தேடிய தருணம் ஓடி வருக

தேடிய தருணம் ஓடி வருக


இளங்கதிரவனின் ஒளி எங்கும் வியாபித்துக்கொண்டிருக்கிறது. இதமான அந்த காலை வேளையில், இளையோர் மட்டுமின்றி முதியவர்களும் மிகுந்த சுறுசுறுப்புடன் மண்டபத்திற்குள் நுழைகின்றனர். உள்நாட்டினர் மட்டுமின்றி பல வெளிநாட்டவர்களும் முகமலர்ச்சியுடன் அன்பொழுக பல்வேறு மொழிகளில் உரையாடி மகிழ்வுடன் நடந்து செல்கின்றனர். அவர்களோடு நானும் மனைவியுடன் சென்று எங்களுக்குரிய இருக்கையில் அமர்கிறோம். மண்டபத்திற்கு வெளியே பிரேத்தியமாக அமைக்கப்பட்டிருக்கும் அகன்ற திரைக்கு முன், மண்டபத்திற்கு உள்ளே நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டுகளிக்க குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் கூடியிருக்கின்றனர்.
வெளியில் சில்லென்று வீசிய காற்றை விட, மண்டபத்தினுள் குளிர் இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களிலேயே மனைவிக்கு உடல் நடுங்கத் தொடங்குகிறது! மனைவி சேலை முந்தானியால் உடம்பை இழுத்து மூடிக்கொள்கிறாள்.இது போன்ற நிகழ்ச்சில் அவள் முதல் முறையாக கலந்து கொண்டிருந்தாள். “என்னங்க....இப்படி குளுர்து...! தெரிந்திருந்தால் குளிர் சட்டைய வீட்டிலிருந்து கையோடு கொண்டு வந்திருப்பேனெ!” நடுங்கும் குரலில் பேசிய மனைவியைப் புன்முறுவலுடன் பார்த்தாலும் மனதுக்குள் அவள் நிலைக்காக வருந்தினேன். அவள் தமது கைப்பையைத் திறந்து,சுடுநீர் குப்பியிலிருந்த நீரை சிறிது அருந்திய பின்னர் அமைதியாகிறாள்.
கீழ்த்தளத்தில் மகன் அரவினும் அவனது நெருங்கிய நண்பன் பிரபுவும் சகமாணவர்களுடன் அமர்த்திருக்கின்றனர்.அவர்கள் இருவரும் இரகசியமாய்ப் பேசிக் கொள்வதை மனைவி அடையாளம் கண்டு என்னிடம் கூறுகிறாள்.தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு பயின்றது முதல் பல்கலைகழகம் வரையில் அவர்களிவரும் ஒன்றாகப் படித்தவர்களாயிற்றே...! வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மௌன சாமிகளாகவா இருப்பார்கள்? அவர்களின் சந்திப்புகளில், அட்டகாசமான பேச்சும், சிரிப்பும் உச்சத்திற்குப் போவதை பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன்...! இன்று அவர்களின் வெற்றித் திருநாளாயிற்றே.... மகிழ்ச்சிக்குக் கேட்கவும் வேண்டுமா...? அவர்களிருவரையும் பார்த்து நான் மௌனமாகச் சிரித்துக் கொள்கிறேன்!
மேல் தளத்திலிருந்து நிகழ்ச்சியைக் கண்டு களிக்க எங்களுக்கு வசதியாக இருந்தது. மண்டபத்திலுள்ள ஐயாயிரம் இருக்கைகளிலும் பெற்றோர்கள் அமர்ந்திருக்கின்றனர். மாணவர்களைவிட பெற்றோர்களே எண்ணிக்கையில் மிகுந்திருந்தனர். அவர்களின் முகங்களில் புன்முறுவலும் பூரிப்பும் வண்ணத்துப் பூச்சிகளாக வலம் வருகின்றன!
“என்னங்க....இவ்வளவு பிள்ளைங்க...?” மாணவர் கூட்டத்தைக் கண்டு மனைவி வியக்கிறாள்.
“அனைத்துலக பல்கலைக்கழகம்னா சும்மாவா? உள்ளூர்,வெளியூர் மாணவங்க இங்கு படிக்கிறாங்கள்ள.....அதான் இவ்வளவு பெரிய கூட்டம்...!”
“வெளிநாட்டுப் பிளைங்கத்தான் அதிகமா இருக்கிற மாதிரி தெரிதுங்களே.....!”
“ஒரு வகையில நீ சொல்றது உண்மைதான். இருந்தாலும், இன்னைக்கு நம்ம பிள்ளைங்களும் நிறைய பேரு பட்டம் வாங்கப் போறாங்க.....!” புன்முறுவலுடன் மனைவியைப் பார்க்கிறேன்.
“கேட்கவே சந்தோசமா இருக்குங்க....!” மனைவி குதூகலிக்கிறாள்.
“தகுதியான மாணவங்களுக்கு இடம் கொடுக்கிறதால, நம்ம பிள்ளைங்க இங்க அதிகமா படிக்க முடியுது.....!”
“பிள்ள படிப்புக்காக நாம நிறைய செலவு செஞ்சிட்டோம் இல்லங்க...!” கவலையுடன் கூறுகிறாள் மனைவி.
“உள்ளூர் பல்கலைக்கழகமா இருந்திருந்தா.......செலவு அதிகமா ஆயிருக்காது. அனைத்துலகப் பல்கலைக் கழகமா இருந்ததால செலவு கூடித்தான் போச்சி ....!”
“கோட்டா முறை மட்டும் இல்லாம இருந்திருந்தா.....நல்ல பாஸ் பண்ணியிருந்த நம்ப பிள்ளைக்கு நிச்சயமா, உள்ளூர் பல்கலைக்கழகத்தில இடம் கிடைச்சிருக்கும் இல்லைங்களா...?”
“நீயும் நாட்டு நடப்புகள உண்ணிப்பாதான் கவனிக்கிறே....பரவாயில்லையே!”
“சிரமப்பட்டாவது நம்ம பிள்ளைய நல்லா படிக்க வெச்சிட்டோம்....அது போதுங்க....” மனைவியின் கண்கள் சிவக்கின்றன!
“நீ சொல்ற நூற்றுக்கு நூறு உண்ம....! நம்ம பிள்ளையும் சிரத்தையாதான் படிச்சாரு....!” மகிழ்வுடன் மனைவியைப் பார்க்கிறேன்.
குறித்த நேரத்தில், பல்கலைக்கழக வேந்தரின் உரை தொடங்குகிறது. அனைவரும் அவரது உரையை உண்ணிப்பாகக் கேட்கின்றனர். அவரது நீண்ட உரை மாணவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறது. இன்று, வழங்கப்படும் பட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஓர் அங்கிகாரமாகும்.மாணவர்கள் அதனை,தங்களின் முன்னேற்றத்திற்குப் பயன் படுத்துவதுடன், சுய முயற்சியில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறிய கருத்து என்னை மிகவும் கவர்ந்தது. மகனிடம் இது குறித்து பேச வேண்டும் என்று எண்ணுகிறேன்.
வேந்தரின் உரைக்குப் பின்னர் சிறந்த மாணவர் உரை இடம் பெறும் என்ற அறிவிப்பு செய்யப்படுகிறது.அவையோர் அந்த மாணவனின் உரை கேட்க ஆவலுடன் நிமிர்ந்து அமர்கின்றன.
பலத்த கையொலியுடன் மேடையை நோக்கி கம்பீரமுடன் செல்கிறான் அரவின்! மனைவி அதர்ச்சியுடன் மகனை உற்று நோக்குகிறாள்! அவனது ஆங்கில உரையை அவையோர் வியந்து கேட்கின்றனர். மகன் பேசும் அழகை மெய்மறந்து இரசிக்கிறாள் மனைவி! அவள் கண்களில் கண்ணீர் கசிந்த வண்ணமாயிருந்தது! வைத்த கண்களை எடுக்காமல்,மகனின் உரையை செவிமடுக்கிறாள்! நானும் அமைதியுடன் மகனின் உரையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.தமிழ்ப்பள்ளியில் பயின்ற அரவின், ஆங்கில மொழியின் ஆளுமையால், அவையோரைக் கட்டிப்போடுகிறான்! அவனது இலாவகமான உரையைக்கேட்டு நானும் வியந்து போகிறேன். என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது!
அரவின் சமர்பித்த ‘ இயற்கையை நேசிப்போம்’ எனும் தலைப்பில் சமர்பித்த ஆராய்ச்சி கட்டுரை அனைத்துல பரிசினைப் பெற்றதுடன், `பல்கலைக்கழக வேந்தரின்` ‘சிறந்த மாணவர்க்கான’ விருதினையும், ரொக்கம் ரிம. பத்தாயிரம் வேந்தர் வழங்கிய போது, அவையினர் எழுந்து பலத்த கையொலி அரவினுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.சில நிமிடங்கள் கையொலி மண்டபத்தை முற்றிலும் தன் வசப்படுத்துகிறது!
உணர்ச்சியின் உச்சத்தால் மனைவியின் கண்கள் குளமாகிப்போகின்றன! அவள் என் இடது கையை இறுக்கிப்பிடிக்கிறாள்! நான் இதமாக அவளது தோளைத் தட்டிக் கொடுக்கிறேன்.அவள் விழிகளை கைக்குட்டையால் துடைத்துக் கொள்கிறாள்.மண்டபம், சிறிது நேரத்தில் அமைதியானவுடன் மனைவியும் அமைதியடைகிறாள்! தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கண்டு அவள் களிப்புருகிறாள்.
முன்னூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுக் கொள்ளும் அரிய காட்சியைக் கண்டு மனைவின் மகிழ்ச்சி பன்மடங்காகிறது.சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் பட்டமளிப்பு விழா நிறைவடைகிறது. கூட்ட மிகுதியால் நானும் மனைவியும் மண்டபத்தைவிட்டு வெளியேற சற்று நேரமாகிறது!
“வாழ்த்துகள் அரவின்....!” பூங்கொத்துகளுடன் உறவுகளும், நண்பர்களும் நூற்றுக்கணக்கில் அவனைச் சூழ்ந்து கொள்கின்றனர்.புகைப்படங்களும்,செல்பியும் பல்வேறு கோணத்தில் மகனுடன் எடுத்துக்கொள்கின்றனர். நடைபெறும் நடப்புகளை நாங்கள் மகிழ்வுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஒருவழியாக மகனின் பட்டமளிப்பு முடிவுற்று, வீடு திரும்பும் வழியில் உணவகத்தில் மதிய உணவு உண்ணும் போது பிற்பகல் மணி இரண்டு ஆகியிருந்தது!
வீடு திரும்பியதும்,அரவின் கடிதம் ஒன்றை என்னிடம் நீட்டுகிறான்.
“என்ன கடிதம் அரவின்?”
“அப்பாய்ட்மன் ஆடர்பா…..!”
“எப்ப வந்துச்சு....?”
“காலையில ‘குரியர்ல’ வந்துச்சுப்பா....!”
“எங்க வேலை ?”
“பினாங்கில....ஒரு இண்டர்நேசனல் கம்பனி”
“இயற்கையைப் பாதுகாப்பதற்காக ஆய்வுகள் செய்தல்,தேவைப்படும் இடங்களில் மரங்களை நடுதல். ஒரு செக்சனுக்கு நான் பொறுப்பு...”
“அரவின் நீ படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலைதான். வேலையில எப்ப சேரனும்?”
“நாளைக்கே....கிளம்பனும்பா!”
“ஆமாப்பா.....போனவாரம், யூனிவர்சிட்டியிலேயே இண்டவி வைக்கும் போதே சொல்லிட்டாங்க...! பிரபுவும் நானும் ஒரே செக்சன்லதான் வேலை....”
“ம்....பட்டம் வாங்கின மறுநாளே வேலையா…..? எல்லாம் முன்னாடியே பிளான் பண்ணிட்டிங்கனு சொல்லுங்க...?”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்லப்பா...வேலைக்கு மனு செஞ்சோம்.....விரும்பின வேலை கிடைச்சிடுச்சு” தயக்கமுடன் கூறுகிறான் அரவின்.
அரவின் கொடுத்த ‘பணி நியமன’ கடிதத்தை வாசிக்கும் போது எனக்கு பல்வேறு சிந்தனைகள் மனதில் ஓடுகின்றன! தொலைதூரத்தில் வேலைக்குச் செல்வது பற்றி எதனையும் என்னிடம் கலந்து கொள்ளாமல் அரவின் தன்னிச்சையாக முடிவெடுத்தது வருந்தமாக இருந்தது!
மறுநாள் காலை பினாங்கு புறப்படுகிறான் அரவின்.நண்பன் பிரபுவும் உடன் செல்கிறான்.வேலையில் சேர்ந்த புதிதில் அரவின் கைபேசியில் தினம் பல வேளை அம்மாவை அழைத்து பேசும் போதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது.முதல் முறையாக அவன் குடும்பத்தை விட்டுச் சென்ற போது, மனைவி மிகவும் வருந்தினாள்.அறிமுகம் இல்லாத இடத்தில் ஏதும் சிரமங்களை அனுபவிப்பானோ என்ற கவலை அவளுக்கு. ஆனால், அம்மாவுடனான அவனது உற்சாகமான உரையாடல்களை நான் கேட்ட பின்பு,பிரச்னை ஏதும் இருக்காது என்றே நம்பினேன். நண்பன் பிரபு கூடவே இருக்கிறான். எதையும் சமாளிக்கும் திறமை அவனிடம் இருக்காதா என்ன?
திடீரென அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லாமல் சில வாரங்கள் வெறுமனே செல்கின்றன. மனைவி அழைக்கும் போதெல்லாம் அரவின் கைப்பேசி தொடர்ந்து முடக்கிவிடப்பட்டிருந்தது. எனினும், அவ்வப்போது ‘நலம்;வேலையாக உள்ளேன்’ குறுஞ்செய்தி அத்திப்பூத்தார் போல் அம்மாவின் கைப்பேசிக்கு வரும்.அப்போதெல்லாம் மனைவி சற்று ஆறுதல் கொள்வாள்.
இன்னும் சில வாரங்களில் வரப்போகும் தீபாவளிக்கு மகன் வந்துவிடுவானா? என்ற கவலையே மனைவியை வாட்டியெடுத்தது! தீபாவளித்திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவது மனைவிக்கு மிகவும் பிடிக்கும். மகனுக்கு விருப்பமான உடைகளை வாங்கித்தருவாள். வீட்டுக்கு வரும் மகனின் நண்பர்களுக்கு அறுசுவை உணவுகளைச் சமைத்துப்போட்டு மகிழ்விப்பாள்.
“என்னங்க....மகன் தீபாவளிக்குள்ள வந்திடுவானா?”
“நிச்சயமா....அரவின் வந்திடுவான்,நீ வீணா எதற்கும் கவலைப்படாதே...!” என் பேச்சில் மனைவி ஓரளவு ஆறுதல் கொண்டாலும் மகன் தீபாவளிக்கு வந்துவிடுவானா? என்ற கவலை அவள் முகத்தில் தெளிவாகப் பளிச்சிடவே செய்தது!
“என்னங்க...அரவின தொடர்பு கொள்ள முடியல...! அவன் என்னிடம் பேசாம இவ்வளவு நாள் இருந்ததில்ல...! எனக்கு பயமா இருக்குங்க....! அவன பார்த்து மூனு மாசம் ஆயிடுச்சு...!அவனைப் பார்க்காம எனக்கு பைத்தியமே பிடுச்சிடும் போலிருக்குங்க.....!” மனைவியின் கண்கள் அருவியாகின்றன.
“புதிய வேல....ஓய்வு இருக்காது...!”
“அம்மாவோட பேச கொஞ்ச நேரம்கூடவா இல்ல...?”
“அவசரப் படாதே....நம்மகிட்ட பேசாம அரவின் எங்கப்போயிடப் போறான்...?”
“எனக்கு நம்பிக்கை இல்லிங்க...” குரல் தழுதழுக்கிறது!
“என்ன செய்யலாமுனு சொல்லு.....?”ஆறுதலாய்க் கேட்கிறேன்.
“அரவின....நாம நேர்ல போய்ப் பார்த்துட்டு வரலாங்க....!”
“சரி......நாளைக்கே புறப்படுவோம்” என்றவுடன்
மனைவியின் முகத்தில் மகிழ்ச்சி கண் சிமிட்டுகிறது. அதைப் பார்த்து எனது கண்களும் சிமிட்டிக் கொள்கின்றன!
வேலைக்குச் சென்ற மூன்று மாதத்தில் மகனின் போக்கு முற்றாக மாறிவிட்டதைப் பார்த்து எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. எதிலும் பொறுப்புடன் நடந்து கொள்ளும் அரவினுக்கு என்ன நடக்கிறது என்றுகூட தெரியாமல் மனைவியுடன் சேர்ந்து நானும் தவிக்கிறேன்....!
மனைவி மீண்டும் பேசுகிறாள்.
“வெளியிலே போய் வேலை செய்ய அரவின அனுப்பியிருக்கவே கூடாதுங்க” மகன் மீது ஏற்பட்ட ஆத்திரம் வார்த்தையில் தெரிந்தது...!
“நாம....எங்க அவன வெளியில போயி வேலை செய்யச் சொன்னோம்? படிப்பு முடிஞ்ச கையோட பேசி வெச்ச மாதிரி...அவன் விருப்பப்படி மறுநாளே வேலைக்குக் கிளம்பிட்டானே! இண்டர்விக்குப் போன விசியத்தக்கூட நம்மகிட்ட மறைச்சுட்டானே....!”
இறுக்கமாகிப்போன என் முகத்தை மனைவி கலவரத்துடன் பார்க்கப் பரிதாபமாக இருந்தது! என்னை அமைதிப்படுத்திக்கொண்டு வாஞ்சையுடன் மனைவியை அணைத்துக் கொள்கிறேன். மனைவி முகம் மலர்கிறாள்!
அப்போது வாசலில் ‘கிரேப்’ கார் ஒன்று வேகமாக வந்து நிற்கிறது! ஒன்றும் புரியாமல் நாங்கள் இருவரும் காரைப் பார்க்கிறோம். காரிலிருந்து அரவினும் பிரபுவும் இறங்குகின்றனர். பேக்குகளுடன் வீட்டை நோக்கி வரும் அவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறோம்.மூன்று மாதங்களுக்குப் பிறகு மகனை நேரில் கண்ட மனைவி, “அரவின்....” என்று அழைத்தவாறு ஓடிச்சென்று மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள்!
“வாங்கப்பா....” இருவரையும் அழைக்கிறேன். “அப்பா…எப்படி இருக்கிங்க...?” அரவின் ஆவலுடன் கேட்கிறான், “நான் நல்லா இருக்கேன். என்ன ஆச்சு அரவின்? பல நாளா....வீட்டுக்கு ஒரு போன்கூட பண்ணாம இப்படி திடீர்னு இருவரும் வந்து நிக்கிறீங்க?”
“ செப்ரைஸ்சா இருக்கட்டுமேனுதான்....உடனே கிளம்பி வந்துட்டோம்பா...!”
“ஆமா அங்கிள்..... லீவு கிடைச்சதும் உடனே புறப்பட்டுட்டோம்” மகிழ்ச்சியுடன் கூறுகிறான் பிரபு.
“என்ன....லீவா? என்ன சொல்ற பிரபு....?” ஆவலுடன்கேட்கிறேன்
“பிரபு...சொல்றது உண்மைதாம்பா”
“அரவின்..... நீ என்னப்பா சொல்ற?”
“என்னங்க.....மூனு மாசம் கழிச்சி வீட்டுக்கு ஆவலோடு வந்திருக்கிற பிள்ளைங்கள வாசல்ல நிக்கவச்சிப் பேசிக்கிட்டு...! வீட்டுக்குள்ள வந்து உக்காந்து பேசுங்க...!”
“ இல்லம்மா நான் வந்த ‘கிரேப்’லயே வீட்டுக்குப் புறப்படுறேன்....”
“ராத்திரி பூரா...ரயில் பிரயாணம்...ஒரு கிளாஸ் தண்ணி குடுச்சிட்டுப்போப்பா...!”
“நான்...வர்ர விசியம் அம்மாவுக்குக்கூட தெரியாது... நாளைக்கு வர்ரம்மா!” பதிலுக்குக் கூட காத்திராமல் கிரேப்பில் ஏறி மின்னலாய்ப் பறக்கிறான் பிரபு!
போன உயிர் மீண்டது போல் அரவின் கையைப் பிடுத்திக் கொண்டு மூன்று மாதங்கள் பேசாமலிருந்து மகனிடம் மனைவி மூச்சுவிடாமல் பேசிக்கொண்டிருக்கிறாள்! அருகில் அமர்ந்த அவர்கள் பேசுவதை நான் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
“அரவின்......இடையில எங்களோடு தொடர்பு கொள்ளவே இல்லையே....ஏம்பா?” ஆவலுடன் கேட்கிறாள் மனைவி.
“வேலை சம்பந்தமான ஆய்வுக்காக பல நாளு காட்டில் தங்க வேண்டியதாகிடுச்சும்மா....! அதான் தொடர்பு கொள்ள முடியாம போயிடுச்சு...!” மனைவி அரவின் பதிலில் திருப்பி கொண்டவள் போல் அமைதி காக்கிறாள்.
“அரவின்....வேலைக்கு திரும்ப எப்ப போகனும்…..? தீபாவளிக்கு வீட்டுல இருப்பல்ல...?” மனைவியின் கேள்வியில் மகன் தினறிப்போகிறான்...!
எங்களிருவரையும் அரவின் புன்னகையுடன் பார்க்கிறான்! ஒன்றும் விளங்காமல் மனைவி என்னைப் பார்க்கிறாள்...! எனக்கும் ஒன்றும் விளங்காமல் மகனைப் பார்க்கிறேன்...!
“நான் வேலை பார்க்கும் நிறுவனத்தோட கிளை நிறுவனம் நம்ம உள்ளூர்ல இருக்கு. இனி அந்த நிறவனத்தில் நிர்வாகியாக நான் வேலை செய்யப்போறேன்மா...!”
“உண்மையா அரவின்....?” ஆச்சரியத்தில் மனைவி!
“உண்மைதாம்மா......!” மனைவி துள்ளிக்குதிக்கிறாள்!
இப்போது, மனைவியின் முகத்தில் தீபவொளி மின்னலாய்ப் பளிச்கிடுறது.....!

..............முற்றிற்று...........

எழுதியவர் : வே.ம.அருச்சுணன் (24-Nov-19, 9:23 am)
சேர்த்தது : வேமஅருச்சுணன்
பார்வை : 650

மேலே