முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா - நீதிநெறி விளக்கம் 13

நேரிசை வெண்பா

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம்; - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா; யாரே
அழகுக்கு அழகு செய்வார். 13

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

நன்கு வடிவமைக்கப்பட்ட முழு மணிகளாற் செய்யப்பட்ட நகைக்கு வேறு துணை நகை வேண்டா; எவர்தாம் அழகுக்கு அழகு செய்வார்கள்’ அதுபோல, படித்தவர்களுக்கு அப்படிப்பினழகே அழகாவதல்லாமல் வேறொரு நகையழகு வேண்டுவதில்லையாம்.

விளக்கம்:

உடைத்துச் சாணை தீட்டப்பட்ட பொடிமணிகளாலல்லாமல் முழு மணிகளாலேயே செய்யப்பட்ட நகையாம் என்றற்கு முழுமணிப் பூண் என்றார்.

கல்வி நலன் என்பது நல்ல கல்வியைக் குறித்தது; கல்வியழகு என்பது பொருள்.

முழுமணி – மாணிக்கம்; ;அஃது அறிவு நூற் கல்வி.

`ஒருமொழி யொழிதன் இனங்கொளற்கு உரித்தே’ என்பதனால் நகை என்னும் உவமையோடு, உடை முதலான அழகுகளையுங் கொள்க, இவையெல்லாம் தரும் அழகுகளை விடக் கல்வியாலாகும் அழகு பெரிதாம்.

(நலன் - சிறப்பு, கலன் - அணிகலன், முற்ற முழுமணிப் பூண் - நன்கு வடிவமைக்கப் பட்ட மணி,

பூண் - அழகுசெய்தல்) கல்வி கற்றவர்களுக்கு எந்த அணிகலமும் தேவை இல்லை என்று நீதிநெறி விளக்கம் விளக்கியுள்ளது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Nov-19, 8:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 622

மேலே