலர் மேற்கூறிய இந்த எடுத்துக்காட்டுகளில் மை நீங்கிய நிலையில் சொற்கள் எத்தகைய மாற்றங்களை அடைந்துள்ளது என்பதனைக் கண்டோம்.
அடுத்து,

2. “இடை உகர இய்யாதல்”
பெரியன் என்ற சொல்லை பிரித்தால், பெருமை + அன் என்று பிரியும். இதில் பெரு என்பதில் உள்ள ருவைப் பிரித்தால் (ர் + உ = ரு எனப் பிரியும்;) பண்புப் பெயர் புணர்ச்சியில், அந்த உகரம் (உ என்ற எழுத்து) மாற்றம் அடைந்து இகரமாகத் (ர் + இ = ரி என்ற எழுத்தாக) திரியும். (பெரு - பெரி) எனத் திரியும். இவ்வாறு மாற்றம் அடைவதைத் தான் இடை உகரம் இய்யாதல் என்ற வரி உணர்த்துகின்றது.
விளக்கம்:
 பெருமை + அன் = பெரியன்
முதலில் “ஈறுபோதல்” என்ற அடிப்படையில் நிலைமொழி ஈற்று எழுத்தான மை என்ற எழுத்தை நீக்க வேண்டும்.

 பெருமை (மை என்ற எழுத்து நீங்கியநிலையில்)
பெரு (என்று இருக்கும்).
(ர் +உ = ரு)
 பின்னர் அதில் உள்ள ரு என்ற எழுத்தை (ர் + உ = ரு) ருவை “இடை உகரம் இய்யாதல்” என்ற விதியைப் பயன்படுத்தி, (ர் + இ = ரி) ரியாக மாற்ற வேண்டும்.
அவ்வாறு மாற்றம் அடைந்த நிலையில் பெரி +அன் என்று இருக்கும்.
 பின்னர் நாம் ஏற்கனவே பயின்ற “இ, ஈ, ஐ வழி யவ்வும்” என்ற நூற்பாவைப் பயன்படுத்தி பெரி + ய் + அன் என்று எழுத வேண்டும்.
 அடுத்து, “உடல் மேல் உயிர் வந்து ஒன்று வந்து இயல்பே” என்ற நூற்பாவைப் பயன்படுத்தி ய் + அ = ய எனச் சேர்த்தால் இறுதியாக
பெரியன் என்ற சொல் கிடைக்கும்.
என்ன மாணவர்களே! பெரியன் என்;பது ஒரு சிறிய சொல் தான். ஆனால், அதற்குள் எத்தனை இலக்கண விதிகள் மறைந்துள்ளது என்பதைக் காணுற்றீர்களா?
இவ்வாறாயின், நம் இலக்கண நூலார் கல்வியில் எத்தகைய புலமை மிக்கவர்களாக இருந்திருப்பார்கள் என்பது தெளிவாகின்றதன்றோ!.
தேர்வில் எழுதும் முறை:
 பெரியன் = பெருமை + அன்
 “ஈறுபோதல்” பெருமை + அன்
 பெரு + அன்
 பெரு
(ர் +உ = ரு)
 “இடை உகரம் இய்யாதல்” (ர் + இ = ரி)
 பெரி + அன்
 “இ, ஈ, ஐ வழி யவ்வும்” பெரி + ய் + அன்
 “உடல் மேல் உயிர் வந்து ஒன்று வந்து இயல்பே” ய் + அ = ய
 பெரியன் என்றானது.
பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுகள்:

பெரியன் = பெருமை + அன்
சிறியன் = சிறுமை + அன்
கரியன் = கருமை + அன்
------------------------------
3. “ஆதி நீடல்”
விளக்கம்:
‘ஆதி’ என்றால், ‘முதல்’ என்று பொருள். அதாவது நிலைமொழி ஈற்றில் உள்ள முதல் எழுத்தான குறில் எழுத்து நீண்டு நெடில் எழுத்தாக மாற்றம் அடைவதையே “ஆதி நீடல்” என்ற தொடர் விளக்குகின்றது.
எடுத்துக்காட்டு:
மூதூர் = முதுமை + ஊர்
இனி இது புணரும் முறையைக் காண்போம்.
முதலில் “ஈறுபோதல்” என்ற விதிப்படி நிலைமொழி முதுமை என்ற சொல்லில் உள்ள மை என்ற ஈற்றெழுத்தை நீக்கவேண்டும்.
முதுமை ஊர்
நீக்கிய நிலையில்
முது + ஊர் என்று இருக்கும்.
அடுத்து “ஆதி நீடல்” என்ற விதிப்படி நிலைமொழி முதல் எழுத்தான மு என்ற குறில் எழுத்தை மூ என்று நெடிலாக்குதல் வேண்டும்.
அவ்வாறு மாற்றிய நிலையில்
மூது + ஊர் என்று இருக்கும்.
பின்னர் “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதி;ப்படி நிலைமொழி ஈற்றில் உள்ள
முது ஊர்
(த் + உ) என்பதில் உள்ள உகரம் நீங்கும்
அவ்வாறு நீங்கிய நிலையில்,
மூத் + ஊர் என்று இருக்கும்.
இறுதியாக “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதியைப் பயன்படுத்தி
(த் + ஊ = தூ) என்று மாற்றவேண்டும்.
இதுவே மூதூர் என்றாயிற்று.

தேர்வில் எழுதும் முறை:
 “ஈறுபோதல்” முதுமை + ஊர்
முது + ஊர்
 “ஆதி நீடல்” மு மூ மூது + ஊர் ;
 “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்”
மூது + ஊர்
(த் + உ)
மூத் + ஊர்

 “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”
(த் + ஊ = தூ)
இதுவே மூதூர் என்றாயிற்று.

பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுகள்:
1. பாசி = பசுமை + இ
2. பேரூர் = பெருமை + ஊர்
3. காரிருள் = கருமை + இருள்

அடுத்து நாம் காண இருப்பது,
“அடி அகரம் ஐ ஆதல்”
விளக்கம்:
பசுமை + தமிழ் = பைந்தமிழ்
 இதில் நிலைமொழியின் முதல் எழுத்தான ப என்ற எழுத்து பை என்ற எழுத்தாக மாறி உள்ளமையை நோக்குக.
 அடி அகரம் என்றால் ப் + அ = ப அதாவது ‘ப’ என்பதில் உள்ள ‘அ’ என்ற எழுத்து ப் + ஐ = பை என ஐ என்ற எழுத்தாக திரிதலைத் தான் அடி அகரம் ஐ ஆதல் என்ற தொடர் விளக்குகின்றது.
எழுதும் முறை:
பைந்தமிழ் = பசுமை + தமிழ்
 முதலில் “ஈறு போதல்” என்ற விதிப்படி மையை நீக்கியவுடன்
பசு + தமிழ் என்று இருக்கும்.
 அதன் பின் “அடி அகரம் ஐ ஆதல்” என்ற விதிப்படி ப என்ற எழுத்தில் உள்ள அ என்ற எழுத்தை ஐ என்ற எழுத்தாக மாற்றியதன் பிறகு
பைசு + தமிழ் என்று இருக்கும்.
 இங்கு ஒன்றை நோக்குங்கள் நிலைமொழி ஈற்றெழுத்து “சு” என்பதாகும். ஆனால் வருமொழி முதல் எழுத்து “த” என்ற எழுத்தாகும். நம்முடைய இலக்கண விதிப்படி இங்குள்ள சுவைப் பிரித்தால் (ச் + உ = சு) என மாறும் ஆனால் வருமொழி முதலிலும் மெய்யெழுத்தாகிய த அதாவது (த் + அ த) என்ற எழுத்து இருப்பதால், இவை இரண்டும் இணைவதற்கான வாய்ப்பில்லை என்பதனை அறிந்த இலக்கண நூலார் இங்கு “இனையவும்” என்ற விதியைப் பயன்படுத்துகின்றார்.
 “இனையவும்” என்றால், தேவையற்ற எழுத்துக்களை நீக்கிவிடுதல் ஆகும். அந்த விதிப்படி நிலைமொழி சு என்ற எழுத்தை முற்றிலுமாக நாம் நீக்கிவிடலாம். அவ்வாறு நீக்கிய நிலையில்
பை + தமிழ் என்று இருக்கும்.
 இறுதியாக வருமொழி த என்ற எழுத்துக்கு இன எழுத்தான ந் என்ற மெய் எழுத்தைச் சேர்த்து
பைந்தமிழ் என்று உருவாக்கியுள்ளனர்.
பார்தத்தீர்களா! நம் தமிழ் அன்னை மொழியில் பயின்றுள்ள ரகசியங்களை!
இந்த பைந்தமிழ் என்ற ஒரே சொல்லில் நாம் “ஈறுபோதல்”, “அடி அகரம் ஐ ஆதல்”, “இனமிகல்”, “இனையவும்” என்ற பண்புப் பெயர் புணர்ச்சியின் நான்கு விதிகளையும் தெரிந்து கொண்டோமல்லவா?
எத்தனை சுவையானது இலக்கணம்! என்பதனை இப்பொழுதாவது புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று என்னால் உணர முடிகின்றது.
தேர்வில் எழுதும் முறை:
பைந்தமிழ் = பசுமை + தமிழ்
“ஈறுபோதல்”
பசு + தமிழ்
“அடி அகரம் ஐ ஆதல்”
பைசு + தமிழ்
“இனையவும்”
பைசு + தமிழ்
பை தமிழ்
“இனம் மிகல்”
பைந் தமிழ்
பைந்தமிழ் என்று ஆனது. சுலபமாக உள்ளதா?
இனி “இன எழுத்துகள்” எவை என்பதனைக் காணலாம்.
 உயிர் எழுத்துகளுள் குறில் எழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் அதன் நெடில் எழுத்துக்களே இன எழுத்துகள் ஆகும்.
 அதாவது அ,ஆ இ,ஈ உ,ஊ எ,ஏ ஒ,ஓ என்று அமையும்.
 ஐ என்ற எழுத்திற்கு இ என்ற எழுத்தும் ஒள என்ற எழுத்திற்கு உ என்ற எழுத்தும் இனஎழுத்துகளாகும். ஐ,இ ஒள,உ
இனி மெய் எழுத்துகளுள் வல்லின மெய்களுக்கு மெல்லின மெய் எழுத்துகள் இன எழுத்துகளாகும்.
க,ங ச,ஞ ட,ண த,ந ப,ம ற,ன என்பவை இன எழுத்தகளாக அமையும்.
இந்த விளக்கத்தினை நாம் எதனால் இங்கு பார்த்தோம் என்றால் “இனம் மிகல்” என்ற ஒரு செய்தி இங்கு சுட்டப்பட்டுள்ளதை விளக்குவதற்காக.
பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுகள்:
1. பைங்கொடி
2. பைந்தார்
அடுத்ததாக நாம் காண இருப்பது
“தன் ஒற்று இரட்டல்” என்பது.
• இந்த விதியை நாம் ஏற்கனவே “தனிக்குறில் முன் ஒற்று உயிர் வர இரட்டும்” என்ற நூற்பாவில் விளக்கமாகக் கண்டுள்ளோம்.
• பண்புத் தொகையில் அவை எவ்வாறு அமைகின்றது என்பதை இனி விளக்கமாகக் காணலாம்.
எடுத்துக்காட்டு:
சிற்றூர் = சிறுமை + ஊர்
 முதல் விதி “ஈறு போதல்” என்பதை நீங்கள் உடனடியாகக் கூறுவதை என்னால் கேட்க முடிகின்றது. ஆம் அதே தான். “ஈறுபோதல்” விதிப்படி
சிறுமை + ஊர்
சிறு + ஊர்
அடுத்து
“முற்றும் அற்று ஓரோ வழி” என்ற விதிப்படி, (ஏனெனில் தனிக்குறிலை அடுத்து வரும் று என்ற எழுத்து முற்றியலுகரமாகும் என்பதனை முன்னரே கண்டோம்.)

சிறு ஊர்
(ற்+உ)
சிற் + ஊர்
 இனி அடுத்து “தன்ஒன்று இரட்டல்” அதாவது தனிக்குறிலை அடுத்து ஒரு மெய் எழுத்தும் அதனை அடுத்து ஒரு உயிர் எழுத்தும் வந்தால் வந்த மெய் எழுத்து இரண்டு முறை எழுதப்படும்
என்பதற்கிணங்க,
சிற் + ற் + ஊர் என்றாயிற்று.
 பின்னர் “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி இரண்டாவதாக உள்ள ற் என்ற மெய்யுடன் வருமொழி முதல் எழுத்தாகிய ஊ சேர்ந்து றூ என்றானது.
சிற் + ற் + ஊர் (ற்+ஊ= றூ)
அதுவே இறுதியாக சிற்றூர் என்று புணர்ந்தது(சேர்ந்தது).
தேர்வில் எழுதும் முறை:
சிற்றூர் = சிறுமை +ஊர்
“ஈறு போதல்”
சிறுமை + ஊர்
சிறு ஊர்
“முற்றும் அற்று ஓரோ வழி”
சிறு ஊர்
(ற்+உ)
சிற் + ஊர்
“தன்னொற்றிரட்டல்”
சிற் + ற்+ ஊர் (ற்+ஊ= றூ)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே”
சிற்றூர். என மாற்றம் அடைந்தது.
பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுகள்:
1. வெற்றிலை
2. வெந்நீர்
3. வெவ்வேல்

அடுத்து நாம் காண இருப்பது
“முன்னின்ற மெய் திரிதல்”
விளக்கம்
 நிலைமொழியின் ஈற்றில் உள்ள மெய் எழுத்து வருமொழி முதல் மெய் எழுத்துக்குக்கு இனமான எழுத்தாக மாற்றம் அடைதல் என்பதாகும்.
எடுத்துக்காட்டு:
செங்கோல் = செம்மை + கோல்
• முதல் விதி “ஈறுபோதல்” என்ற அடிப்படையில் மையை நீக்குதல்
செம்மை + கோல்
செம் + கோல் என்று இருக்கும்
• அடுத்து “முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி,
செம் + கோல் என்பதில் உள்ள ம் என்ற மெய் எழுத்து வருமொழி (க் + ஓ கோ) அதாவது க் என்ற மெய் எழுத்திற்கு இனமான ங் என்ற மெய் எழுத்தாகத் திரிந்தது(மாறியது)
தேர்வில் எழுதும் முறை:
செங்கோல் = செம்மை + கோல்
“ஈறுபோதல்”
செம்மை + கோல்
செம் + கோல்
“முன்னின்ற மெய் திரிதல்”
செம் கோல்
செங் கோல்
செங்கோல் என்று மாறியது.
பண்புப் பெயர் புணர்ச்சியிலேயே இதுதான் மிகமிகச் சுலபமாக உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் இல்லையா? ஆம் நீங்கள் நினைப்பதும் எனக்குத் தெரிகின்றது. வாழ்த்துக்கள். இத்தனை சுலபமாக என்னோடு விரைவாக நீங்களும் பயின்றுவருவதை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
பயிற்சி பெற சில சான்றுகள்:
செந்தமிழ் = செம்மை + தமிழ்
இதோ நீங்கள் பண்புப் பெயர் புணர்ச்சியை எளிதில் அடையாளம் காண சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
1. “ஈறு போதல்” - வெண்மை + குடை = வெண்குடை
2. “இடை உகரம் இய்யாதல்” - பெருமை + அன் = பெரியன்
3. “ஆதி நீடல்” - பெருமை + ஊர் = பேரூர்
4. “அடியகரம் ஐ ஆதல்” - பசுமை + பொழில் = பைம்பொழில்
5. “தன்னொற்று இரட்டல்” - சிறுமை + ஊர் = சிற்றூர்
6. “முன்னின்ற மெய் திரிதல்” - வெம்மை + நீர் = வெந்நீர்
7. “இனம் மிகல்” - செம்மை + தமிழ் = செந்தமிழ்

மேலும் சில
எடுத்துக்காட்டுகள்: உங்கள் பயிற்சிக்காக.
1. சிறுமை+பொதி = சிறுபொதி
2. கூர்மை+வாய் = கூர்வாய்
3. அருமை + வினை = அருவினை
4. நன்மை + மணி = நன்மணி
5. சிறுமை+அர் = சிறியர்
6. பெருமை+அர் = பெரியர்
7. பெருமை+ஊர்=பேரூர்
8. முதுமை+ஊர் = மூதூர்
9. பசுமை+கிளி = பைங்கிளி
10 வெறுமை+இலை=வெற்றிலை
11 செம்மை+கடல் = செங்கடல்
12 கருமை+குயில்=கருங்குயில்
இனி பண்புப் பெயர் புணர்ச்சியில் ஐயம் இல்லை என்று அறிகின்றேன். வாழ்த்துக்கள்.
புணர்ச்சி இலக்கணம் தொடரும்

எழுதியவர் : திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி (18-Nov-19, 3:52 pm)
பார்வை : 5164

மேலே