இயற்கை வளம்
நீரின்றி வாடும் நிலைமா றிடவேநீ
வேரூன்று தற்கிடு வித்து.1
*
வித்து முளைத்து விருட்ச மெனவாக
நித்த மதற்கூற்று நீர்.2
*
நீருறுஞ்சும் வித்து நிழல்தரு மஞ்சாதே
சீரோடு நோக்கிச் சிற.3
*
சிறப்பாம் மரம்வளர்த்தல். சிந்தனை செய்வாய்
வறட்சிக் கினியில்லை வாய்ப்பு.4
*
வாய்த்திடும் வாய்ப்பை வழுக்கிட வைத்ததை
ஏய்ப்பது வாழ்வில் இழுக்கு.5
*
இழுக்கின் இழுப்பிற் கிசையா திருப்பின்
அழுக்கற்றக் காற்றுன்று காண்.6
*
காண்தகக் கானகம் கண்வழி காண்கிற
மாண்புகள் கொண்டு மயங்கு.7
*
மயக்கும் இயற்கை மரங்கொடிப் பூக்க
வியப்பிற் குரியது வேண்டு.8
*
வேண்டும் வரங்கள் விரும்பிப் தவமிருக்க
வேண்டும் மரத்தின் நிழல்.9
*
நிழலெனும் யாசகம் நித்தம் நமக்காய்
அழகாய் வழங்கும் மரம்.10