பள்ளி மாணவர்கள் எளிதாகப் பயின்று இன்புற புணர்ச்சி இலக்கணம்

பள்ளி மாணவர்கள் எளிதாகப் பயின்று இன்புற புணர்ச்சி இலக்கணம்
பாகம் -௧
வழங்குபவர்: திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி
தமிழாசிரியை - கோவை -22

புணர்ச்சி இலக்கணம்

அன்பு மாணவர்களே அடுத்து வரும் இப்பயிற்சியில் புணர்ச்சி என்றால் என்ன என்பதைப் பற்றியும் பொதுத் தேர்வில் அடிக்கடி கேட்கப் படக்கூடிய புணர்ச்சி விதிகள் சிலவற்றையும் காண்போமா? என்ன தயாராகி விட்டீர்களா?

புணர்ச்சி வரையறை:

நிலைமொழி (நிற்கின்ற மொழி - ஈறும் (இறுதி எழுத்தும்), வருமொழி(வருகின்ற மொழி) முதல் எழுத்தும் சேர்வது புணர்ச்சி எனப்படும்.
(எ.கா)

தமிழ் + மொழி = தமிழ் மொழி

நிலைமொழி வருமொழி இதில்
(தமிழ் என்பது நிலை மொழி) (மொழி என்பது வருகின்ற மொழி)

சொற்கள் புணரும் முறை
I உயிர் முன் உயிர்
(எடுத்துக் காட்டுகள் சில)
1. பல + அணி
இங்கு உள்ள ல என்ற எழுத்தைப் பிரித்தால் ல்+அ எனப்பிரியும்
இதில் இறுதியாக உள்ள எழுத்து அ என்பதாகும். எனவே இது உயிர் ஈறு எனப்படும்.
அதைப் போல வருமொழி முதலில் உள்ள எழுத்து ‘அ’ ஆகும் எனவே இது உயிர் முன் உயிர் எனப்படும்.
இதனைப் போன்றே பின்வரும் எடுத்துக்காட்டுகளில் பயிற்சி பெறவும்.
2. ஓதி + உணர்ந்தான்
3. உடை + அணிந்தான்
4. வீரர் + ஆகவும்

II மெய் முன் மெய்
(எடுத்துக்காட்டுகள்)
1. தாள் + மலர்

இதில் நிலைமொழி ஈற்றில் உள்ள எழுத்து ள் என்பதாகும். ள் என்பது மெய் எழுத்து ஆகும். அதைப் போன்றே வருமொழி முதலில் வரும் எழுத்து ம என்பதாகும். இந்த ம என்ற எழுத்தைப் பிரி;த்தால் ம்+ அ எனப்படும். இதில் உள்ள ம் என்பதும் மெய் எழுத்தாகும். எனவே இது மெய் முன் மெய் என்படும். இதனைப் போன்றே பிறவற்றிலும் பயிற்சி பெறுக.
2. தமிழ் + மொழி
3. வாள் + வீச்சு
4. வலம் + வந்தான்

III மெய் முன் உயிர்
(எடுத்துக் காட்டுகள்)
1. உடல் + எல்லாம்

இதில் நிலைமொழியின் ஈற்றில் உள்ள எழுத்து ல் என்ற மெய் எழுத்தாகும். வருமொழியல் உள்ள முதல் எழுத்து எ என்ற உயிர் எழுத்தாகும். எனவே இது மெய் முன் உயிர் எனப்படும். இதனைப் போன்றே பிறவற்றிலும் பயிற்சி பெறுக.

2. கூடம் + எங்கும்
3. நீர் + ஓடை
4. காண் + என்று

IV உயிர் முன் மெய்
(எடுத்துக் காட்டுகள்)
1. தலை + கவசம்
இதில் நிலை மொழியில் லை என்ற எழுத்து வந்துள்ளது. இதனை பிரித்தால் ல் + ஐ எனவரும். இதில் இறுதியாக வரும் எழுத்து ஐ என்ற உயிர் எழுத்தாகும். அதனைப் போலவே வரும் மொழியில் முதலில் வரும் எழுத்து வ என்பதாகும். அதனைப் பிரித்தால் வ் + அ எனப் பிரியும். அதில் முதலில் வரும் எழுத்து வ் என்ற மெய் எழுத்தாகும். எனவே இது உயிர் முன் மெய் புணர்ச்சி எனப்படும். இதனைப் போலவே மற்ற எடுத்துக்காட்டுகளிலும் பயிற்சி பெறுக.
2. சிலை + வடித்தான்
3. குதிரை + கொம்பு
4. யானை + தந்தம்
புணர்ச்சியின் வகைகள்

இயல்புப் புணர்ச்சி விகாரப் புணர்ச்சி

1. இயல்புப் புணர்ச்சி விளக்கம்:
நிலைமொழியும் வருமொழியும் சேரும் போது எத்தகைய மாற்றங்களும் எற்படாமல் இயல்பாகப் புணர்வது அல்லது சேர்வது இயல்புப் புணர்ச்சி எனப்படும்.
(எ.டு)
தமிழ்+ மொழி = தமிழ் மொழி
இயல்புப் புணர்ச்சிக்கான சில சான்றுகள்: (எழுதிப் பழக)
1. தொடர் வண்டி
2. பூமியில் கண்டோம்
3. மாநகரம்
4. பாலைவனம்
5. கயல்விழி
5. பயிலவேண்டும்.

2. விகாரப் புணர்ச்சி விளக்கம்:
நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது அதன் இடையில் சில மாற்றங்களைப் பெற்று வருவது விகாரப் புணர்ச்சி என்று அழைக்கப்படும்.


விகாரப் புணர்ச்சியின் வகைகள்:


தோன்றல் விகாரம் திரிதல் விகாரம் கெடுதல் விகாரம்

1. தோன்றல் விகாரம்: விளக்கம்
நிலைமொழியும் வருமொழியும் சேரும் போது, இடையில் புதியதாக ஓர் எழுத்து தோன்றுவது தோன்றல் விகாரம் எனப்படும்:
(எ.டு)
பூ+ சோலை = பூஞ்சோலை
தீ+ சுடர் = தீச்சுடர்
மேற்கூறிய எடுத்துக்காட்டுகளில் ஞ் என்ற எழுத்தும், ச் என்ற எழுத்தும் புதியதாகத் தோன்றி உள்ளதைக் காண்க.
பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுச் சொற்கள்:
1. நுழைவுச்சீட்டு
2. பெயர்ப்பலகை
3.எந்நாட்டவர்க்கும்
4.அறிவுக்வுர்மை
4. பததுப்பாட்டு
5.கைத்தறி
6.தலைக்கவசம்
7. வாழைத்தோட்டம்

2. திரிதல் விகாரம்: விளக்கம்:
நிலைமொழியும் வருமொழியும் சேரும் போது இடையில் உள்ள சில எழுத்துகள் சில மாற்றங்களைப் பெற்று திரிந்து வருவது திரிதல் விகாரம் எனப்படும்.
(எ.டு)
கல்+ குவியல் = கற்குவியல்
முள்+ புதர் = முட்புதர்
பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுச் சொற்கள்:
1. நெற்களஞ்சியம்,
2. சொற்கோபுரம்,
3. விற்புருவம்,
4. தமிழின்பம்,
5. மட்பானை,
6. பற்பசை,
7. நெற்கதிர்.




3. கெடுதல் விகாரம்: விளக்கம்:
நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது இடையில் உள்ள ஓர் எழுத்து மறைந்து விடுவது(கெட்டு விடுவது) கெடுதல் விகாரம் எனப்படும்.
(எ.டு)
மரம்+ வேர் = மரவேர்
பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுச் சொற்கள்
1. மரநிழல்
2. மணநூல்
3 மரநார்
4. வனவிலங்கு
5 கனரகம்
இவையே அன்றி வேறு சில புணர்ச்சிகளும் உள்ளன.
அவை
வேற்றுமை புணர்ச்சி, மற்றும் அல்வழிப் புணர்ச்சி என்பனவாகும்.




வேற்றுமைப் புணர்ச்சி விளக்கம்:
அதாவது புணர்ச்சியின் போது வேற்றுமை உருபுகளாகிய ஐ, ஆல், கு, இன், அது, கண் போன்றவை மறைந்தோ, வெளிப்பட்டோ புணருவது வேற்றுமைப் புணர்ச்சி எனப்படும்.
(எ.டு)
கதை + படித்தான் = கதைப் படித்தான் (இதனைக் கதையைப் படித்தான் என்று விரிவாகப் பொருள் கொள்ளவேண்டும். இங்கு கதையை என்பதில் (கதை+ ஐ = கதையை) ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளமையைக் காணலாம்.
அடுத்து,
படத்தை + பார்த்தான் = படத்தைப் பார்த்தான். (இதில் படத்தை என்பதில் ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக அமைந்திருப்பதைக் காணலாம்.

அல்வழிப்புணர்ச்சி விளக்கம்:
அல்வழிப் புணர்ச்சி என்றால் வேற்றுமை உருபுகள் வராத புணர்ச்சி என்ப்படும். அதாவது வேற்றுமை உருபுகள் மறைந்தோ, வெளிப்படாமலோ வரும் அனைத்து புணர்ச்சிகளும் அல்வழிப்புணர்ச்சி எனப்படும்
அடுத்து,
தேர்விற்குரிய சில புணர்ச்சி விதிகளும்
விளக்கங்களும் சில சான்றுகளும்

நூற்பா எண் 1
“உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”
விளக்கம்:
நிலைமொழியின் ஈற்றில் மெய் எழுத்து இருந்து வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்திருந்தால் அந்த மெய் எழுத்துடன் உயிர் எழுத்து சேர்ந்துவிடும் என்பது பொருளாகும்.
இங்கு மெய் எழுத்திற்கு வழங்கும் வேறு சில பெயர்களை நினைவு கூர்வோம்.
மெய் எழுத்திற்கு புள்ளி, ஒற்று, உடல், போன்ற பெயர்கள் உள்ளன.
(எ.டு)
கடல் + அலை இதில் கடல் என்ற நிலைமொழியில் உள்ள ல் என்ற

மெய்யெழுத்துடன் வருமொழியில் உள்ள அலை என்பதில் உள்ள அ என்ற எழுத்து சேர்ந்து ல் + அ = ல எனப்படும்.


நூற்பா 2
“இ ஈ வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும்
ஏ முன் இவ்விருமையும்
உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும்.” (நன்- 162)

விளக்கம்:
நிலை மொழி ஈற்றிலும்(இறுதியிலும்) வருமொழி முதலிலும் உயிர் எழுத்துக்கள் வந்தால் அவை இரண்டும், இணையாது. எனவே அவற்றினை இணைக்க ஒரு மெய் எழுத்து தேவைப்படும். அம் மெய் எழுத்து உடம்படு மெய் எனப்படும்.
குறிப்பு:
ஐ. “இ ஈ ஐ வழி யவ்வும்” – விளக்கம்
நிலை மொழி ஈற்றில் உயிர் எழுத்துகளுள் இ, ஈ, ஐ என்ற மூன்றனுள் ஏதேனும் ஒன்று அமைந்திருந்து வரு மொழி முதலில் உயிர் எழுத்துக்களுள் ஏதேனும் ஒன்று வந்திருந்தால், அவற்றை இணைக்க ‘ய்’ என்றமெய் எழுத்து உடம்படு மெய்யாக அமையும்.
(எடுத்துக் காட்டு) 1

மணியடித்தான்
1. மணி + அடித்தான்
இதில் உள்ள ணி என்ற எழுத்தைப் பிரித்தால் (ண்+இ) எனப்பிரியும்.
எனவே இறுதி எஐத்து இ ஆகும். வருமொழி முதல் எழுத்து அ ஆகும்
இவற்றை இணைக்க ய் உடம்படு மெய்யாக வந்தது.
மணி+ ய் + அடித்தான் என்று எழுத வேண்டும்.
இப்பொழுது ய் என்ற எழுத்துடன் அ எழுத்து சேர்ந்து ய எனத் திரியும். (ய் +அ= ய)

இதற்கான நூற்பா பின்வருமாறு.

நூற்பா எண் 3
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நன்-204)
விளக்கம்:
உடல்(மெய் எழுத்து) உயிர் (உயிர் எழுத்து)
அதாவது, மெய் எழுத்துடன் உயிர் எழுத்து இணைவது(சேர்வது) இயல்பாகும் என்பது இதன் பொருள்.
எனவே ,
மணி+ ய் +அ டித்தான் என்பது,
மணியடித்தான் என்று மாறியது.


(தேர்வில் எழுதும் முறை)
மணியடித்தான்
மணி + அடித்தான்
(ண் +இ= ணி)
“இ ஈ வழி யவ்வும்”
மணி+ ய் + அடித்தான்
(ய் +அ = ய)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே”
மணி+ய் +அடித்தான் என்பது,
மணியடித்தான் என்று மாறியது.
எடுத்துக்காட்டு 2
கதையெழுதினான்
கதை + எழுதினான்

(த் +ஐ= தை) (நிலைமொழி இறுதி ஐ உயிரெழுத்து.) (வருமொழி எ உயிர் எமுத்து)
எனவே இங்கு ய் உடம்படு மெய்யாயிற்று.
கதை +ய் +எழுதினான் (ய் +எ= யெ)
என இணைந்து கதை எழுதினான் என்றாயிற்று.

(தேர்வில் எழுதும் முறை)
கதையெழுதினான்
கதை + எழுதினான்
(த் +ஐ = தை)
“இ ஈ வழி யவ்வும்”
=கதை +ய் + எழுதினான்
(ய் +எ = யெ)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே”
கதை +ய் + எழுதினான் (ய் +எ = யெ)
என இணைந்து கதையெழுதினான் என்றாயிற்று.

எடுத்துக்காட்டு 3
தீயணைத்தல்
= தீ +அணைத்தல்

(த் +ஈ= தீ )
(நிலை மொழி ஈற்று எழுத்து ஈ உயிர்)
(வருமொழி அ உயிர் எழுத்து)
எனவே அவற்றை இணைக்க ய் உடம்படு மெய்யாயிற்று.
தீ+ ய் +அணைத்தான் (ய் +அ= ய) என இணைந்து தீயணைத்தல் என்றாயிற்று.

“ஏனை உயிர் வழி வவ்வும்” என்ற, தொடருக்கான சில விளக்கங்களைக் காணலாம்.

எடுத்துக் காட்டு 1
மாவிலை
மா + இலை
(ம் +ஆ = மா) நிலை மொழி ஈற்றில் ஆ என்ற உயிர் எழுத்தும் வருமொழி முதலில் இ என்ற உயிர் எழுத்தும் அமைந்துள்ளன.
இதில் உள்ள ஆ என்பது ‘இ,ஈ.ஐ’ நீங்கலான பிற எழுத்துக்கள் ஆகும்.
எனவே இங்கு “ஏனை உயிர்வழி வவ்வும்” என்ற தொடரைப் பயன்படுத்துதல் வேண்டும்.
=மா+வ் +இலை (வ் +இ =வி)
பின்னர் வழக்கம் போல், “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற நூற்பாவைப் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு மா+வ் +இலை என்பது இணைந்து மாவிiலை என்று புணர்ந்தது.

(தேர்வில் எழுதும் முறை)
மாவிலை
மா+இலை

(ம் +ஆ =மா)
“ஏனை உயிர்வழி வவ்வும்”
=மா+வ் +இலை
“உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” (வ் +இ = வி)
இவ்வாறு மா+வ் +இலை என்பது இணைந்து மாவிலை என்று புணர்ந்தது.

III “ஏ” முன் இவ்விருமையும் உடன்படு மெய்என்றாகும்.” என்பதற்கான விளக்கம் பின்வருமாறு:
எடுத்துக்காட்டு 1
சேயடி
சே+ அடி (ச் +ஏ= சே) இதில் நிலை மொழி ஈற்றிலும் வரு மொழி முதலிலும் முறையே ஏ, மற்றும் அ என்ற எழுத்துக்கள் பயின்றுள்ளன.
எனவே அவற்றினை இணைக்க யகரம்(ய் என்ற மெய் எழுத்து உடம்படு மெய்யாக வந்துள்ளது காண்க.
சே+ய் +அடி (ய் +அ= ய) என்ற அடிப்படையில் சேயடி எனப் புணர்ந்தது.
(தேர்வில் எழுதும் முறை)
சேயடி
= சே+அடி
(ச் + ஏ= சே)
“ஏ” முன் இவ்விருமையும் உடன்படு மெய்என்றாகும்.”
சே+ய் +அடி
“உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” (ய் +அ = ய)
என்ற அடிப்படையில் சேயடி எனப் புணர்ந்தது
எடுத்துக்காட்டு 2
சேவடி
= சே+அடி
(ச்+ஏ = சே) = சே+அடி (ச் +ஏ = சே) இதில் நிலை மொழி ஈற்றிலும் வரு மொழி முதலிலும் முறையே ஏ, மற்றும் அ என்ற எழுத்துக்கள் பயின்றுள்ளன.
எனவே அவற்றினை இணைக்க வகரம்(வ் என்ற மெய் எழுத்து உடம்படு மெய்யாக வந்துள்ளது காண்க.
சே+ வ்+ அடி (வ் + அ = வ) என்ற அடிப்படையில் சேவடி எனப் புணர்ந்தது.

(தேர்வில் எழுதும் முறை
சேயடி
= சே+ அடி
(ச் +ஏ = சே)
“ஏ” முன் இவ்விருமையும் உடன்படு மெய் என்றாகும்.”
சே+ வ் +அடி
“உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” (வ் +அ = வ)
என்ற அடிப்படையில் சேவடி எனப் புணர்ந்தது
குறிப்பு: இது போன்ற பல பயிற்சிகளை மாணவர்கள் எழுதிப் பார்த்தால் விரைவில் இப்பயிற்சியில் நன்கு புலமைப் பெறலாம்.
------------------------------------------------------------------------------

நூற்பா எண் 3
“தனிக்குறில் முன் ஒற்று உயிர்வர இரட்டும்”
விளக்கம்:
நிலை மொழி இறுதியில் தனிக்குறில் எழுத்துடன், ஒரு மெய் எழுத்தும்,
அதனைத் தொடர்ந்து வரு மொழியில் ஒரு உயிர் எழுத்தும் வந்திருந்தால்
நிலைமொழி ஈற்றில் உள்ள மெய்யெழுத்து இரண்டு முறை எழுதப்பெற்று
வரு மொழி முதலுடன் சேர்ந்து புணரும் என்பதாகும்.
எடுத்துக்காட்டு:
என்னுயிர்
எ ன் + உ யிர்(என்+உயிர்)

தனிக்குறில், ஒற்று(மெய் எழுத்து) (உயிர் எழுத்து)
(இவ்வாறு அமைந்திருந்தால்)
என் +ன் + உயிர்
(இதைப் போன்று ‘ன்’ என்ற மெய் எழுத்து இரண்டு முறை எழுதப்படவேண்டும்.
(ன் +உ = னு)
“உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயுல்பே” என்ற விதிப்படி,
என் + (ன் + உ)யிர் என்பது என்னுயிர் என்று மாற்றம் பெற்றது.
(தேர்வில் எழுதும் முறை)
என்னுயிர்
என் + உயிர்
“தனிக்குறில் முன் ஒற்று உயிர்வர இரட்டும்”
= என்+ ன் + உயிர் (ன் +உ = னு)
“உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி,
என் + (ன் + உ)யிர் என்பது என்னுயிர் என்று மாற்றம் பெற்றது.

குறிப்பு: இது போன்ற பல பயிற்சிகளை மாணவர்கள் எழுதிப் பார்த்தால் விரைவில் இப்பயிற்சியில் நன்கு புலமைப் பெறலாம்.
அடுத்து,
குற்றியலுகரப் புணர்ச்சி
விளக்கம்: மெய் எழுத்துகளுள் வல்லின எழுத்துகளாகிய க் ச் ட் த் ப் ற் என்ற ஆறு எழுத்துகளுடன் ‘உ’ என்ற உயிர் எழுத்து சேர்ந்து வரும் பொழுது கு சு டு து பு று என்று மாற்றம் அடையும். அதாவது
(க் + உ = கு) இவைபோன்றே பிறவும் சேரும்.
அவ்வாறு சேர்ந்த உயிர் ‘உ’ என்ற குற்றெழுத்து தனக்கு உரிய 1 மாத்திரை அளவில் இருந்து ½ மாத்திரை அளவாகக் குறுகி ஒலிக்கும். இவ்வாறு ஒலிப்பதைத் தான் நாம் குற்றியலுகரம் என்கிறோம்.

நிலைமொழி ஈற்றில் இந்த குற்றியலுகர எழுத்து வந்திருந்து (கு சு டு து பு று) வருமொழி முதலில் ஏதேனும் ஓர் உயிர் எழுத்து வரும் பொழுது, அவை புணரும்(சேரும்) முறையைத் தான் குற்றியலுகரப் புணர்ச்சி என்கிறோம்.
இனி அவற்றை விரிவாகக் காணலாம்.
இதற்கான நூற்பா
“உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்பதாகும்.
அதாவது,
நிலைமொழி ஈற்றில் இந்த குற்றியலுகர எழுத்து வந்திருந்து (கு சு டு து பு று) வருமொழி முதலில் ஏதேனும் ஓர் உயிர் எழுத்து வரும் பொழுது, நிலை மொழி ஈற்றில், குற்றியலுகர எழுத்தில் வந்துள்ள உயிர் எழுத்து மறைந்து விடும் / ஓடிவிடும் என்பதாகும்.

(எ.டு) நாடு + ஆண்டான் = நாடாண்டான்
இதில். நாடு + ஆண்டான் என்பதில்,
நிலைமொழி ஈற்றெழுத்து டு என்ற குற்றியலுகர எழுத்தாகும். அதனைப் பிரித்தால் ட் + உ = டு எனப்பிரியும்.
அதில் உள்ள உயிர் எழுத்து ‘உ’ என்பதாகும். வருமொழி முதலில் மேலும் ஒரு உயிர் எழுத்து வந்திருப்பதால் இரண்டு உயிர் எழுத்துகளும் சேராது. எனவே நிலை மொழி ஈற்று உயிர் எழுத்து மறைந்து விடும்.
( ட் + உ )


அவ்;வாறு மறைந்த் நிலையில்,
நாட் + ஆண்டான் , என்று இருக்கும்
அதன் பின்னர் நிலைமொழி ஈற்றில் இறுதியாக நின்ற ட் என்ற எழுத்துடன் வருமொழி முதல் எழுத்தான ஆ என்பது சேர்ந்து “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற அடிப்படையில் (ட் + ஆ = டா) மாற்றம் அடையும் இதுவே நாடாண்டான் என்று மாறுகின்றது.
தேர்வில் எழுதும் முறை:
நாடு + ஆண்டான் = நாடாண்டான்

(ட் + உ = டு) உயிர் எழுத்து
ட் + உ
‘ உ’ என்ற குறில் மறைந்த பின்
நாட் _ ஆண்டான் என்று இருக்கும்.
இதனை நாம் ஏற்கனவே கண்ட பழைய முறையான “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதியைப் பயன்படுத்தி,
நாட் +ஆண்டான்) (ட் + ஆ = டா) என மாற்றி
இறுதியாக நாடாண்டான் என்று எழுதவேண்டும்.

இனி, பயிற்சி பெற சில எடுத்தக்காட்டு சொற்கள்:
1. ஆறாயிரம்
2. நிகழ்ந்ததனைத்தும்
2. என்றுணராத
4. மற்றதன்
4. அங்கது
5. விழிப்புணர்வு
6. கம்பரிசி
7. ஆணுக்கிங்கே
8. இளைப்பில்லை
9. உறங்;கப்பா
10 அன்புருவானவன்
14. தவறேதும்
14. ஏற்றதன்று
15. புதிதன்று
16. சிந்தைக்கின்பம்
17. விரைந்தோடி தொடரும்.......


இது உங்கள் சவாலுக்கு மிகுவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
. இது உங்கள் சிந்தைக்கு சிறிதேனும் இன்பத்தை நல்குமாயின் நான் களிபேருவகை அடைவேன்.

எழுதியவர் : திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி (18-Nov-19, 3:48 pm)
பார்வை : 1713

சிறந்த கட்டுரைகள்

மேலே