முழுவதூஉங் கற்றனம் என்று களியற்க – நீதிநெறி விளக்கம் 14

நேரிசை வெண்பா

முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதூஉங்
கற்றனம் என்று களியற்க – சிற்றுளியால்
கல்லுந் தகருங் தகரா கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தி னால். 14

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

பொன்னாலான காதணியை உடைய பெண்ணே! எல்லாம்தெரிந்தவர் உலகத்தில் ஒருவரும் இல்லை; ஆதலால், எல்லாவற்றையும் கற்றுவிட்டோம் என்று கர்வம் கொள்ளாதே;

ஏனென்றால், மிகச்சிறிய உளியினால் மலைகளும் உடையும்; ஆனால் கொல்லனுடைய உலைக்களத்தில் உள்ள சம்மட்டியினால் அம்மலைகள் உடையாது.

விளக்கம்:

கல்-மலை; கொல் - கொல்லன்; உலை – உலைக்களம், கூடம் என்பது சம்மட்டியை உணர்த்துகிறது.

முதலிரண்டடிகளுக்குப் பின்னிரண்டடியின் உவமையால் ஏதுக் கூறினார்.

உவமம், சிறிது கற்றாரும் பெரிது கற்றாரை வென்று விடுவர் என்னும் வேறொரு பொருளையும் உட்கொண்டு நின்றது.

கருத்து:

கற்றனம் என்று செருக்கடையலாகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Nov-19, 8:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 78

மேலே