கிளைக்குழாம் இன்சொற் குழியுள் இனிதெழூஉம் – நான்மணிக்கடிகை 14
இன்னிசை வெண்பா
வளப்பாத்தி யுள்வளரும் வண்மை கிளைக்குழாம்
இன்சொற் குழியுள் இனிதெழூஉம் வன்சொல்
கரவெழூஉங் கண்ணில் குழியுள் இரவெழூஉம்
இன்மைக் குழியுள் விரைந்து. 14
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
‘ஈகை' யென்னும் பயிர் செல்வமென்னும் பாத்தியுள் விளையும்;
உறவினர் கூட்டம் இன்சொலென்னும் பாத்தியுள் செழுமையாய் வளரும்;
வன்சொல்லோடு கூடிய வஞ்சனை யென்னும் பயிர் கண்ணோட்டமின்மை யென்னும் பாத்தியுள் வளரும்;
‘இரத்த' லென்னும் பயிர் ‘வறுமை' யாகிய பாத்தியுள் விரைவாக உடனே வளரும்.
கருத்து:
ஈகை செல்வத்தால் உண்டாகும்; உறவினர்க்கு மகிழ்ச்சி இன்சொல்லால் உண்டாகும்; வன்சொல்லும் வஞ்சனையுள் கண்ணோடாமையால் உண்டாகும்; இரத்தல் வறுமையாலுண்டாகும்.
விளக்கவுரை:
பாத்தியென்றுங் குழியென்றுங் கூறினமையெல்லாம் உருவகம்.
வளம் - செல்வத்தை யுணர்த்துதல்,
இரவை விரைந்தெழூஉமென்றார், உணவு இன்றிச் சிறிது நேரந்தானும் வறியார் தம்மைக் காத்துக்கோடல் இயலாமையின்.