மன்னுயிர்க்கு இதம்புரியின் தன்னுயிர்க்கு இன்பம் தழையும் - நாகரிகம், தருமதீபிகை 530
நேரிசை வெண்பா
மன்னுயிர்க்(கு) அன்பாய் மருவி இதம்புரியின்
தன்னுயிர்க்(கு) இன்பம் தழையுமே - முன்னொருவன்
உள்ளம் உருகி உதவினான் ஈசனருள்
வெள்ளமெதிர் கண்டான் விரைந்து. 530
- நாகரிகம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
ஒருவன் பிற உயிர்களுக்கு இரங்கி உதவிவரின் அவனுடைய உயிர்க்கு அது பேரின்பமாப்ப் பெருகி வரும்; முன்பு உள்ளம் உருகி உதவி புரிந்தவன் பின்பு இறைவன் அருளை வெள்ளமாய் எதிரே கண்டு உள்ளம் உவந்து கொண்டான் என்கிறார் கவிராஜ பண்டிதர். இது அன்பின் வழியே இன்பம் என்கின்றது.
சுகத்தையும் புகழையும் எல்லாரும் விரும்புகின்றனர்; தாம் விரும்பியபடி அவற்றை அடைந்து கொள்பவர் அரியராயுள்ளனர். கரும சாதனங்களைச் சரியாக. உணர்ந்து கொள்ளாமையால் உரிமைகளை இழந்து போகின்றனர்.
உள்ளம் கனிந்த அரிய செயல்கள் பெரிய புண்ணியங்களாய்ப் பெருகி வருகின்றன. அவ்வரவால் பேரின்பங்கள் விளைகின்றன. தன்னலம் துறந்து பிறர்க்கு உதவி புரிய நேர்ந்தபோது அவன் உயர்ந்த தியாகியாய்ச் சிறந்து விளங்குகிறான். உள்ள பொருள்களை அள்ளிக் கொடுத்தவர் வள்ளல்கள் என வந்தார். சிறந்த சீரும் சிறப்பும் உயர்ந்த செயல் இயல்களால் உளவாகின்றன.
மன்னுயிர்க்கு அன்பாய் இதம்புரியின்
தன்னுயிர்க்கு இன்பம் தழையும்.
மனிதன் அரிய இன்ப நலங்களை அடைதற்குரிய எளிய வழியை விழி தெரிய இது விளக்கியுள்ளது. விதையை நிலத்தில் விதைத்தவன் மிகுந்த விளைவுகளைப் பெறுதல் போல் இதத்தை உயிர்களிடம் செய்தவன் உயர்ந்த மகிமைகளைப் பெறுகிறான்,
தனக்கு இச்சையாய்ச் சுகத்தை நாடுகிறவன் கொச்சை மனிதனாய் இழிந்து படுகிறான்; . நச்சிய இன்பங்களையும் இழந்து விடுகிறான். பிறர்க்கு அன்பாய் இதத்தைச் செய்கிறவன் உச்ச நிலையில் உயர்ந்து ஒளி மிகுந்து நிற்கிறான்; எல்லா இன்ப நலன்களையும் எளிதே அடைந்து கொள்கிறான்.
He that loveth his life shall lose it; and he that hateth his life in this world, shall keep it unto life eternal. - Bible
சுய நயமாய்த் தன் சீவனை நேசிக்கிறவன் அதனை இழந்தவனாகிறான்; இவ்வுலகில் பிறர்க்கு இதமாய்த் தன்னைத் துறந்தவன் நித்திய சீவனாய் நிலைத்து நிற்கிறான்' என ஏசுநாதர் இவ்வாறு தன் சீடர்களை நோக்கிக் கூறியுள்ளார்.
தன்னலம் பாராமல் சீவர்களுக்கு இதம் செய்யும்படி அத்தீர்க்கதரிசி போதித்திருப்பது இங்கே நன்கு சோதித்துச் சிந்திக்கத் தக்கது.
முன்ஒருவன் உள்ளம் உருகி உதவினான்
ஈசன் அருள்வெள்ளம் எதிர்கண்டான்.
பண்டு நிக்ழ்ந்த ஒர் அதிசய நிகழ்ச்சியை இது துதிசெய்து வந்தது. தெய்வ ஒளிகள் வையம் தெளிய வருகின்றன.
இமயமலைச் சாரலில் ஒரு தங்கப் பாளம் கிடந்தது; முனிவர் சிலர் கண்டு வந்து மகத மன்னனிடம் சொன்னார். அரசன் அதனைக் கொண்டு வரும்படி செய்து, மன்னன் மகிழ்ந்து பார்த்தான்; இது அரிய புண்ணிய சீலர்க்கு உரியது என அதன் மேல் எழுதியிருந்தது. வேந்தன் வியந்து நின்றான். தருமவான்கள் எனத் தன் நாட்டில் பெருமை பெற்றுள்ளவர் யாவரையும் அழைத்தான்; அனைவரும் வந்து. அரச சபையில் கூடினர்.
அவருள் உயர்ந்த புண்ணியவான் யார்? என எண்ணி நோக்கி இறுதியில் ஒருவனை ஏகமாகத் தேர்ந்தெடுத்தனர். தன் செல்வம் முழுவதையும் கல்வி நிலையங்களுக்கும், வைத்திய சாலைகளுக்கும், அன்ன தானங்களுக்கும் அள்ளிக் கொடுத்தவன் எனத் தெள்ளி எடுத்த அவனை அரசன் உவந்து நோக்கி அந்தத் தங்கக்கட்டியை எடுத்துக் கொடுத்தான்; அவன் கையில் வாங்கினான். வாங்கவும் அது ஈயம் ஆயது. யாவரும் மருண்டு திகைத்தார்; அவனும் வெருண்டு நாணினான். மன்னன் மறுகிப் பின்னர் ஒருவனிடம் அப்பொன்னின் பொதியை உரிமையாகத் தந்தான். பெரிய தரும சீலன் எனப் பேரும் சீரும் பெற்றிருந்த அவன் கையில் பட்டவுடனே அது இரும்பாய் மாறியது.
புண்ணியவான் எனக் கண்ணியம் கொண்டிருந்த அனைவரும் வந்து தொட்டனர்: எனினும் அது பித்தளை, செம்பு, வெண்கலம், வெள்ளி என இழிந்து மாறியதேயன்றி ஒருவரிடமாவது தன்னிறம் கொண்டு அப்பொன் பொதி நின்றிலது. அரசன் அயர்ந்து நின்றான். இறுதியில் அங்கோர் உழவன் வந்தான், மிகவும் எளியவன்; நாட்டுப் புறத்தான். அந்தக் கூட்டத்தைக் கண்டதும், ’என்ன இது? என உன்னி அடைந்தான். அருகு வரவே அந்தத் தங்கப் பாளத்திலிருந்து ஒரு பேரொளி எழுந்து அவன் மேல் வீசியது. யாவரும் வியந்தனர். மன்னன் மகிழ்ந்து அப் பொன்னின் பொதியை அன்னவனிடம் கொடுத்தான்; அவன் கையில் வாங்கியதும் முன்னிலும் பன்மடங்காக அது ஒளி வீசியது. வேந்தன் அவனை உவந்து உபசரித்துப் புண்ணிய சீலன் என்று புகழ்ந்து போற்றினான்.
தங்கள் பேரும் சீரும் உலகம் அறிய வேண்டும் என்று முன்னவர் எல்லாரும் ஆடம்பரமாகத் தருமங்களைச் செய்தனர்; இவன் யாருக்கும் தெரியாமல் பசித்தவர்களுக்கு அன்னம் உதவி எல்லா உயிர்களிடத்தும் உள்ளன்புடையனாய் ஒழுகி வந்தான் ஆதலால் எங்கும் நிறைந்துள்ள கடவுளுடைய கருணை இவனிடம் உரிமையாய்ப் பொங்கி எழுந்தது.
இமயச் சாரலில் எரிகதிர் வீசித்
தமனியப் பாளம் தனியே கிடந்தது;
மகத வேந்திடம் மாதவர் மொழிந்தனர்;
மன்னன் மகிழ்ந்தன் னதைக்கொ ணர்ந்தான்
மன்னிய வாசகம் முன்னுற நின்றது: 5
கண்ணுற நோக்கி எண்ணியுள் வியந்தான்:
தண்ணளி நிறைந்த புண்ணியர் தமக்கே
ஒண்ணிதி இஃது உரிய தாம்’எனத்
தீட்டி யிருந்ததை நோக்கி வியந்து
தேசம் எங்கணும் ஓசையுற உணர்த்தினன்; 10
தரும வான்களாய்த் தரணியில் உயர்ந்த
நல்லோர் யாவரும் ஒல்லையில் குழுமினர்;
சேர்ந்தன ருள்ளே தேர்ந்தனர் ஒருவனை
உரிய பொருளெலாம் வறியவர்க்(கு) உதவிப்
பெரிய வனெனப் பெருமை பெற்றிருந்த 15
அன்னவன் தனக்கே பொன்னின் பொதியை
ம்ன்னவன் வழங்கினன் வாங்கினன் அவனும்
தொட்டதும் அந்தப் பொன்னின் திரளை
ஈயக் கட்டியாய் இழிந்து விழுந்தது;
யாவரும் வெகுண்டனர்; அவனும் மருண்டான்; 20
கடவுட் பரிசிது கைபெற உரியார்
யாரும் இலர்என அரசன் வருந்தி
மறுகி இருந்துபின் மதியோடு ஆய்ந்தான்
உரியவர் இவர்எனத் தெரியஓர் சூழ்ச்சி
பெரியவர் ஒருவர் பேசி அருளினார்; 25
நல்லவர் இவர்என நானிலம் அதனில்
பல்லவர் புகழப் பாடுபெற் றிருந்த
எல்லவரும் அவன் எதிரே வந்தனர்
பொன்னின் கட்டியைப் போந்து தொட்டனர்
இரும்பு செம்பு ஈயம் பித்தளை 30
வெண்கலம் வெள்ளி இங்ஙனம் ஆயது;
யாவரும் நாணி அயலே போயினர்;
இறுதியில் அங்கோர் உழவன் அடைந்தான்;
எளியன் ஆயினும் அளிபமிக உடையவன்;
பிறவுயிர்க் கிரங்கும் பேரரு ளாளன்; 35
வழியிடை ஒருவன் விழியிலா(து) இருந்ததைக்
கண்டுளம் வருந்திக் கண்ணீர் சொரிந்தவன்
கையைப் பிடித்துப் பைய நடத்தித்
தருவிடை இருத்திப் பரிவுடன் ஆற்றி
உறுதி கூறி உரிமையின் வந்தான் 40
வேந்தன் எதிரே மாந்தர் குழுமி
நேர்ந்து நிற்றலை நினைந்து வியந்து
அருகு நெருங்கி ஆய்ந்து நோக்கினன்;
வெள்ளியாய்க் கிடந்தது தங்கமாய் மாறிப்
பொங்கொளி வீசி அங்கவன் மேனியில் 45
எங்கும் இன்கதிர் இனிது திகழ்ந்தது
அரசன் முதலாய் யாவரும் வியந்தனர்;
தெய்வக் கொடையாய்ச் சேர்ந்துள அந்தப்
பொன்னின் பொதியை அன்னவற் களித்தனர்;
இன்னொளி பரப்பி இளஞ்சூ ரியன்போல் 50
மன்னி அவன்கை மருவி
தண்ணளி புரிந்து தழைத்திருந் ததுவே.
உண்மையான புண்ணிய நிலையை இச்சரிதம் இனிது உணர்த்தியுள்ளது. உள்ளம் கனிந்த அன்பே கடவுளுடைய அருளை உரிமையாகப் பெறுகிறது. நாகரிகம் என மோகம் அடைந்துள்ள வெளி மினுக்குகள் உயர் பயன்களை அடையாது. கண்ணோடி இரங்கி உபகரிக்கும் உதவியே சிறந்த புண்ணியமாய் விண்ணோடி விளங்கி நிற்கும் என்பதை இது கண்ணாடி போல் காட்டியருளியது. கருத்தை உணர்ந்து கதிகலம் காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.