நயமுடைய நாவுடையார் பெருமைக்கு இடமாய் மிளிர்வர் - விநயம், தருமதீபிகை 542

நேரிசை வெண்பா

நல்ல நயமுடைய நாவுடையார் பூவுலகில்
எல்லா நலமும் எளிதெய்திச் - சொல்லும்
பெருமைக்(கு) இடமாய்ப் பெருகி மிளிர்வர்
இருமைக்(கு) இனமாய் இவண். 542

- விநயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நாவில் நலமுடையவர் பூவுலகில் எல்லா நலங்களையும் எளிதின் எய்தி இருமையும் பெருமையாய் இசை மிகுந்து வாழ்வர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

சொல்லின் நலனை முன்னம் அறிந்தோம்; அங்ஙனம் சொல்லாடவுரிய நாவின் நிலையை இப்பாடலில் அறிய வருகிறோம்.

மனிதனுக்கு வாய்த்துள்ள உபகரணங்களுள் நாவின் நயம் யாவினும் உயர்ந்தது. அதனாலேதான் வாழ்வு முழுதும் நடந்து வருகிறது. அஃது இல்லையானால் ஊமை வாழ்வாய் எல்லாம் ஊனமடைந்து போகும்.

’நல்ல நயம் உடைய நாவுடையார்’ என்றது நாக்கின் பயனை நோக்கி உணர வந்தது.

தனக்கு வேண்டிய நலங்களை எல்லாம் சொல்லால் மனிதன் வாங்கிக் கொள்ளுகிறான். தன் வாழ்வை ஆக்கி வருகிற நாவை நல்ல நயமுடையதாக ஒருவன் ஆக்கிக் கொள்வானாயின் எல்லா ஆக்கங்களையும் ஒருங்கே பெற்ற பெரிய பாக்கியவானாகின்றான்.

நேரிசை வெண்பா

நாவின் நுனியில் நயமிருக்கின் பூமாதும்
நாவினிய நல்லோரும் நண்ணுவார் - நாவிநுனி
ஆங்க டினமாகில் அத்திருவும் சேராள்முன்
ஆங்கே வரும்மரண மாம். 17 நீதி வெண்பா

நாக்கு நுனியில் இனியசொல் இருந்தால் அரிய செல்வமும் பெரியோர் நட்பும் எளிதே கிடைக்கும்; அது கடினமானால் வறுமையும், மரணமும் வரும் என இது உணர்த்தியுள்ளது.

’ஆக்கமும் கேடும் அதனால் வரும்’ எனச் சொல்லைக் குறித்து வள்ளுவர் சொல்லியுள்ளதும் இங்கே உள்ளியுணரவுரியது. வாய்க்கு வந்தபடி வீணே பேசலாகாது. எவ்வழியும் எச்சரிக்கையோடு செவ்வையாக அளந்து பேச வேண்டும். ’நாவை அடக்கினவன் யாவையும் அடக்கினான்’ என்னும் முதுமொழியால் நாவடக்கத்தின் தன்மை புலனாகும்.

புறங்கூறல், பொய் சொல்லல், பிறரை இகழ்ந்து பேசுதல் என்னும் இவை நாக்கை நீசப்படுத்தி விடுமாதலால் அந்த நீசங்களை யாதும் பேசலாகாது. இனிய நாவைப் புனிதமாகப் போற்றி வருகிறவன் மனிதருள் மகான் ஆகிறான்.

தன்னை உடையானுக்குப் புகழையும் புண்ணியத்தையும் எந்த நா ஈட்டிக் கொடுக்கிறதோ அதுவே நல்ல நா; நயமுடைய நா ஆகும். எவ்வழியும் யாதும் பிழை நேராதபடி பேசி வருகிறவன் தேசு மிகப் பெறுகிறான்.

பிறருடைய குற்றங்களைக் குறித்துப் பேசாமல் இருப்பதே உயர்ந்த பெருந்தகைமைக்குச் சிறந்த அடையாளமாம்.

கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. 984 சான்றாண்மை

இது எவ்வளவு பெரிய தரும மந்திரம்! தங்கள் நாக்கைச் சோதனை செய்து காண்பவர் இந்த வாக்கியத்தின் போதனையை உணர்ந்து சாதனையைத் தெளிந்து கொள்ளுவர். பிழைத்து வந்த பிழைகளை நினைந்து உள்ளமும் நாணுவர். அரிய சால்புக்கு உரிய உரைகல் இனிய உரையே என்பது தெரிய வந்தது.

பிறர் பிழை பேசாதிருப்பதே தங்கள் குல விரதமாகச் சான்றோர் பேணி வருவர் என்றதனால் அவரது காட்சியும் மாட்சியும் காண வந்தன. புனித வாயினர் புண்ணியராயினர்.

உண்மையான பெரிய மனிதனுடைய வாய் புன்மையான மொழிகளைப் பேசாது, யாண்டும் நன்மையே பேசி வரும்; எல்லா மேன்மைகளும் அவனிடம் உறவுரிமைகளாய் வந்து சேருகின்றன. தன்னுடைய நாக்கு நயமுடையதாயின் அந்த மனிதன் சிறந்த பெருந்தகையாளனாய் உயர்ந்த பயன்களை ஒருங்கே அடைந்து கொள்ளுகிறான்.

தன்னை வழிபட்டு வந்த அன்பனுக்கு ஒரு பெரியவர் முடிவில் ஓர் உபதேசம் செய்தார். அவை அயலே வருகின்றன.

நாவைப் போல் இரு; பூவைப் போல் இரு; ஆவைப் போல் இரு.

என இவ்வாறு அவர் போதித்தருளினார். இந்தப் போதனைகளின் உண்மை நிலைகளை உணர்ந்து ஒழுகி அவன் நன்மைகள் பல அடைந்தான்.

வலிய பற்களிடையே இருந்து கொண்டு அவை நன்றாக உழைத்து மென்று தர அதி சாதுரியமாய் நா உண்டு வருகிறது; அதுபோல் கொடியவர்கள் நடுவே இருந்தாலும் அவரால் யாதொரு இடையூறும் நேராமல் எல்லா இத நலங்களையும் அடைந்து வாழுக என்பார் ’நாவைப் போல் இரு’ என்றார்.

நேரிசை வெண்பா

பகைசேரும் எண்ணான்கு பல்கொண்டே நல்நா
வகைசேர் சுவைஅருந்து மாபோல் - தொகைசேர்
பகைவரிடம் மெய்யன்பு பாவித்(து) அவரால்
சுகமுறுதல் நல்லோர் தொழில். 5 நீதிவெண்பா

உலக வாழ்வு பலவகை அல்லல்கள் உடையது; பொறாமை, குரோதம், கோபம், பகைமை முதலிய கொடுமைகள் நிறைந்தது. இந்தத் தீமைகள் இடையே மனிதன் சுகமாய் வாழ்ந்து வருவது அரிது. அந்த அரிய நிலையில் நின்று அதி விநயமாய் மனிதன் குடி வாழ்க்கை நடத்தி வரும் படிப்பினையை இப்பாட்டு அழகாக எடுத்துக் காட்டியுள்ளது.

ஒரு கடியில் துணித்து எறிய வல்ல பற்கள் முப்பத்திரண்டுக்கும் இடையே மெல்லிய நா ஒன்று மேவியிருந்து நல்ல வகையாய் வாழ்ந்து வருதல் போல், கொடியவர்கள் புடை சூழ்ந்திருப்பினும் மதி நலமுடையவன் இத நலங்களை அடைந்து இனிது வாழ்ந்து வருகிறான்.

விநயமுடையவன் எவ்வழியும் இடரின்றி யாவரிடையும் இதமுடன் ஒழுகி வருதற்கு ’நயமுடைய நா’ ஈண்டு உவமையாய் வந்தது. நாவில் நல்லவர் பூவில் வல்லவர் ஆகிறார்.

இவ்வகையில் வாழ்ந்து வருகிற நாக்குக்கும் பற்களுக்கும் ஒரு முறை வாக்கு வாதம் நேர்ந்தது: "நாவே! நீ மிகவும் சமர்த்தி; உனது சாதுரிய சாகசங்கள் அதிசயமுடையன; அழகிய பருவமங்கை ஆண் மக்களை வசப்படுத்தி உலகில் மயக்கி வருதல் போல் நீ எங்களை இங்கே ஏமாற்றி வேலை வாங்கி இனிமையாய் உண்டு வருகிறாய்; ’ஜிஹ்வா’ என்று வட மொழியில் உன்னைப் பெண்பாலாக அழைத்து வருவது எங்களுக்கு நீ இழைத்து வருகிற மாயா சாலங்களை எண்ணியேயாம்;

பெண் என்ற மயக்கில் நாங்கள் உனக்கு உழைத்து வருகிறோம்; இதற்கு எப்பொழுதாவது எங்களுக்கு நீ நன்றி பாராட்டியது உண்டா?’ என்று இப்படிப் பற்கள் கேட்டன. இங்ஙனம் அவை துள்ளிக் கேட்கவே நாக்கு உடனே பதில் சொல்ல நேர்ந்தது.

நாக்கின் பதில்: 'பல் வீரர்களே! நீங்கள் இன்று சொல் வீரர்களாகவும் தொடங்கினீர்கள். நான் ஒரு பேதை, நீவிர் எது செய்தாலும் பொறுத்துக் கொண்டே யிருக்கிறேன், பொறுமை எங்கள் மரபின் உரிமை. சில சமயம் நீங்கள் என்னைக் கடித்திருக்கிறீர்கள், கொடிய வேதனையான அதனையும் சகித்துள்ளேன். நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றது நகைப்பாய் வருகிறது; என்னாலேதான் நீங்கள் நிலை குலையாமல் நிலைத்து வாழுகிறீர்கள்;

ஒரு துட்டனை நோக்கித் துடுக்காக நான் ஒரு சொல்லைச் சொன்னால் உங்கள் கதி என்னாகும்? பொல்லாத சொல் ஒன்றால் பூண்டிருந்த என்னுடைய பல் எல்லாம் அந்தோ பறி போச்சே என்று பண்டு ஒருவன் பரிதபித்ததை நீவிர் கண்டறியீரோ? அறிந்தீராயின் எனக்கு நன்றி பாராட்டுவீர்” என இங்ஙனம் நா உரைத்தது. அதனைக் கேட்டதும் பற்கள் நாணி அடங்கின. பாட்டு அயலே வருகிறது.

நேரிசை வெண்பா

மெல்லியலின் நாவேநாம் மென்றுதர உண்டுவந்து
நல்லியல்பாய் வாழ்கின்றாய் நன்றியுண்டோ? - பல்லியலீர்
என்னாலே நீவிர் இனிதாக வாழ்கின்றீர்;
சொன்னால் அழிவீர் தொடர்ந்து.

பல்லும் நாவும் சொல்லாடியுள்ள இதில் நாவின் நீர்மை நன்கு புலனாயது. நா நயமுடையதாயின் மனிதன் துயரிலனாய் உயர் நலமடைகிறான்

எளிய புல்லும் நீரும் அருந்தி இனிய பாலை பசு அருளுகிறது. மெல்லிய நீர்மையும், மனமும் பொருந்தி எல்லாரும் மகிழ்ந்து கொள்ளப் பூ அமைந்துள்ளது. நாவும், பூவும், ஆவும் போல் மனிதன் விநயமும் நயமும் பயனும் படிந்து வாழ வேண்டும்.

அமைதியும் அடக்கமும் அறிவின் சாரங்களாய் மருவியுள்ளன; இனிய ஆன்ம நீர்மைகள் அரிய ஆனந்த நிலையங்களாய்ப் பெருகி ஒளிர்கின்றன. சீவ அமுதங்களைத் தோய்ந்து யாவரிடமும் இதமாய் ஒழுகித் திவ்விய நிலைகளை எய்துக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-19, 7:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 62

சிறந்த கட்டுரைகள்

மேலே