வேளாண்மையே வாழ்வின் மேலாண்மை

கவிதை - இயற்கை - வேளாண்மை.
"வேளாண்மையே வாழ்வின் மேலாண்மை!!"
என்நிலத்தில் வேளாண்மை செய்யும போது - இயற்கை,
அன்னைமடி தன்னில்பயிர் செய்கின் றேனே!
அந்நிலத்தில் வான்மழையும் பெய்யும் போது - விதைகள்,
அத்தனையும் வானோக்கி எழுகின் றனவே!
தினந்தோறும் வளர்பயிர்கள் அசையும் போது - என்றன்,
திருமகளே அசைவதைநான் காண்கின்றேனே!
என்களத்தில் பயிர்மணிகள் குவியும் போது - மண்ணின்,
இருக்கின்ற உயிரெல்லாம் உண்ணும் தானே?
நானும்என் வீட்டாரும் உண்ணும் போது - இயற்கை,
நாயகியின் அமுதத்தை உண்கின்றோமே!
நான்வளர்க்கும் ஆவினமும் காக்கை குருவி - எங்கள்,
நாய்பூனை கோழியினம் யாவும் உண்ணும்!
நான்வாழும் ஊருண்ணும் நாடும் உண்ணும் - இயற்கை,
நாயகியின் அமுதத்தை யாவும் உண்ணும்!
வேறெந்த்த் தொழிலும்தான் விடுக்கும் கழிவால் - மண்ணை,
விரிகாற்றை நீர்நிலையை நாளும் கெடுக்கும்!
விவசாயம் தன்பயிரால் விரியும் மரத்தால் - கெட்ட,
விஷமெல்லாம் தானுண்டு உணவைக் கொடுக்கும்!
நகரங்கள் விரிப்பதெல்லாம் நச்சுப் போர்வை - நீக்க,
நாங்களிங்கே விரிக்கின்றோம் பச்சைப் போர்வை!
வேளாண்மை செய்பவர்கள் மண்ணின் காவல் - அவர்கள்,
விதைக்கின்ற பயிரெல்லாம் மக்கள் காவல்!
விரிந்துயரும் மரமெல்லாம் மழையின் தோழர் - அவற்றை,
புரிந்துறவாய்க் காப்பதனால் உழவர் தேவர்!
மேலாண்மை எத்தொழிலும் இல்லை இல்லை - மண்ணில்,
வேளாண்மை ஒன்றேதான் வாழ்வின் மேன்மை!
செல்வப் ப்ரியா - சந்திர மௌலீஸ்வரன் - ம்கி - (சித்திரைச் சந்திரன்).