தம்மினுங் கற்றாரை நோக்கிக் கருத்தழிக எற்றே இவர்க்குநாம் - நீதிநெறி விளக்கம் 15

நேரிசை வெண்பா

தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென்(று) அகமகிழ்க - தம்மினுங்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக; கற்றதெல்லாம்
எற்றே இவர்க்குநாம் என்று. 15

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

தம்மை விடச் செல்வத்திற் குறைந்திருப்பாரைப் பார்த்து தாம் பெற்ற செல்வப் பொருள் அம்மா! மிகுதியாகும் என்று உள்ளம் மகிழ்ந்து கொள்க:

ஆனால், தம்மைவிட மிகுதியாகப் படித்திருப்பவர்களைப் பார்த்து நாம் படித்த படிப்பெல்லாம் இவர் படிப்புக்கு எந்த அளவின் தன்மையது என்று வருந்திச் செருக்குக் கருத்தை விட்டுவிடுக.

விளக்கம்:

செல்வத்துக்குப் பெயராக வரும் உடைமை என்பதைக் கூறினார்,

செல்வ நிலையிலும் இங்ஙனமே தம்மின் மெலியாரைக் கண்டு அகம் மகிழ்தற்கும், பெரியாரைக் கண்டு கருத்தழிதற்கும் ‘அகம் மகிழ்க’ என்றார்,

தம் மகிழ்ச்சியைப் புறத்திற் காட்டலாகாது என்றற்கு, அழிக என்றார். கல்விச் செருக்கின்பால் சான்றோர்களுக்கு உள்ள வெறுப்பைத் தேற்றுதற்கு,

உடைமை - செல்வம், இச்செய்யுள், உள்ளக் கருத்தை நோக்கியதாதலால், உடைமை என்பதைப் பண்புப் பெயராகக் கொண்டு உடையராந் தன்மை என்று பொருள் செய்தலும் ஒன்று.

கருத்து:

செருக்கும் வருத்தமும் இல்லாமல் மேன்மேலும் கற்றலிலே கருத்தூன்றி நிற்றல் வேண்டும்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-19, 2:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 99

மேலே