ஓம் சாமியே சரணம் ஐயப்பா சென்னையில் ஐயப்பன்

ஓம் சாமியே சரணம் ஐயப்பா . . . .

இரவும் பகலும் உறங்கா விழிகள்
இதயம் முழுதும் மறக்கா மொழிகள்
அந்தியும் மாலையும் மாலையை வணங்கி
ஒரு அந்தமில்லா அந்த ஜோதியை வணங்கி
சொல்லும் நாமம்
ஓம் சாமியே சரணம் ஐயப்பா

ஐந்து மலையாளும் அருட்ஜோதி
சாஸ்தா எனும் பெரும் ஜோதி
அங்கே மலையாள பூமியில்
இங்கே சென்னை மாநகரில்

அங்கே பம்பைக்கு அருகில்
இங்கே வங்க கடலுக்கு மிக அருகில்
மலையாள பூமியில் இருப்பிடம் சபரிமலை
சென்னையில் இருப்பிடம் வட சபரிமலை

அண்ணாமலையார் பெற்ற அருட்செல்வம்
இங்கே ராஜா அண்ணாமலைபுரத்தில்
அனுதினம் நிகழ்த்தும் அற்புதங்கள் யாவும்
உணர்ந்து தெளிவர் அடியவர்கள் மனதில்
வங்ககடல் ஓரத்திலே
அலையோசை கேட்கும் தூரத்திலே
அழகாய் அமைந்ததிங்கே ஐயப்பன் ஆலையம்
பூஜைகளும், அபிஷேகங்களும் தான் இரு வேலையும்

காடு மலை ஏறாமல்
பம்பை நதி தாண்டாமல்
பக்தியோடு வருவோருக்கு
நாளும் அருளும் அருள்மலை
அதுதான் இந்த ராஜாஅண்ணாமலை

அங்கே எப்படியோ
அப்படியேதான் இங்கேயும்
அமைப்பும், பூஜைகளும்
ஐயப்ப விக்ரகமும்
பதினெட்டு படியும்
கொடி மரமும்
கொடிமரத்தின் மேலே
தயாராய் குதிரையும்
எங்கேயும் நிறந்தருளும் ஐயப்பன்
இங்கே இருந்தருள்வது
இன்னும் சிறப்பினும் சிறப்பே

இங்கே இந்த ஆலயம்
வந்த கதை
ஒரு அடியானின் மனதில்
ஆசையால் விழுந்த விதை

செட்டிநாட்டு அரச பரம்பரையின்
ஒரு தாயின் வயிற்றில் பிறந்தது
எம் ஏ எம் ராமசாமி எனும் சிசு
பின் நாளில் தொழிலதிபராய்
தன்னை உயர்த்தி கொண்ட சிசு

காமத்தின் மேல்
மோகத்தின் மேல்
பேராசையின் மேல்
இருந்த பற்றை வேறருத்தது
சபரிமலையில் அருட்புரியும்
ஞான ஒளி

அந்த ஒளியின் ஒளியை
நாளும் மனதால் உண்டு
வாழ்விலும் வசதியிலும்
ஒளி குன்றாமல் தன்னை வளர்த்து கொண்டது
ராமசாமி எனும் சிறு ஒளி

தொடர்ந்து விரதமிருந்து
75 முறைகள் ஏறியது
பதிணெட்டு படி
அந்த பதிணெட்டு படியின் மீது
கொண்ட ஆசையால்
மனது ஆனது தவிடு பொடி

அந்த பொடி பொடியான
மனதின் ஓரமாய் வேரைவிட்டது ஆசை
அதுதான் கடவுளை
தன் அருகே வைத்து பார்க்க துடித்த பேராசை

சபரி மலையின் அழகும்
அங்கே ஐயப்பன் கோவிலின் தோற்றமும்
மனதில் நீங்காது படிந்தது
அதுதான் இங்கே இராஜாஅண்ணாமலைபுரத்தில்
திருக்கோயிலாய் வடிந்தது
ஆம் கடவுள் மேல் பக்தியினால்
அந்த பக்தியினால் வந்த புத்தியினால்
அந்த புத்தியினால் வந்த சக்தியினால்
ஆரம்பமானது திருப்பணி

இந்த ராமசாமியின் ஆசைக்கும்
தான் தவமிருக்கும் சாமிக்கும்
நிலத்தை தானமாய் ஈட்டினார்
ராஜா முத்தையா செட்டியார்

செட்டியாரின் நிலத்தில்
நடப்பட்டது அடிக்கல்
அந்த அடிக்கல்லுக்கு
ஆதாரமாய் இருந்து சிரித்தது
ஐயப்பன் எனும் அருட் கல்

ஜனவரி 29 1982 ல் கட்டபட்டது
இராஜா அண்ணாமலைபுரத்தின் அடையாளம்
மேலும் பெருகேத்தி
மார்ச் 27 1994 புதிதாய் ஜொலித்தது
அருட் மழை நாளும் பொழியும்
ஐயப்பன் ஆலையம்

வட சபரி என்பது
ஏதோ வெறும் பெயருக்காய்
பெயர் பெற்றது மட்டுமன்று
சபரிமலையில் உள்ள
கட்டிட கலையின் அமைப்பையும்
பதினெட்டு படிகளையும் கொண்டு
சபரியின் நகலாய் நின்றது
நின்றதன் புகழ் இன்றும் வென்றது

கடும் விருதமிருந்து
ஏதேனும் சில காரணத்தால்
சபரிக்கு செல்ல இயலாதவர்களை

வா வா என்று அன்போடு
அழைத்து அருள்கிறது வடசபரி
அருள்மழையை அடைமழையாய் பொழியும்
அருள் அருவி

அனைவரும் முதலில் உள்ளே நுழைந்தால்
கோயிலின் இடப்புறம் உள்ள
படிகளில் ஏறி
மேலே சென்றால்
வா வா என்று அழைப்பது
உயர்ந்து நிற்கும் கொடிமரம்

கொடிமரத்தை வணங்கியபடி
இடப்புறம் சென்றால்
அருட் பந்தியிட முந்தி நிற்கிறார்
நம்தொந்தி கணபதி
தன் தமயன் அருகிலே
நின்றருளும் திரு கணபதி

சபரி மலையில் உள்ளதை போலவே
இங்கேயும் ஐயப்பனின் வலப்புறம்
வலப்புறம் வந்து வருவோருக்கு அருள
ஆவலாய் துடிக்கும் திருக்கரம்
முந்தி நின்றவனை
குட்டி கொண்டும்
தோப்புகரணம் போட்டு கொண்டும்
மெல்ல நகரவோம்
ஆம் வேகமாய் நகர அனுமதிப்பதில்லை
கணபதியின் அழகு

சற்றே நகர்ந்தால்
நகராமல் நிற்க வைத்து
நம் சகல தோஷங்களையும்
நீக்கியருள துயர் போக்கியருள
நாளும் படமெடுக்கும் நாகர்
இங்கே சிலையாய் நிற்கும்
சிலையிலும் சீறும் நாகர்

நாகரை கடந்து
முன்னே வந்தால்
அனைவரின் முன்னேற்றத்திற்கும்
முன் வந்து நிற்கும்
திரு கண் வந்து நிற்கும்
அந்த கண்ணை தாங்கும்
அருட் முகம் வந்து நிற்கும்
அந்த முகத்தை கொண்ட
ஐயப்பன் திருமேனி
தான் வந்து நிற்கும்

ஐயப்பனின் அழகும்
அருள் விழியும்
திரு இதழ் வழி வழியும்
புன்னகை அமுதும்
மண்டியிட்டு அமர்ந்த
அழகு தொணியும்
அனைவருக்கும் அருளை
அள்ளி அள்ளி கொடுக்கும்
திரு கரமும்
யாவும் கண்டால்
சுகமே சுகமே என
கானும் அனைவரின் மனதிலும்
பக்தி வழியும்
நிம்மதி நிறையும்

இதுவரை இருந்த துயரங்கள் யாவும்
இதோ செத்த போயிட்டு வாரேன் என்று
வெகுதூரம் ஓடி
வேகமாய் மறையும்
மனதில் அப்பிய அழுக்குகள் யாவும்
அருள் மழையாள் கரையும்
தாயின் கருவின் வழியே பிறந்திருந்தாலும்
ஐயப்பன் அருள் பார்வையால்
மீண்டும் மீண்டும் பிறப்பதாய் உணரும்

இயன்றவரை கண்டு ரசித்து
செல்லாமல் இங்கேயே
சிலையாக நின்றாலும் சுகமே
என்று உள்ளம் அடம் பிடித்தாலும்
எதார்த்தம் கைபிடித்து இழுக்க
நகர்வோம் அனைவரும்
அருள் மூட்டையை கட்டி
மனதோடு சுமந்து

அப்படியே சுற்றி
கொடிமரத்திற்கு முன்பு வந்து
மனதார பக்தியுடன்
விழுந்து வணங்கியபின் எழுந்து
இடப்புறம் சென்று அங்கே உள்ள
படிகட்டுகளில் இறங்கி
அங்கே இருக்கும்
மகிஷா சூர மர்த்தினியை
மனதார நினைத்து வணங்கி
அப்படியே கடந்து வந்தால்

காவல் தெய்வங்களாய்
நின்றருளும்
பெரிய கடுத்த சுவாமியையும்
சின்ன கருப்பன்ன சுவாமியையும்
கருப்பாயி அம்மையும்
தரிசித்து வந்து

பதினெட்டு படியின் அழகிலும்
கொடிமரத்தின் பேரழகிலும்
மயங்கி மனதால்
நீயே சரணம் என்றேன்
ஐயப்பா என்று வீழ்ந்து வணங்கி
எழுந்து பார்த்தால்
எதிர்காலம் பிரகாசிக்கும்
ஒளி ஒளிமாய் தெரியும்

சபரி மலையில்
என்னவெல்லாம் சிறப்போ
எந்த நாட்கள் எல்லாம் சிறப்பு வழிபாடோ
எல்லாமும் இங்கேயும் உண்டு
காரணம் அது தென் சபரி
இராஜா அண்ணாமலைபுரம் வட சபரி

சாமியே சரணம் ஐயப்பா . . . .

ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (23-Nov-19, 6:41 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 429

மேலே