பீடிலா மாந்தரின் நிறைநின்ற பெண்நன்று - நான்மணிக்கடிகை 13
இன்னிசை வெண்பா
பறைநன்று பண்ணமையா யாழின்; நிறைநின்ற
பெண்நன்று பீடிலா மாந்தரின்; பண்அழிந்து
ஆர்தலின் நன்று பசித்தல்; பசைந்தாரின்
தீர்தலின் தீப்புகுதல் நன்று. 13
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
பண்ணிசை யமையாத ‘யாழ்' என்னும் இன்னிசைக் கருவியினும் ‘பறை' யென்னும் பேரோசைக் கருவி நன்றாம்;
பெருந்தன்மை அமையாத ஆண் மக்களினும் கற்பில் நின்று அடக்கமுடைய பெண் மக்கள் நல்லர்;
பதங்கெட்டு உண்டலினும் பசியுடன் வருந்துதல் நன்று;
தம்மை விரும்பினாரினின்றும் நீங்கி உயிர் வாழ்தலை விட எரியில் வீழ்ந்து உயிர் விடுதல் நல்லது.
கருத்து:
பறை, இசையமையா யாழினும் மேல்;
கற்பமைந்த பெண்டிர், வினைத்திறன் அறியா ஆடவரினும் மேல்;
பசித்தல், பண்டங்களைப் பதங்கெட உண்ணலினும் மேல்; தீப்புகுதல்,
விரும்பினாரை நீங்கி வாழ்தலினும் மேல் என்க.
விளக்கவுரை:
எனவே, ‘யாழ் இசையமைதல் வேண்டும்' என்பது முதலாக இந்நான்கிற்கும் உடம்பாட்டிற் பொருளுரைத்துக் கொள்க. பண் இசைவான ஒலியமைப்பு. நிறை: நினைவையுஞ் சொல்லையுஞ் செயலையும் ஒருவழி நிறுத்தல் என்பது பொருள்.
பீடு - ஆள் வினைத்திறத்தின் மேலும், மாந்தர் – ஆடவர்மேலுங் குறிப்பால் நின்றன.
ஆள்வினைத்திறத்திற் பெண்மக்கள் ஆடவரினும் ஆற்றல் குறைந்தவராகலின், அத்திறமமையா ஆடவரினும் பெண்டிர் நல்லரென்றார்.
பண் அழிவு - இங்குப் பண்டங்களின் பதனழிவை யுணர்த்திற்று. ‘அழிந்த ஆர்தலின்' என்றுரைப்பினுமாம். பசைதல் - நெஞ்சு நெகிழ்ந்து அன்பு கொள்ளல்;