தாமுந் தலைவணங்கித் தாழப் பெறின் - நீதிநெறி விளக்கம் 16

இன்னிசை வெண்பா

கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு
செல்வமுஞ் செல்வ மெனப்படும் - இல்லார்
குறையிரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமுந்
தலைவணங்கித் தாழப் பெறின். 16

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

கல்வியும் செல்வமும் இல்லாதவர்கள் அவ்விரண்டையும் வேண்டி அவ்விரண்டுடைய தமக்கு முன்னால் நிற்பதுபோல, தாங்களும் தலையால் வணங்கித் தாழ்ந்து நிற்கப் பெற்றால் தாங்கள் பெற்ற கல்விச்செல்வம், பொருட்செல்வம் என்னும் இரண்டு செல்வங்களும் உண்மைச் செல்வங்களென்று உயர்ந்தோராற் பாராட்டப்படும்.

விளக்கம்:

உடைமை - செல்வம் கல்வியுடைமை என்பது கல்வியாகிய உடைமை எனப் பொருளாம்.

செல்வத்தாற் கல்வியும் கல்வியாற் செல்வமும் ஒன்றுக்கொன்று துணையாய் நின்று ஓங்கிப் பொலியுமாதலின், இவ்விரண்டும் ஒருவற்கு வேண்டற்பாலனவாம் என்பது கருத்து.

பொருளுடைமையால் விளையுஞ் செருக்கெழுச்சியைக் கல்வியுடைமை தாழச் செய்யுமாதலின், `தாழப்பெறின்’ என்றார்.

பொருட்செல்வத்தை உண்மைப் பொருட் செல்வமாக்குவது கல்வியுடைமை யாதலால் அதனை முற்கூறினார்.

அன்றியும், இல்லையென்று வருவாரை இன்சொன் மொழிந்து தாழ்ந்து எதிரழைப்பது முன்னும், பொருள் தருவது பின்னுமால் நிகழ்தலாய், அம்முறையே தாழ்மை பயக்குங் கல்வியுடைமை, ஈகை பயக்குஞ் செல்வமுடைமைக்கு முன்னின்றது என்றலுமாம்.

இங்ஙனம் ஈகைப் பயன்களைப் பெற்ற பொழுதே கல்வியுடைமையும் செல்வமுடைமையும் உண்மைச் செல்வங்களெனப்படும் என்றதற்குச் `செல்வமுஞ் செல்வமெனப்படும், எனப்பட்டது.

“அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்,
பூரியார் கண்ணும் உள”

என்னுந் திருவள்ளுவர் கருத்தும் இது.

தாழ்தலையுடையவர் கொடையுடையராய் இருப்பவராதலால், தாழப்பெறின் என்பதனோடு நின்றது தலைவணங்கித் தாழப்பெறின் என்றார்.

கல்வியுடைமை செல்வமுடைமை என்னும் இரண்டாலும் விளைவதாம் செருக்கை அவ்வப்போது அடக்கிக்கொண்டே வரல் வேண்டுமென்பதற்கு, “பெறின்” என்றார்,

தாழ்தலின் அருமையும் பெருமையுந் தோன்ற, “கீழோ ராயினுந் தாழவுரை”* என்னும் முதுமொழி இங்குக் கருதுதற்குரியது.

இனிக் கல்வியுஞ் செல்வமும் தனித்தனி உடையார்க்கும் இச் செய்யுட் கருத்துப் பொருந்தும்.

கருத்து:

கல்வியும் செல்வமும் உடையார்க்கு அழகாவது அவையில்லாதாரிடத்துந் தாழ்மையோடு இருத்தலாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-19, 3:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 98

மேலே