பூத்தலின் பூவாமை நன்று - நீதிநெறி விளக்கம் 6
நேரிசை வெண்பா
அவைஅஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவைஅஞ்சா ஆகுலச் சொல்லும் - நவைஅஞ்சி
ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்நலமும்
பூத்தலின் பூவாமை நன்று. 6
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
கற்றார் அவைக்கு அஞ்சி உடம்பு நடுங்குவோருடைய கல்வியறிவும், அவைக்கு அஞ்சாத படிக்காதவர்களுடைய ஆரவாரச் சொல்லும்,
பிறர்க்குக் கொடாததால் வரும் குற்றத்துக்கு அஞ்சிக் கொடுத்துண்ணாதவர்கள் செல்வமும், வறியவர்களுடைய ஈகை முதலிய இனிமையான தன்மைகளும் ஆகிய இந்த நான்கு தன்மைகளும் உண்டாதலை விட உண்டாகாமலிருத்தலே நன்று.
இதை விளக்குவதற்குப் ‘பூத்தலின் பூவாமை நன்று’என்னும் தொடரைக் குமரகுருபரர் பயன்படுத்தி உள்ளார்.
விளக்கம்:
விதிர்த்தல் - உதறல். ஆகுலம் - ஆரவாரம்:
செல்வமும் இன்னலமும் என்பன உள்ளுறை உவமமாக வந்தன.
ஆகுலச் சொல்லும், மெய் விதிர்ப்பார் கல்வியும் பயனில்லை என்பது. இன்னலம் என்றற்கு இனிய அழகு என்றலுமாம்.
கற்றவர்களிலும் அவைக்கு அஞ்சாதவரே உண்மையிற் கற்றவர், மற்றவர் கற்றுங் கல்லாரே ஆவர்.
கருத்து:
கற்றாரவைக்கு அஞ்சுங் கல்வி பயன்படாது.