பொன்மலர் நாற்றம் உடைத்து - நீதிநெறி விளக்கம் 5
நேரிசை வெண்பா
எத்துணைய ஆயினும் கல்வி யிடமறிந்து
உ’ய்’த்துணர்வு இல்எனின் இல்லாகும் – உ’ய்’த்துணர்ந்தும்
சொன்வன்மை இன்றெனின் என்ஆகும்? அஃதுண்டேல்
பொன்மலர் நாற்றம் உடைத்து. 5
- நீதிநெறி விளக்கம்
இப்பாடல் இரண்டாம் அடியில் ’ய்’ ஆசிடை யிட்ட எதுகை - உ’ய்’த்துணர்வு, உ’ய்’த்துணர்ந்தும் - அமைந்த இருவிகற்ப நேரிசை வெண்பாவாகும்.
பொருளுரை:
கற்ற கல்வி எவ்வளவு பெரியனவானாலும் நூலின் இடந்தெரிந்து ஆராய்ந்து உணரும் (ஊகித்து அறிதல்) உணர்ச்சி இல்லையானால் அக் கல்வி பயனில்லையாகும்.
அங்ஙனம் உய்த்துணர்ந்தாலும் பிறர்க்கு எடுத்துச் சொல்லும் வல்லமை இல்லையென்றால் அக் கல்வியால் என்ன பயனாகும்?
அச்சொல்வன்மை இருக்குமானால், அது பொன்னாற் செய்யப்பட்ட மலர் மணம் உடையது போலாகும்.
(எத்துணை = எவ்வளவு, உய்த்து உணர்வு = ஊகித்து அறிதல்)
பொன்னால் செய்யப்பட்ட மலர் அழகாக இருக்கும். அழகுடைய அந்தப் பொன்மலரில் நறுமணமும் இணைந்து இருந்தால் எவ்வளவு உயர்வாகக் கருதப்படுமோ அதைப் போன்றே கல்வி அறிவுடன் சொல்லாற்றலும் பெற்றவன் மதிக்கப்படுவான் என்று குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார்.
விளக்கம்:
உய்த்துணர்வு என்பதற்கு நல்லாசிரியனைத் தெரிந்து ஆராய்ந்து அறிதலென்று பொருளுரைத்து, அதற்கேற்ப எத்துணைய என்பதற்குச் சிறுமைப் பொருளுரைப்பாருமுளர். இல்லாகும், என்னாம் என்பன படித்தும் பயனில்லை என்பதைக் காட்டின;
கல்விக்கும், அதனைக் கற்பானுக்கும்; கற்றதை எடுத்துரைப்பானுக்கும் உள்ளஇயைபினை உவமை செவ்விதின் விளக்குகின்றது. `எத்துணைய தாயினும்' என்பதும் பாடம்.
கருத்து:
இடமறிந்து உய்த்துணர்தலும் சொல்வன்மையும் இல்லையானாற் கல்வியாற் பயனில்லை.