தீராக்காதல்

என்னை அவனுக்கு பிடித்திருக்கிறது
அவனையும் எனக்கு பிடித்திருக்கிறது
இருந்தாலும் ஒரு
நுட்பமான இடைவெளி தேவை
எனும்போது வெட்கம்
பிடிவாதமாய் மௌனிக்க மறுத்து
மந்தாரமாய் புன்னகைக்கிறது!

மழைக்குமுன் மழைக்குப்பின்
என பிரித்துப்பார்க்க முடியாத
உறவின் கதகதப்பை
அவனின் அழுத்தமான பிடியில்
உணரத்தொடங்கியவேளை
இதயத்துடிப்பை அறிய முற்பட்டேன்
நெஞ்சில் முகம் புதைத்து
காதல் மௌனமாய்
உரையாடடுமேயென்று!

ஒரு கேள்விக்கும் பதிலுக்குமான
உரையாடலை கண்கள்
நீட்டித்துக்கொண்டிருக்க
இரு வெள்ளைப்புறாக்களின்
கேவல்கள் இடைவிடாமல்
சிணுங்கிக்கொண்டிருக்க இனியும்
தாமதிக்காது ஒவ்வொரு
இழையாக கோர்த்து கோர்த்து
நெய்யத்தொடங்கினேன் தீராக்காதலை
பகலையும் இரவென! பகலையும் இரவென!

எழுதியவர் : மேகலை (1-Dec-19, 9:01 pm)
பார்வை : 407

மேலே